சிலரது கஷ்டம் பலருக்குப் பரீக்ஷை : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

லோகத்தில் சிலபேர் ஏன் ரொம்பக் கஷ்டப்படுகிறார்கள் என்றால், மற்றவர்கள் அவர்களுக்குப் பரோபகாரம் செய்கிறார்களா என்று பார்ப்பதற்காகத்தான் ஈஸ்வரன் இப்படிப் பரீக்ஷை பண்ணுகிறான் என்று சொல்வதுண்டு. ‘அவனவன் தன் கர்மாவுக்காகக் கஷ்டப்படுகிறான்; நாம் உதவி பண்ணினாலுங்கூட அவன் பலன் அடைய முடியாதபடி கர்மா குறுக்கே நிற்கலாம்’ என்பதும் வாஸ்தவம்தான். ஆனால், நம் உபகாரத்தால் அவர் கர்மா தீருகிறதோ, தீரவில்லையோ, நம்மாலான ப்ரயாஸையை நாம் பண்ணுவதுதான் மநுஷ்ய தர்மம். ஒருத்தனைக் கர்மாவுக்காக தண்டிக்கிறபோதே ஈஸ்வரன் மற்றவர்களுடைய பரோபகார சித்தத்துக்கும் அதை ஒரு ‘டெஸ்ட்’டாக வைக்கிறான் என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உபகாரம் பண்ணியும் அது அவனுக்கு ப்ரயோஜனமாகாவிட்டால்தான், கஷ்டம் என்பது அவன் கர்மாவுக்குத் தண்டனை என்று சொல்லலாம். அநேக ஸமயங்களில் பரோபகாரத்தினால் பிறத்தியார் கஷ்டத்தைப் போக்கவும் முடிகிறதே! இப்படியானால் என்ன அர்த்தம்? நாம் பரோபகாரம் பண்ணி அவன் கஷ்டத்தைப் போக்குகிறோமா என்று பகவான் ‘டெஸ்ட்’ பண்ணியதாகத்தானே அர்த்தம்?

இதே மாதிரிதான், தனி மனிதனுக்குக் கஷ்டம் வருகிறதுபோலவே, ஒரு ஜன ஸமுதாயத்துக்கே பஞ்சம், வெள்ளம், எரிமலை, பூகம்பம், தீவிபத்து முதலான உத்பாதங்கள் ஏற்படுவதிலும் மற்றவர்களுடைய பரோபகார சிந்தனைக்கு பகவான் வைக்கிற பரீக்ஷையும் சேர்ந்திருக்கும். இம்மாதிரி நிவாரணப் பணிகளைப்பற்றி நான் இதுவரை சொல்லவில்லை. விசேஷமாக இதைபற்றிச் சொல்லி வற்புறுத்த வேண்டியதுமில்லை. இப்படி ஒரு பெரிய கஷ்டம் பலபேருக்கு ஏற்படுகிறது என்றால், யாரும் சொல்லாமலே பணத்தாலோ, சரீரத்தாலோ உதவிபண்ண வேண்டும் என்ற எண்ணம் அவரவர்க்கும் பொங்கிக்கொண்டு வரவேண்டும். ஸர்க்கார், ரெட் க்ராஸ், ராமக்ருஷ்ணா மிஷன் முதலானவர்களோடோ, அல்லது தாங்களாகவே ஸங்கமாகச் சேர்ந்தோ, அல்லது தனிப்பட்ட முறையிலோ, எப்படியானாலும் இந்த மாதிரியான calamity-களில் ஒவ்வொருவரும் பணிசெய்ய வேண்டியது அவசியம்*. தனி மனிதனின் கஷ்டத்துக்கு மூலகாரணம் அவனுடைய பூர்வ கர்மா என்கிறாற்போலவே, இப்படிப்பட்ட விபத்துக்களையும் “Natural calamity”, ”இயற்கையின் சீற்றம்” என்று இந்த நாளில் எழுதினாலும், இதெல்லாம் பொதுவாக மநுஷ்ய ஸமூஹம் முழுதுமே பண்ணும் பாபத்துக்காக பகவான் தருகிற தண்டனைதான் என்று சாஸ்த்ரம் சொல்லும். தண்டனையாகப் பெற்று வருத்தப்பட்டுக்கொண்டேதான் அந்தப் பாபத்தை நாம் தீர்க்க வேண்டும் என்றில்லை. இம்மாதிரி ஸமயங்களில் நாம் பண்ணுகிற மனப்பூர்வமான கஷ்ட நிவாரணத் தொண்டாலும் பாபத்தில் பாக்கியிருப்பதைப் போக்கிக்கொண்டு விடலாம். இப்படித் தொண்டு செய்யாமல் கருங்கல் மாதிரி இருந்தால் அதுவே ஒரு பாபம். இன்றைக்கு ஜன ஸமூஹத்தின் பிரதிநிதியாக இன்னொருத்தன் வாங்கிக்கொண்ட தண்டனை, கல்மாதிரி இருக்கிற நமக்கே நாளைக்கு வரும்.

ஒருத்தனுடைய கஷ்டத்தில் இப்படி இன்னொருத்தனுக்கு டெஸ்ட் இருக்கிறது. அதிலே பாஸ் பண்ணினால் ப்ரைஸ் கிடைக்கும். சிலபேர் ரொம்பவும் பரிதாபகரமாக. கேட்பார் யாருமின்றி அநாதையாகச் சாவதிலேயே மற்றவர்களுக்கு ஒரு பரீக்ஷை வைக்கிறான் பகவான். ”இவர்கள் தன்னால் படைக்கப்பட்ட அந்த அத்புதமான சரீர மெஷினை அதற்குள்ள மரியாதை கொடுத்து, ஸம்ஸ்காரம் பண்ணித் தன்னிடம் சேர்க்கிறார்களா?” என்று பரமேஸ்வரன் பார்க்கிறான். பரீக்ஷைக்குப் பரிசு என்னவென்றால் பரதேவதையின் கடாக்ஷம்.

அநாத ப்ரேத ஸம்ஸ்காராத்
அச்வமேத பலம் லபேத்

என்கிறபோது, ஓர் அநாதை ப்ரேதத்துக்கு ஸம்ஸ்காரம் பண்ணுவிக்கிறவனுக்கு ஈஸ்வரன் ஓர் அஸ்வமேதம் பண்ணினால் எவ்வளவு புண்ணியமோ அவ்வளவு புண்யத்தை ப்ரைஸாகக் கொடுத்துவிடுகிறார் என்று நேர் அர்த்தமானாலும் இந்த அஸ்வமேதமே அம்பாளுக்கு ஆராதனை என்று ‘த்ரிசதி’சொல்லுவதால் அவளுடைய பரமகிருபையே பலனாகக் கிடைக்கிறது என்றும் அர்த்தமாகிறது.

நமக்கு வேண்டிய பெரிய ப்ரைஸ் ஸாக்ஷாத் அம்பாளின் அநுக்ரஹம்தான். அஸ்வமேத புண்யபலனாக தேவலோகத்துக்கோ ப்ரம்மலோகத்துக்கோ போய் நமக்கு ஒன்றும் ஆகவேண்டாம். அங்கெல்லாம் போனாலும் புண்யம் தீர்ந்த பின் — ரூபாய் செலவழிகிற மாதிரி, செலவழித்த பின் — பூலோகத்துக்குத் திரும்பி வந்துதான் ஆகவேண்டும். ஆனால் அம்பாளின் சரணார விந்தங்களுக்குப் போனோமானால் திரும்பவே வேண்டாம். நித்யானந்தம் என்ற சாஸ்வத ஸெளக்யம் அதுதான்.

அந்த அம்பாள் எப்படி இருக்கிறாள்? ‘த்ரிசதி’ வாக்கியபடி ‘ஹயமேத ஸமர்ச்சிதா’ வாக இருக்கிறாள். அதாவது அஸ்வமேதம் செய்தால் அதையே தனக்குப் பெரிய ஆராதனையாக எடுத்துக்கொண்டு அநுக்ரஹம் பண்ணுகிறவளாக இருக்கிறாள். நமக்குத்தான் ஸுலபமான அஸ்வமேதமாக அநாத ப்ரேத ஸம்ஸ்காரம் இருக்கிறதே! இதனால் கிடைக்கிற பலனை அம்பாளின் அநுக்ரஹமாக எக்ஸேசேஞ்ச் பண்ணிக்கொண்டால் அது ஒருநாளும் செலவழியாத புண்யக் கரன்ஸியாக, அக்ஷயமாக இருந்துகொண்டு நம்மை இந்த லோகத்துக்கு மறுபடியும் அனுப்பாமல் காப்பாற்றும். இன்னொருத்தனுக்குச் செய்கிற மரண ஸம்ஸ்காரமே நம்மை ஜனன மரணங்களிலிருந்து விடுவிக்கக் கை கொடுக்கும்.

ஆனதால், அநாத ப்ரேத ஸம்ஸ்காரத்தில் நாம் அலக்ஷ்யமாக இருக்கிறோமென்றால் நாம் அசடு என்று அர்த்தம். பரமாத்மா ரொம்ப ஸுலபமாக ஒரு பரீக்ஷை வைத்து அஸ்வமேத பலனை, அம்பாளின் ப்ரீதியை நாம் அடைவோமா என்று பார்க்கிறபோது, நாம் இதைக் கோட்டை விட்டுவிட்டு நின்றால் அசடு என்றுதானே அர்த்தம்?

ஆகையால் எந்த ஜாதியானாலும் அநாதை ப்ரேதங்களைப் பற்றி நமக்குத் தெரிய வந்தால், ”இந்தக் கைங்கர்யம் நமக்குக் கிடைத்ததே!” என்று அதற்குரிய ஸம்ஸ்காரத்தைப் பண்ணுவித்து, ஒரு பெரிய அஸ்வமேத யாக பலனை அடையும் ஸந்தர்ப்பத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இனிமேல் ஒரு ஹிந்து ப்ரேதத்தை ராஜாங்க ஸேவகர்கள் ஒரு சடங்குமில்லாமல் புதைத்தார்கள் என்ற அபக்யாதி நமக்கு இருக்கக்கூடாது. செத்துப்போன உடம்புக்கு என்ன முக்யம் என்றில்லாமல், இந்த ஸம்ஸ்காரமே எல்லாப் பரோபகாரத்துக்கும் அஸ்திவாரம் என்ற உணர்வோடு இதிலே அக்கறை காட்ட வேண்டும்.

‘ஹயமேத ஸமர்ச்சிதா’ என்று ‘த்ரிசதி’ யில் அம்பாளுக்குப் பெயர் இருப்பதுபோல் ‘ஸஹஸ்ர நாம’த்தில் “வர்ணாச்ரம விதாயினீ” என்று ஒரு பேர் இருக்கிறது. இதன்படி அந்தந்த ஜீவனின் குலதர்மப்படி அதன் சரீரம் ஸம்ஸ்காரம் ஆகும்படி செய்தாலே அம்பாளின் ப்ரீதிக்குப் பாத்திரமாவோம். ஸ்ரீமாதாவின் க்ருபையால் அவளுடைய குழந்தைகளான எல்லா ஜாதி, வர்ண, குல, ஆச்ரமங்களைச் சேர்ந்த ஜீவகோடிகள் எல்லோருக்கும் பரஸ்பரம் உண்மையான ஸஹோதர மனப்பான்மை ஏற்பட்டு அதன் மூலம் உலகத்தில் அன்பும், பொருளும், அருளும் குறையாது வளரவேண்டும்.


*இம்மாதிரிப் பெரிய உத்பாதங்களில் ஸ்ரீபெரியவர்களின் திருஉளப்படி காஞ்சி ஸ்ரீமடம் ஆற்றி வந்துள்ள அரும்பணிகள் அனந்தம். 1924லேயே காவிரி வெள்ளம் ஏற்பட்டபோது கஷ்ட நிவாரணப்பணியில் நமது மடம்தான் முன் நின்றது. 1961–ல் ஏற்பட்ட காவிரி வெள்ளத்தின்போது மடம் அற்புதப்பணி புரிந்தது மட்டுமின்றி, இப்பணியில் உதவிய மற்ற ஸ்தாபனங்களுக்கு ஆசி வழங்கிய ஆசாரியர்கள், இதிலே பங்குகொண்ட தி.க., திமுக.வையும் குறிப்பிட்டு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்கள். பாலி பூகம்பத்திலும் ‘உடுக்கை இழந்தவன் கை’யாக உடனுக்குடன் ஸ்ரீமடத்தின் உதவியை அளித்திருக்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ராமனும் கண்ணனும் காட்டிய வழி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஆவி பிரியும் காலத்தில்
Next