எளிய வாழ்க்கை : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

‘நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படியே மற்றவர்களும் வாழ வேண்டும்’ என்று நினைப்பது உத்தமமான எண்ணம். ஆனால் எண்ணம் உத்தமமாயிருந்து விட்டால் போதுமா? நாம் டாம்பீகமாக வாழ்க்கை நடத்திக் கொண்டு மற்றவர்களும் அப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது நடக்குமா? அப்படியே நடந்து, அமெரிக்கா மாதிரி எல்லாரும் ‘லக்ஷுரியஸாக’ வாழ முடிந்தாலும் அது நல்லதுதானா? லௌகிகமான ஸெளக்யங்கள் ஜாஸ்தியாக ஆக ஆத்மாபிவிருத்திக்கே வழியில்லாமல்தானே ஆகியிருக்கிறது? எத்தனை போட்டாலும் த்ருப்தியில்லாமல் கபளீகரம் பண்ணுகிற நெருப்பு மாதிரித்தான் இந்த ஆசை என்பது. அது எவ்வளவு ஸெளகர்யம் இருந்தாலும் த்ருப்திப்படாமல் இன்னும் புதிசு புதிசாக ஸெளக்ய ஸாதனங்களைத் தேடிக் கொண்டுதான் இருக்கும். அத்ருப்தி, குற்றங்கள் இத்யாதியைத்தான் அமெரிக்காவில் பார்க்கிறோம். ஸெளக்ய ஸாதனங்கள் என்று நினைக்கிறவைகளை விட்டால்தான் சாந்தி கிடைக்கும் என்று அங்கே புத்திசாலிகளாக இருக்கப்பட்டவர்கள் புரிந்துகொண்டுதான் த்யானம், யோகம், பஜனை என்று கிளம்பியிருக்கிறார்கள்.

மநுஷ்யனின் ஆத்மாபிவிருத்திக்கு ப்ரதிகூலமாக வெறும் லௌகிக ரீதியில் செய்கிற எந்த உபகாரமும் உபகாரமேயில்லை, அபகாரம்தான். எத்தனைக்கெத்தனை எளிமையாக வாழ்கிறோமோ அத்தனைக்கத்தனை ஆத்மக்ஷேமம். ஆனதால் மற்றவர்கள் எளிய வாழ்க்கையில் இருக்கும்படியாகப் பண்ணுவதுதான் நிஜமான உபகாரம். இதை எப்படிப் பண்ணுவது? நாம் டாம்பீகமாக வாழ்ந்து கொண்டு அவர்களுக்கு உபதேசம் செய்தால் நடக்குமா? ஆகையால் நாமே எளிமையாக வாழ்ந்துகாட்ட வேண்டும். அதாவது, ‘நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே பிறரும் வாழவேண்டும்’ என்று நினைப்பதற்கு முந்தி, நாம் எப்படி வாழவேண்டும் என்பதையும் தீர்மானம் பண்ணிக் கொள்ள வேண்டும். ‘ஏழைகள் உள்பட மற்றவர்கள் எல்லோரும் எப்படி வாழ முடியுமோ, எப்படி வாழ்ந்தால்தான் ஆத்மாபிவிருத்திக்கு நல்லதோ, அப்படித்தான் நாமும் வாழவேண்டும்; அதாவது ரொம்ப ஸிம்பிளாக வாழவேண்டும்’என்று முதலில் தீர்மானம் பண்ணிக்கொள்ள வேண்டும்.

வயிறு ரொம்பச் சாப்பாடு, மானத்தைக் காப்பாற்றத் துணி, இருப்பதற்கு ஒரு குச்சு வீடு — இம்மாதிரியான அடிப்படை (basic) தேவைகள் எல்லோருக்கும் பூர்த்தியாக வேண்டும். இதற்குமேல் ஆசைக்குமேல் ஆசை, தேவைக்குமேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை. அப்படி மற்றவர்களைப் பறக்காமல் இருக்கச் செய்வதற்காக நாமும் எளிமையாக வாழவேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is வரதக்ஷிணை பெரும் கொடுமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  உற்றமும் சுற்றமும்
Next