ஆகையால் ‘ஒழியணும்’ என்ற கோஷம் உள்ள மட்டும் ஒன்றும் வாஸ்தவத்தில் சரியாகாது. தமிழ்ப் பண்பாட்டையும், திருவள்ளுவர் முதலானவர்கள் அன்பையும் அருளையுமே போற்றிச் சொன்னதையும் ஒரு பக்கம் ஓயாமல் சொல்லிக் கொண்டே, இப்படி ‘ஒழிக’ கோஷம் போடுவதும், தெருவெல்லாம் எழுதி வைப்பதும் நம் தமிழ் தேசத்துக்குக் கொஞ்சம் கூட ஏற்றதல்லவே என்று என் மனஸுக்கு ரொம்பவும் கிலேசமாக இருக்கிறது. ‘ஒழியணும்’ என்பதை விட்டு ‘வளரணும்’ என்று ஆரம்பித்தோமானால் அத்தனை பேதமும், த்வேஷமும், சண்டையும் போய்விடும். ‘ஜாதி ஒழியணும்’ என்பதற்குப் பதில் இனிமேல் பழையபடி ‘பக்தி வளரணும்’; ‘கோயில் வளரணும்’ என்று ஆரம்பித்து அதற்கானதை ஸகல ஜனங்களும் சேர்ந்து பண்ணினால் ஆதி காலத்திலிருந்து இந்த தேசத்தை ஒரு குடும்பமாகப் பின்னி வைத்து வந்திருக்கிற ஈச்வர பக்தி இப்போதும் நம்மை ஒன்றாக்கிக் காப்பாற்றும். பக்தி வந்து விட்டால், ஜாதி த்வேஷம் போயே போய்விடும். இத்தனை காலமாக இப்படித்தான் இருந்தது. ஜாதி இருந்தது. ஆனால் அதனால் த்வேஷம் இல்லாமலே இருந்தது. ‘ஜாதியில் தப்பில்லை; அதனால் த்வேஷமிருப்பதுதான் தப்பு’ என்பதைப் புரிந்து கொள்ளாமல், எலி இருக்கிறது என்பதற்காக வீட்டையே கொளுத்தினமாதிரி இப்போது ஜாதியையே எடுத்துவிட வேண்டும் என்று ஆரம்பித்ததில் பழைய நல்ல தொழில் பிரிவினையும், திருப்தியும், சாந்தமும், அடக்கமும், ஸமூஹ ஸெளஜன்யமும் பாழானது தவிர, த்வேஷம் நன்றாகக் கப்பும் கிளையுமாக வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இப்போதாவது விழித்துக் கொண்டு ‘அழியணும்’ என்கிற எண்ணத்தை விட்டுவிட்டு, ‘பக்தி வளரணும்’, ‘சகலரும் ஒன்று சேர்ந்து பண்ணுகிற சமூகத் தொண்டுகள் வளரணும்’ என்று முயற்சி செய்ய ஆரம்பித்தால், ஜாதி த்வேஷம் என்பதை ignore [அலக்ஷ்யம்] பண்ணினதாகிவிடும். அதை ரொம்பவும் லக்ஷ்யம் பண்ணி, எதிர்ப்புச் சண்டை போட்டால்தான் அதுவும் பதிலுக்குப் பதில் ஜாஸ்தி வீரியம் அடைகிறது! இப்படிச் செய்யாமல் மற்ற நல்ல விஷயங்களிலேயே கவனத்தைச் செலுத்தி அதை ignore செய்தோமானால், தானே இருந்த இடம் தெரியாமல் போய்விடும். ‘மருந்து சாப்பிடுகிறபோது குரங்கை நினைத்துக் கொள்ளாதே’ என்றால் தப்பாமல் அந்தக் குரங்கு நினைவுதான் ஒவ்வொரு தரமும் மருந்தை எடுக்கிற போது வரும் என்கிற மாதிரி, “ஜாதி ஜாதி என்று த்வேஷம் கூடாது” என்று சொல்கிற போதே ஜாதியினால் உயர்வு தாழ்வு உணர்ச்சியையும் ஞாபகப்படுத்திக் கொண்டேதான் போகிறோம்!
அதனால் ஸகல ஜாதியாரும் சேர்ந்து கோயில் திருப்பணி, அல்லது தூர்ந்த ஏரியில் மண் வாருவது என்கிற மாதிரியான பெரிய காரியங்களை எடுத்துக் கொண்டு, ஓயாமல் பொதுத் தொண்டுகளில் ஈடுபட்டிருந்தால் தன்னால் அன்பும் ஸமூஹ ஸெளஜன்யமும் ஏற்பட்டுவிடும். இப்போது காரியம் இல்லாமிருப்பதால்தான் எதையாவது நினைத்துக் கொண்டிருக்கத் தோன்றுகிறது. இதிலிருந்துதான் விதண்டாவாதம், வம்பு, தும்பு, ‘ஒழிக’ சண்டை எல்லாம் உண்டாகின்றன. ‘ஒரு சண்டை பூசல்’ என்று கிளப்பி விட்டால்தான் ஸ்வாரஸ்யமாயிருக்கிறது. கிளர்ச்சி ஆர்ப்பாட்டம், புரட்சி என்று கிளப்பிவிட்டால்தான் தங்களைச் சுற்றி ‘ஜே’ போடப் பத்துப் பேர் சேர்கிறார்கள் என்பதால் இம்மாதிரி செய்கிறார்கள். இதற்கெல்லாம் பொழுதேயில்லாதபடி காரியங்களில் ஈடுபட்டிருந்தால் எல்லாம் சரியாகி சாந்தமாகிவிடும். தொண்டைத் தண்ணீர் வற்ற ‘ஒழிக’ கூச்சல் போட்டுக் கொண்டு, கால் வலிக்க ஊர்வலம் வருவதற்குப் பதில் இந்த man-power-ஐ [மனித சக்தியை] ஏதாவது ஆக்கரீதியான திசையில் திருப்பி விட்டால் எத்தனையோ வளர்ச்சி ஏற்படும். எல்லாவற்றையும் விடப் பெரிய வளர்ச்சி ஸமஸ்த ஜனங்களிடையும் உண்டாகிற அன்புதான். அநுஷ்டானங்கள் பண்ணுவது, கோவிலுக்குப் போவது, உபந்நியாஸத்துக்குப் போவது. லீவு நாளானால் ஸகல ஜாதியாரும் சேர்ந்து நாள் முழுக்க தெய்வப்பணி, ஸமூஹப் பணி செய்வது என்று ‘டைட்’டாக டைம் டேபிள் போட்டுக் கொண்டு பண்ண ஆரம்பித்துவிட்டால் இந்த ‘ஒழிக’, ‘வீழ்க’ வுக்கெல்லாம் அவகாசமேயில்லாமல் எல்லாரும் வளர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
ஜாதியில் உயர்வு-தாழ்வு நிச்சயமாக இல்லை. மகான்கள் – அப்பர், நம்மாழ்வார், சேக்கிழார், நந்தனார், கண்ணப்பர் மாதிரியானவர்கள் – எந்த ஜாதியிலும்தான் தோன்றியிருக்கிறார்கள். ஆசார்யாளே கண்ணப்பரை [‘சிவானந்த லஹரி’] யில் ஸ்தோத்திரம் பண்ணியிருக்கிறார். எவனொருவனும் தான் இன்னொருவனைக் காட்டிலும் உசந்தவன் என்று நினைக்கிறதே பாபம் என்று சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. மஹான்களும் இப்படித்தான் நமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள். “நாயினும் கடையேன்”, ‘நாயடியேன்’ என்றெல்லாந்தான் அவர்கள் தங்களைச் சொல்லிக் கொள்கிறார்கள். இந்த மனப்பான்மை சுதந்திர யுகத்தில் போய்விட்டதுதான் கோளாறு. பழைய அடக்க மனோபாவம் நமக்கு வரவேண்டும். வந்து விட்டால் காரியத்தில் ஜாதி இருக்குமே தவிர, மனஸில் எள்ளளவும் பேதம் இராது. வாழ்க்கை முறையிலும் பொருளாதார ரீதியிலும் பேதம் இல்லாமல் எல்லாரும் எளிமையாக இருந்து விட்டால் கொஞ்சம் கூடப் பொறாமை, வயிற்றெரிச்சல் இருப்பதற்கு இடமில்லாமல் போகும்.
அந்த மாதிரி நிலையை உடனே ஏற்படுத்துவதற்கான தைரியமும், தியாக புத்தியும் நமக்கு இருந்தாலும் இல்லா விட்டாலும், அப்படிப்பட்ட ஒரு ideal- ஐயாவது [லக்ஷ்ய நிலையையாவது] நாம் புரிந்து கொண்டால், கொஞ்சம் கொஞ்சமாக வழி திறக்க இடமுண்டாகும். இதற்குப் பராசக்தி அநுக்ரஹம் செய்ய வேண்டும்.