மூன்று விதமான கொள்கைகள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

மூன்று கட்சிகள். ஒன்று, மதமே ஒரு ஸ்டேஜ் வரையில் உலக ஸம்பந்தமான ஸெளக்யங்களையும் ஆதரித்துக் காரியங்களைக் கொடுப்பது. இன்னொன்று: மதம் ரொம்ப உசந்த லக்ஷ்யத்துக்காக, ஸ்வச்சமான ஆத்மா என்கிற ஹை லெவலை மட்டுமே சேர்ந்ததாக இருக்க வேண்டும்; ஆதலால் அதிலிருந்து சடங்கு, சின்னம், கர்மா எல்லாவற்றையும் அப்படியே உருவி விட்டு அதைச் சீர்திருத்த வேண்டுமென்பது. மூன்றாவது: லௌகிகமான அபிவிருத்திகள், ஸ்வய மரியாதை, ஸயன்டிஃபிக் அவுட்லுக் (இதை ‘ரீஸன்’ என்றும் சொல்கிறார்கள்; அதாவது புத்தியின் தர்க்கத்துக்குப் புரிபடுவதாக இருக்க வேண்டும் என்பது அபிப்பிராயம்) இவற்றுக்கு மதசாரங்கள் ஹானி செய்வதால் அப்படிப்பட்ட அம்சங்களை மாற்றிச் சீர்திருத்த வேண்டுமென்பது. அதாவது சீர்திருத்தத்திலேயே இரண்டு கட்சி. ஒன்று, இது அநேகமாகப் பொலிடிகலாக இருப்பது – ஆத்ம ஸம்பந்தமே அடியோடு இல்லாமல் லோக வாழ்க்கைக்காகவே சீர்திருத்தம் பண்ண வேண்டுமென்பது. இன்னொன்று ரொம்ப உயர்ந்த ஆத்மாநுபவங்களை எல்லோருக்கும் பொதுவாக்க வேண்டும் என்ற அபிப்பிராயத்திலேயே மதத்தைச் சீர்படுத்தச் சொல்வது. லௌகிகமாக மநுஷனுக்கு மநுஷன் வித்யாஸம் இருக்கப்படாது என்ற ஸமத்வத்தைச் சொல்வதில் இரண்டு தினுஸான சீர்திருத்தவாதிகளும் ஒத்துப்போகிறார்கள்.

இதுவரை நான் சீர்திருத்தக்காரர்கள் என்றபோது இரண்டு கோஷ்டிகளையும் கலந்து கலந்து சொல்லிக் கொண்டு வந்துவிட்டேன். அதனால் கொஞ்சம் குளறிப் போயிருக்கும். இப்போது, என்னமோ இப்படிப் பேச ஆரம்பித்ததில் எனக்கே துளித் துளி புரிந்து கொண்டு வருவதால் உங்களுக்கும் கொஞ்சம் தெளிவு பண்ணப் பார்க்கிறேன்.

இரண்டு கோஷ்டிகளும் மதச் சீர்திருத்தம் வேண்டும் என்று சொன்னாலும், இரண்டு பேரும் social equality -ஐச் (ஸமூஹச் ஸமத்துவத்தை) சொன்னாலும், ஒரு கோஷ்டி ஆத்ம லக்ஷியத்துக்காகவே ஆசாரத்தை மாற்றச் சொல்கிறது: இன்னொரு கோஷ்டி லௌகிக லக்ஷியம் ஒன்றுக்காக மாத்திரம் ஆசாரத்தைவிடச் சொல்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is தலைவர் கடமை:கீதை உபதேசம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  லௌகிக லக்ஷியச் சீர்திருத்தம்
Next