வரதக்ஷிணை பெரும் கொடுமை : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

நாம் ஊதாரித்தனமாக செலவு செய்து பிறரையும் இந்த வழியில் போவதற்குச் சபலப்படுத்திக் கடனாளியாக்குவது தப்பு என்றால், நாம் எந்தச் செலவும் செய்யமால், இன்னொருத்தனை நம் பொருட்டாகவே பெரிய செலவுக்கு ஆட்படுத்திக் கடனாளியாக்குவதோ அதை விடத் தப்பு; பாபம் என்றே சொல்லணும். வரதக்ஷிணையாலும் படாடோபக் கல்யாணத்தாலும் எத்தனையோ குடும்பங்களைக் கடனாளியாகப் பண்ணியிருப்பது நம் ஸமுதாயத்துக்கே பெரிய அவமானம். வைதிக அம்சங்களுக்கு மாத்திரமே முக்கியத்துவம் தந்து கல்யாணச் செலவை எவ்வளவுக்கெவ்வளவு குறைக்க முடியுமோ அப்படிப் பண்ணி, டாம்பீகமே இல்லாமல் ஸிம்ப்ளிஃபை செய்ய வேண்டும் என்று நானும் ஓயாமல் சொல்லிக் கொண்டேதானிருக்கிறேன். கேட்கிறவர்கள்தான் அபூர்வமாயிருக்கிறார்கள் வரதக்ஷிணையும் சீர் செனத்தியும் கேட்பது பாபம் என்கிற உணர்ச்சி பிள்ளையைப் பெற்றவர்களுக்கு உண்டாக வேண்டும். ஒரு பெண்ணின் கல்யாணம் என்றால் இப்படிப் பதினாயிரக் கணக்கில் செலவழிக்க வேண்டியிருப்பதால்தான், அந்தப் பெண்களையே வேலைக்கு விடுவது என்று ஆரம்பித்து, அப்புறம் இதுவே ஃபாஷனாகி, நம்முடைய ஸ்திரீ தர்மத்துக்கே ரொம்பவும் கெடுதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு ஆயுஸ்கால ஸேமிப்பும் போதாமல் கடன் கஸ்தி வாங்கித்தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்ற நிலையில் அநேகக் குடும்பங்களை வைத்திருக்கிற வரையில் நமக்கு மற்ற பரோபகாரத் தொண்டுகள், ஜீவாத்ம கைங்கர்யங்களைப் பற்றிப் பேசவே லாயக்கில்லை என்று தோன்றுகிறது.

வெயில் காலத்தில் விசிறி, குடை தானம்; குளிர் காலத்தில் கம்பளிதானம்; பஞ்சகாலத்தில் அன்னதானம் என்றெல்லாம் சாஸ்திரங்களில் சிறப்பித்துச் சொல்லியிருக்கிற எல்லா தானங்களயும்விட, ‘வரதக்ஷிணை’ என்று அதிகாரப் பிச்சையாக தானம் வாங்குவதை நிறுத்துவதுதான் பெரிய தானம் என்று எனக்குத் தோன்றுகிறது. மற்றதெல்லாம் ஒரு பீரியடுக்கு [கால கட்டத்துக்கு] மட்டும்தான் பயனாவது. வரதக்ஷிணையோ இன்றைக்கு ஒருத்தனுடைய வாழ்நாள் முழுவதையும் (பெண்ணைப் பெற்றவனைத்தான் சொல்கிறேன்) பாதிப்பதோடு, எதிர்காலம் பூராவுக்கும் நம்முடைய சாஸ்திரீயமான வாழ்க்கை முறையையும், சாச்வதமான ஸ்த்ரீ தர்மத்தையும் பாதிப்பதாக இருக்கிறது. ஆனபடியால் வரதக்ஷிணை வாங்காமலிருப்பது நிரந்தர தர்மதானம் என்று சொல்லலாம்.

ஒரு பக்கம் ஆடம்பரக் கல்யாணம், இன்னொரு பக்கம் கல்யாணத்துக்கு பணமில்லை என்பதால் பெண்களை வேலைக்கு விடுவது, கடன்படுவது என்கிற மாதிரிக் கஷ்டம் ஏற்படவிட்டிப்பது கொஞ்சங்கூட நியாயமில்லை.

இதற்காகத்தான் சற்றுமுன் கன்யாதான ட்ரஸ்ட் என்று ஒன்றைச் சொல்லி, அதில் தங்கள் இன்ஷுரன்ஸ் mature ஆகும்போது பாதித்தொகை சேரும்படியாகப் பாலிஸி எடுத்துக் கொள்ளலாமென்று சொன்னேன். அந்தத் தொகையை ஒரு ஏழைப் பெண்ணைக் கூடியமட்டில் எந்த சின்ன வயஸில் கல்யாணம் செய்து கொடுக்க முடியுமோ அப்படிக் கொடுக்கிற பெற்றோர் அல்லது கார்டியனிடம் விவாஹச் செலவுக்காக ட்ரஸ்டிக்கள் கொடுப்பார்கள். Marriageable age (திருமணத்துக்குரிய வயது) என்று ஸர்க்கார் நிர்ணயம் செய்யும் வயசு வந்தபின்தான் வரனே தேட ஆரம்பிப்பது என்று வைத்துக்கொண்டால், வரன் திகையவே அதற்கப்புறம் ஒரு வருஷம், இரண்டு வருஷம் என்று ஆகிறது. இதற்குள் அவள் வெறுமனே இருப்பானேன் என்று காலேஜில் படிக்க வைப்பதில், அவளுக்கு மேலே போஸ்ட் க்ராஜுவேட், அல்லது பிஹெச்.டி பண்ணின வரனாகத் தேடுவது, அதற்காக மேலும் ஒரு வருஷம், இரண்டு வருஷம் ஆவதற்குள் இவளைச் சும்மா அகத்தில் உட்கார்த்தி வைப்பானேன் என்று உத்யோகத்துக்கு அனுப்புவது; அதனால் அந்த பிஹெச்.டிக்காரன் இவளுக்கு மேலே பெரிய ஆபீஸராகவும் இருக்க வேண்டுமென்று மறுபடியும் வரன் தேடுவது என்றிப்படிப் போவதில் ‘கன்னிகை’ என்பவள் மாமியே ஆகிவிடுகிறாள்! இப்படியெல்லாமில்லாமல் சட்டப்படி நிர்ணயிக்கப்படும் மினிமம் வயஸுக்கு இரண்டு வருஷம் முன்னாலிருந்தே வரன்தேட ஆரம்பித்தால் அந்த லிமிட்டைப் பெண் க்ராஸ் பண்ணினவுடனேயாவது கல்யாணத்தைச் செய்து விடலாம்.

ரொம்பவும் வயஸேறிப் போன பெண்ணுக்குக் கல்யாணமாவதே சிரமமாகிறது; இப்படி விடுவதால்தான் எனக்கு சொல்லவே கஷ்டமாயிருக்கிறது … இந்த தேசத்திலே, நடு ஸபையிலே, ஆசார்யபீடம் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கும் நான் சொல்லவா என்று இருக்கிறது … delinquent, வழுக்கி விழுந்தவா, சறுக்கி விழுந்தவா என்று என்னென்னவோ சொல்கிறார்களே, அப்படியெல்லாம் ஏற்பட்டு நம்முடைய புராதன தர்மத்துக்குப் பெரிய களங்கம் உண்டாகிறது. வசதியில்லாதவர்கள் முடிந்தமட்டும் ஸரியான வயஸில் கல்யாணம் செய்வதற்காக grant, இன்ஷுரன்ஸ் என்றெல்லாம் கொஞ்சம் கணிசமாகவே நான் கேட்கிறேன் என்று தோன்றலாம். ஆனால் இந்தச் செலவு செய்தால் மேலே சொன்னேனே, அப்படிப்பட்டவர்களுக்காக அநேக ஸேவாஸதனங்கள் வைத்துப் பராமரிக்கிற செலவு பெருமளவு குறைந்துவிடும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். தப்பு வழியிலே போகிறவர்களிடமும் தயவு காட்டத்தான் வேண்டும். பகவானுக்கே பதித பாவனன் என்பதுதான் பெருமை. ஆனாலும் ரொம்பவும் தட்டிக் கொடுத்து, ஸெளகர்யம் செய்து தந்து ஸேவா ஸதனங்களில் வைத்து போஷணை பண்ணுவது; நவயுக எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொண்டு தப்பிப் போவதற்கே ஸைகாலஜி, ஹ்யூமனிஸம் என்கிற பெயர்களில் நியாயம் கற்பித்து எழுதுவது — இதனாலெல்லாம் தப்பு பண்ணுவதற்கே ‘இன்ஸென்டிவ்’ கொடுத்த மாதிரி இப்போது முறைகெட்டு நடக்கிறது. இதுகளுக்கு எதிராக இந்தக் கன்யாதன விஷயத்தில் மடத்தை ஆச்ரயித்தவர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

இதிலேயும் ஸரி, மற்ற பல விஷயங்களிலும் ஸரி, ‘மிடில் க்ளாஸ்’ (மத்யதர வகுப்பு) ஜனங்கள்தான் கஷ்டப்படுகிறார்கள். பணக்காரர்கள் கல்யாணத்தில் ஆடம்பரம் செய்தால் ஹானி அடைவதில்லை. அவர்கள் ”நாங்கள் ஸிம்பிள் மாரேஜ் செய்கிறோம்” என்று ஆரம்பித்தாலும் ஸமூஹம் அவர்களைக் கொண்டாடுகிறது. ரொம்பவும் ஏழைக்கு எவனோ உதவி பண்ணிவிட்டுப் போகிறான். அவன் எத்தனை ஸிம்பிளாகப் பண்ணினாலும், ”ஐயோ பாவம், அவனால் முடிந்தது அதுதான்” என்று லோகம் அநுதாபப்படுகிறது. மிடில் க்ளாஸ்காரன்தான் இரண்டுங்கெட்டானாக, ஆடம்பரம் செய்யவும் வசதியில்லாமல், ஸிம்பிளாகச் செய்தாலும் மற்றவர்களின் திட்டை வாங்கிக்கொண்டு அவஸ்தைப்படுகிறான். இவன் மட்டும், ”திட்டினால் திட்டட்டும்” என்று பொய் அந்தஸ்து கொண்டாடிக் கொள்ளாமல், எளிமையாகத்தான் இருப்பது என்று ஆரம்பித்துவிட்டால் எல்லாம் ஸரியாய்விடும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is தனக்கு மிஞ்சித் தர்மம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  எளிய வாழ்க்கை
Next