தர்மத்தை நமக்கெல்லாம் நடத்திக்காட்ட வந்த ஸ்ரீராமசந்த்ரமூர்த்தியே இந்த ப்ரேத ஸம்ஸ்காரத்தை விசேஷமாகச் செய்து காட்டியிருக்கிறார். ஜடாயு மாதிரியான ஒரு பக்ஷிக்குக்கூட அவரே ஸம்ஸ்காரம் செய்திருக்கிறார். அதுமட்டுமில்லை, வாலியையும் பரம வைரியான ராவணனையுங்கூட அவர் வதைத்தவுடன் அங்கதனையும் விபீஷணனையும் கொண்டு அவர்களுக்கு ஒரு குறைவுமில்லாமல் தஹனம் பண்ணச் செய்திருக்கிறார். ஏனென்றால் அந்த சரீரங்களுக்குள் இருந்த மனஸ்தான் அவற்றை துஷ்டத்தனமாக நடத்திற்று. உயிரோடுகூட அந்த மனஸ் வெளியேறிய அப்புறம் ஸ்வயமாகக் கெடுதல் இல்லாத, பகவானுடைய அத்புத ஸ்ருஷ்டியான அந்த உடம்புகளுக்கும் உரிய மரியாதையைச் செய்வதில் ராமரே கண்ணும் கருத்துமாக இருந்து, யதோக்தமாக ஸம்ஸ்காரம் பண்ணுவித்திருக்கிறார். க்ருஷ்ண பரமாத்மாவும் கௌரவர்கள் உள்பட எல்லாருக்கும் குருக்ஷேத்ரத்தில் அந்திம ஸம்ஸ்காரம் பண்ணுவித்து, அப்புறம் த்ருதராஷ்ட்ரனையும் பாண்டவர்களையும் கங்காதீரத்துக்கு அழைத்துக் கொண்டு போய் தர்ப்பணாதிகள் செய்வித்திருக்கிறார்.
ஆனதால், அநாதை ப்ரேத ஸம்ஸ்கார விஷயத்தில் கவனக்குறைவாக இருப்பது நம்முடைய ஹிந்து ஸமூஹத்துக்கு உள்ள பெரிய தோஷம் — மன்னிக்க முடியாத தோஷம். இனிமேலாவது இதற்கு ஒரு ஏற்பாடு பண்ணிப் பிராயச்சித்தம் தேடிக்கொள்ள வேண்டும்.
அநாதையாக ஒருவன் செத்துப்போனதாகத் தெரிந்தால், அவன் என்ன ஜாதியாக இருந்தாலும், தீண்டாதவனாக இருந்தாலும், அவனுடைய குலாசாரப்படி, அவனுடைய குலத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு, யதோக்தமாக ஸம்ஸ்காரம் செய்வதற்குப் பொருளுதவி பண்ண வேண்டும். இதற்காகப் பலர் சேர்ந்து பணம் போட்டு மனஸாரப் பணி புரிய வேண்டும். ஏகதேசமாகச் செய்ய சக்தியுள்ள தனிகர்கள் இதைப் பெரிய தர்மம் என்று புரிந்துகொண்டு விசேஷமாக உதவி செய்ய வேண்டும். அநேக தர்ம ஸ்தாபனங்கள், ட்ரஸ்ட்டுகள் நம் ஹிந்து ஸமூஹத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவர்களும் அநாதை ப்ரேத ஸம்ஸ்காரம் உத்தமமான கைங்கர்யம் என்று ‘ஸ்பெஷல் இன்டரெஸ்ட்’ எடுத்துக்கொண்டு, இதற்காக தாராளமாகப் பொருளுதவி செய்ய வேண்டும்.