முதலுக்கு முதல்; முடிவுக்கு முடிவு : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

இந்த ராமேச்வரம் ஸ்ரீ சங்கர மண்டபத்தில்* மத்யமான ஸ்தம்பத்தின் உச்சியில் நடுநாயகமாக ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் எழுந்தருளியிருக்கிறார். பின்னால் இருக்கிற நூல் நிலையம் வெறும் ஹாலாக இல்லாமல் ஸரஸ்வதிதேவியைப் பிரதிஷ்டை செய்ததால் ஸரஸ்வதி மஹாலாக, மஹா (ஆ) லயமாக இருக்கிறது.

ஆசார்யாளின் முதுகுக்குப் பின்னால் ஸரஸ்வதி இருக்கலாமா என்றால் இப்படி இருப்பதிலேயே ஒரு ரஸம் இருக்கிறது. பிரம்மாவின் அவதாரமான மண்டன மிச்ரரை ஆசார்யாள் வாதத்தில் ஜயித்தபின், அவருடைய பத்னியும் ஸரஸ்வதி அவதாரமுமான ஸரஸவாணியையும் ஜயித்தார். மண்டனமிச்ரர் உடனே ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு ஆசார்யாளின் பிரதான சிஷ்யர்களில் ஒருவரான ஸுரேச்வராசாரியரானார். ஸரஸவாணியோ வாதத்தில் தோற்றுப்போனவுடன் ஸரஸ்வதி ரூபத்தை அடைந்து, பிரம்ம லோகத்துக்கே கிளம்பிவிட்டாள். ஆனாலும் ஆசார்யாள் பூலோகத்தில் ஒரு நல்ல இடத்தில் அவளை இருக்கும்படியாகப் பண்ணி அவளுடைய ஸாந்நித்யத்தால் ஜனங்களுக்கு வித்யாப் பிரகாசத்தை உண்டாக்க வேண்டுமென்று நினைத்தார். அதனால் ஆகாசத்தில் கிளம்பியவளை வனதுர்க்கா மந்திரத்தில் கட்டி மேலே போக முடியாதபடி பண்ணினார்.

“அம்மா! நான் தேச ஸஞ்சாரம் புறப்படுகிறேன். நீயும் என்னோடு வரவேண்டும். எது உத்தமமான இடம் என்று தோன்றுகிறதோ அங்கே உன்னை சாரதா பீடத்தில் ஸ்தாபனம் பண்ண ஆசைப்படுகிறேன். அங்கேயிருந்து கொண்டு நீ லோகத்துக்கெல்லாம் அநுக்ரஹம் செய்து கொண்டிருக்க வேண்டும்” என்று ஆசார்யாள் ஸரஸ்வதியைப் பிராத்தித்துக் கொண்டார்.

“அப்படியே செய்கிறேன். ஆனால் ஒன்று. நான் உன் பின்னாலேயேதான் வருவேன். நீ என்னை திரும்பிப் பார்க்கக்கூடாது. பார்த்தால் அந்த இடத்திலேயே ஸ்திரமாகக் குடிகொண்டு விடுவேன்” என்று ஸரஸ்வதி இவருக்கு ஸம்மதமாகச் சொல்லும்போதே ஒரு ‘கண்டிஷ’னும் போட்டு விட்டாள். அதற்கு ஆசார்யாளும் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று.

ஆசார்யாள் புறப்பட்டார். பின்னால் ஸரஸ்வதி தேவியும் தொடர்ந்து சென்றாள். அவளுடைய பாதச் சிலம்பு “ஜல், ஜல்” என்று சப்தமிடுமாதலால் அவள் பின்தொடர்கிறாள் என்று ஆசார்யாளுக்குத் தெரியும். அவர் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமேயில்லாதிருந்தது.

ஞானக்கண் படைத்த ஆசார்யாளுக்கு எதுவும் தன்னால் தெரியாமல் போகாது. ஆனால் மநுஷ்யர் மாதிரி அவதாரம் செய்தால் இப்படியெல்லாம் கொஞ்சம் செய்வதுண்டு.

இப்படியே ஆசார்யாள் ஸஞ்சாரம் பண்ணிக் கொண்டு வரும்போது துங்கபத்ரைக் கரையில் சிருங்ககிரி (சிருங்கேரி) என்ற இடத்தில் பூர்ணகர்ப்பிணியாக இருந்த ஒரு தவளைக்கு மேலே வெயில் படாமல் ஒரு பாம்பு குடை பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். பாம்புக்குத் தவளை நமக்கு சர்க்கரைப் பொங்கல் மாதிரி; பார்த்த மாத்திரத்தில் பாய்ந்து பிடித்துத் தின்றுவிடும். இங்கேயோ ஒரு பாம்பே தவளைக்கு குடை பிடித்தது! பகையே இல்லாமல் இத்தனை அன்பு நிறைந்திருக்கிற உத்தமமான இடத்திலேயே ஸரஸ்வதியைப் பிரதிஷ்டை பண்ணிவிடலாமா என்று நினைத்தபடி ஆசார்யாள் நடந்து கொண்டிருந்தார்.

அப்போது சட்டென்று “ஜல்,ஜல்” சப்தமும் நின்றுவிட்டது. ‘ஸரஸ்வதி ஏன் வரவில்லை? என்ன ஆனாள்?’ என்று மநுஷ்ய ரீதியில் நினைத்து ஆசார்யாள் திரும்பிப் பார்த்தார்.

அந்த இடத்திலேயே ஸரஸ்வதி நிலைகுத்திட்ட மாதிரிப் பிரதிஷ்டையாகி விட்டாள்.

ஓசை கேட்காததற்குக் காரணம் என்னவென்றால், அது துங்கபத்ரையின் மணல் கரை. மணலிலே பாதம் புதைந்த நிலையில் அவள் நடந்து போக வேண்டியிருந்ததால் சிலம்போசை கேட்கவில்லை.

“இதுவும் நல்லதுதான். நாம் நினைத்ததும் ஸரஸ்வதியின் நிபந்தனையும் ஒன்றாக ஆகிவிட்டன” என்று ஆசார்யாள் ஸந்தோஷப்பட்டுக் கொண்டு அங்கே சாரதா பீடத்தை அமைத்தார்.

“உன் முதுகுக்குப் பின்னால் உன்னைத் தொடர்ந்து வருவேன்” என்று ஸரஸ்வதி சொன்னதற்கு பொருத்தமாகவேதான் இங்கே [ராமேச்வர சங்கர மண்டபத்தில்] ஆசார்யாளுக்குப் பின்னால் ஸரஸ்வதியின் சிலை பிரதிஷ்டையாயிருக்கிறது.

ஒரு புஸ்தகம் எழுதினால் அதில் முதலில் குரு வந்தனம், அப்புறம்தான் பிள்ளையார் ஸ்துதிகூட, மூன்றாவதாகவே ஸரஸ்வதி ஸ்துதி என்று க்ரமம் இருப்பதைப் பார்த்தாலும் ஸரஸ்வதிக்கு முன்னால் ஆசார்யாள் இருப்பது பொருத்தமே.

“அது ஸரி, அப்படியானால் எல்லாவற்றுக்கும் கடைசியில் மங்களம் என்று முடிக்கிற ஸமயத்தில் ஸ்தோத்திரம் செய்யப்பட வேண்டிய ஆஞ்ஜநேய ஸ்வாமி இங்கே வாசலிலேயே ஆசார்யாளுக்கும் முந்தி எடுத்த எடுப்பிலே இருக்கிறாரே! இது எப்படி பொருந்தும்?” என்று தோன்றலாம்.**

அந்த ஆஞ்ஜநேய ஸ்வாமி தாமாகவே முதலில் வந்து விட்டவர். புதிதாக இங்குள்ள மற்ற மூர்த்திகளைச் செய்தது போல அவரைச் செய்யவில்லை. இந்த இடத்தில் அவர் ஆதியிலிருந்தே இருக்கிறவர். அவர் இருந்த இடத்திற்குத்தான் இப்போது ஆசார்யாளும் வந்து சேர்ந்திருக்கிறார்.

ஆஞ்சநேயரிடம் ஆசார்யாள் வந்து சேர்ந்ததில் ஒரு பொருத்தம் தெரிகிறது.

ஸ்ரீ ருத்ரத்தை கனம் என்ற கிரமத்தில் சொல்கிறபோது நம் ஆசார்யாளின் நாமமான “சங்கர” என்பது பதின்மூன்று முறை வருகிறது. பதின்மூன்று unlucky [துரதிருஷ்ட] நம்பர் என்பது நம் சாஸ்திரப்படி தப்பு. நல்லதையெல்லாம் செய்கிறவர் என்று பொருள்படுகிற ‘சங்கர’ நாமம் பதின் மூன்று முறை வருவதும் இதற்கு ஒரு சான்று.

ருத்ராம்சம் தான் ஆஞ்சநேயர். அவர் எப்போது பார்த்தாலும் பதின்மூன்று அக்ஷரம் கொண்ட “ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்” என்ற மந்திரத்தையே ஜபித்துக் கொண்டிருப்பவர். பதின்மூன்று நல்லது என்பதால் ‘தேரா அக்ஷர்’ என்று வடநாட்டில் இதை விசேஷித்துச் சொல்கிறார்கள். இந்த திரியோதசாக்ஷரியையேதான் ஹநுமார் ஸமர்த்த ராமதாஸராக அவதரித்த போதும் ஸதா ஸர்வ காலமும் ஜபம் பண்ணிக் கொண்டு, அதன் சக்தியாலேயே சிவாஜியைக் கொண்டு ஹிந்து ஸாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கச் செய்தார்.

ருத்ர கன பாடத்தில் பதின்மூன்று தரம் சொல்லப்படும் (பரமேச்வராதாரமான) சங்கரர், ருத்ராம்சமாக வந்து பதின்மூன்று அக்ஷரத்தையே சொல்லிக் கொண்டிருக்கிற ஆஞ்ஜநேயரிடம் வந்து சேர்ந்திருப்பது பொருத்தம்தானே?

அந்த ஆஞ்சநேயரை இங்கே பின்னுக்குத் தள்ளிவிடக் கூடாது என்றுதான் முன்னாடியே வைத்திருக்கிறது.

அவர் எப்படியிருக்கிறார்? ஒரு கையை மேலே தூக்கி விரித்து கொண்டிருக்கிறார். இது அபயஹஸ்தமாக இருப்பதோடு மட்டுமில்லை. ‘நில்’ என்று கையை உயர்த்தி ஆக்ஞையிடுகிற மாதிரியும் இருக்கிறது. எதிரே பெரிய ஸமுத்ரம் இருக்கிறதல்லவா? அது இந்த ராமேச்வர க்ஷேத்ரத்தில் அலையைக் குறைத்துக் கொண்டு குளம் மாதிரி அடங்கியிருப்பதற்கு என்ன காரணம்? அந்த ஸமுத்ரத்துக்குத்தான் ‘மேலே வராதே, நில்!’ என்று கையை தூக்கி ஆஞ்சநேய ஸ்வாமி உத்தரவு போடுகிறார். அதற்கு ஸமுத்ர ராஜாவும் ஆயிரம் பதினாயிரம் வருஷமாக அடங்கி வந்திருக்கிறான்.

அதனால் அவர் நேரே ஸமுத்ரத்தைப் பார்த்துக் கொண்டு – அவருக்கும் ஸமுத்ரத்துக்கும் குறுக்கே வேறு எந்த மூர்த்தியும் வராமல், இப்படி வாசலிலேயே இருப்பது தான் நமக்கு க்ஷேமம்.

எல்லாவற்றுக்கும் முடிவிலே வருகிறவர் எல்லாவற்றுக்கும் முன் வரவேண்டிய ஆசார்யாளுக்கும் முன்னே வரலாமா என்பதற்கு நியாயம் சொல்கிறேன்.

ஸரஸ்வதி, “உனக்குப் பின்னால் நான் இருப்பேன்” என்று சொன்னதால் அவள் வாக்கை மதிப்பதுதான் அவளுக்குப் ப்ரீதி என்று இங்கே அவளை ஆசார்யாளுக்கு பின்னால் வைத்திருக்கிறதோ இல்லையோ?

இதே மாதிரி ஆசார்யாள், “எனக்கு முன்னால் நீ எப்போதும் பிரகாசித்துக் கொண்டிரு, அப்பா” என்று ஆஞ்சநேய ஸ்வாமியை வேண்டிக்கொண்டிருக்கிறார்.

“ஹநுமத் பஞ்சரத்னம்” என்று ஆசார்யாள் ஆஞ்சநேயர் மேல் ஜந்து ச்லோகங்கள் கொண்ட ஒரு அத்புதமான ஸ்துதி செய்திருக்கிறார். ஸ்தோத்திரிக்கப்பட்டவர் ருத்ராம்சம்! ஸ்தோத்திரிப்பவர் சிவ அவதாரம். ஒரே வஸ்துதான்! இப்படியிருந்தும் இரண்டு பேரும் விநயத்துக்கு வடிவமாக இருந்தவர்கள். மஹாசக்திமான்களாக இருந்தும், மஹாபுத்திமான்களாக இருந்தும் எப்போதும் அடக்கமாக இருந்த இருவர் இவர்கள். இவர்களில் ஆஞ்சநேயரை ஆசார்யாள் விநயத்தோடு வேண்டிக்கொண்டு ஸ்தோத்திரம் செய்கிறார். அதில் ஒரு ச்லோகத்தில் “புரதோ மம பாது ஹநுமதோ மூர்த்தி” என்று வருகிறது.

மம-எனக்கு; புரதோ – முன்னால்; ஹநுமதோ மூர்த்தி:- ஆஞ்சநேய ஸ்வாமியின் உருவம்; பாது– பிரகாசிக்கட்டும்!

தனக்கு முன் ஆஞ்சநேயர் ஜொலித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆசார்யாளே வேண்டிக் கொண்டிருப்பதால், அவருக்கு முன் ஸ்தானத்தில் இங்கே ஆஞ்சநேயர் இருப்பதுதான் பொருத்தம். அதுதான் அவருக்குப் ப்ரீதி.

ஆரம்பமும் முடிவும் ஒன்றுதான்; ஆதியும் அந்தமும் ஒன்றுதான்; நாம் தேடிக்கொண்டே போகிற பரம்பொருள் கடைசியில் எல்லாத் தேட்டத்துக்கும் முதல் நினைப்பாக இருக்கிற ‘நான்’ என்பதாகத்தான் முடிகிறது. இதுதான் அத்வைதம். ஆகையால் கடைசியில் வரவேண்டிய ஆஞ்சநேய ஸ்வாமி இங்கே முதலில் வரும் குருவுக்கும் முன்னால் வருவதே அத்வைதத்துக்கு விளக்கமாகத்தான் இருக்கிறது. ‘தாஸோஹம்’ (அடிமையாக இருக்கிறேன்) என்று ஸ்ரீராமசந்திரமூர்த்தியிடம் தாஸனாக இருந்தே, ‘ஸோஹம்’ என்கிற (பரமாத்மாவே நான் என்று உணருகிற) அத்வைத பாவத்தை அடைந்தவர் ஆஞ்சநேயர் என்று சொல்வதுண்டு. இதனால் அவரே முதலுக்கு முதலாகவும் முடிவுக்கு முடிவாகவும் இருப்பவர்தான்.

ஆஞ்சநேய ஸ்வாமியின் தூக்கிய கைக்குக் கட்டுப்பட்டு ஸமுத்ரம் அடங்கி நிற்கிறது. நாம் ஸம்ஸார ஸமுத்ரத்தில் தவிக்கிறவர்கள். நம் மனஸ் அலையடங்காமல் ஓயாமல் அடித்துக் கொண்டேயிருக்கிறது. ஆஞ்சநேய ஸ்வாமிதான் மனோஜயம் பண்ணினவர்; இந்திரியங்களை ஜயித்தவர். “ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்” என்று சொல்லியிருக்கிறது. தூக்கிய கையோடு அவர் நிற்பதை தரிசனமும், தியானமும் பண்ணினோமானால் அவர் நமக்கு அபயம் தருவதோடு இந்த ஸம்ஸார ஸமுத்ரத்தை, மனஸின் அலை கொந்தளிப்பை அடக்கி ஸெளக்யமும் சாந்தியும் தருவார்.

சுபம்


* ராமேச்வரம் அக்னி தீர்த்தக் கரையில் ‍ஸ்ரீ மஹாபெரியவர்கள் 1963-ல் நிர்மாணித்த ஸ்ரீ சங்கர மண்டபம்.

** ‍ஸ்ரீ ராமேச்வர சங்கர மண்டபத்தில் நுழைவாயிலிலேயே ஆஞ்சநேய மூர்த்தி விளங்குகிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is 'ஒழியணும்'மறைந்து 'வளரணும்' வளரட்டும்!
Previous