தலைவர் கடமை: கீதை உபதேசம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

பகவான் கீதையில் நன்றாக எச்சரிக்கை பண்ணியிருக்கிறார். “லோகாசாரங்களுக்கு, உலக வழக்குகளுக்கு வித்யாஸமாக நீ போனாயானால் (உன்னளவில் நீ அவற்றை விட்டு விடலாமென்றாலுங்கூட) நீ ஜனங்களுக்குத் தப்பான வழிகாட்டியாகி விடுவாய். உன்னைப் பார்த்து அவர்களும் அவற்றை விட்டு விடுவார்கள். ஆனால் நீ உன்னுடைய பக்வ விசேஷத்தால் இப்போது விட்டதைவிட உசந்த வழிக்குப் போகக்கூடுமென்றாலும், ஸாதாரண ஜனங்கள் தற்போது இருக்கிற ஸ்தானத்தை விட்டதோடு மட்டும் இருக்குமே தவிர, விட்டபின் இதைவிட உசத்தியான ஒன்றைப் பிடித்துக் கொள்ள அவர்களுக்கு சக்தியும், ஸம்ஸ்காரமும் போதாது. இருக்கிற பிடிப்பையும் விட்டு விட்டு இன்னம் கீழே விழுந்து விடுவார்கள்” என்ற இவ்வளவு அபிப்ராயங்களையும் அடக்கித்தான், அடைத்து வைத்துத்தான்

ஸக்தா: கர்மண்யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத |

குர்யாத் வித்வாம்ஸ்ததா (அ)ஸக்த சிகீர்ஷுர் லோகஸங்க்ரஹம் ||

ந புத்தி பேதம் ஜநயேத் அஜ்ஞானாம் கர்ம ஸங்கிநாம்

என்றார் [3.25-26].

ஜனங்கள் பொதுவாக “கர்மஸங்கி”களே. அதாவது கார்யத்தில்தான் கட்டுப்பட்டிருப்பவர்கள். அவர்களிடம் வெறுமனே ஆத்மா, த்யானம் என்று ஐடியல் நிலையைச் சொல்லிப் பிரயோஜனமில்லை. சாஸ்திரங்களில் அவர்களுக்கு அநேகக் காரியங்களைக் கொடுத்து அதற்கு த்ருஷ்டமாகவோ அத்ருஷ்டமாகவோ இன்னின்ன பலன் என்று சொல்லியிருக்கிறது. வேதத்தில் சொல்லியிருக்கப்பட்ட அநேக யாக யஜ்ஞங்களுக்கு இப்படிப்பட்ட பலன்களைத்தான் சொல்லியிருக்கிறது. இந்த தேசத்திலேயே மழை பெய்து தான்யஸம்ருத்தி உண்டாகும்; அல்லது மேதாவிலாஸம், ஸதஸில் வாக் விலாஸம் உண்டாகும்; முடிவாக ஸ்வர்க்கவாஸம் கிடைக்கும் என்றே சொல்லியிருக்கும். இந்திரியங்களால் இன்பங்களை அடையும் ஸ்வர்க்க வாஸத்தைத்தான் சொல்லியிருக்குமே தவிர, இந்திரிய பந்தமெல்லாம் தெறித்துப்போன மோக்ஷமான ஜீவ-ப்ரம்ம ஐக்கியத்தைக் கர்மாவுக்குப் பலனாக சொல்லியிருக்கவில்லை. ஏனென்றால் முதலிலேயே மோக்ஷம் என்றால் யாரும் அதை நாடமாட்டார்கள் என்று அதற்குக் கீழ்ப்பட்ட ஸ்வர்காதி ஸெளக்கியங்களுக்காகவே கர்மாவைக் கொடுத்து அந்தக் கர்மாவினால் இவனுக்கு உண்டாகிற கட்டுப்பாட்டிலிருந்து, இவனறியாமலும், உத்தேசிக்காமலும், விரும்பாமலுமேகூட இவனுக்குச் சித்தசுத்தி தந்து இவனைப் பாரமார்த்திகமாகத் திருப்பத்தான் இப்படிச் செய்திருக்கிறது. பிற்காலத்தில் மதம் என்பதில் யஜ்ஞகர்மா குறைந்துவிட்டது. ஆனாலும் லௌகிக லாபங்களுக்காகவே வேறுவித அநுஷ்டானங்களைக் காரியமாக கொடுப்பது தொடர்ந்திருக்கிறது. “ராமேஸ்வரத்துக்குப் போ, அரச மரத்தைச் சுற்று, பிள்ளை பிறக்கும். ஸுர்ய நமஸ்காரம் பண்ணு, நேத்ர ரோகம் ஸரியாகப் போகும். கனகதாராஸ்தவம், சொல்லு ரூபாய் வரும்” என்றெல்லாம் லௌகிக பலன்களுக்காகவே பல காரியங்களை சாஸ்த்ரம் சொல்கிறது. இந்தப் பலனில் உள்ள பற்றினாலேயே பெரும்பாலான ஜனங்கள் இதுகளைப் பண்ணுகிறார்கள். இவர்கள் வாஸ்தவத்தில் உயர்ந்த அறிவு பெறாத ‘அவித்வான்’கள்தான். இவர்களைத்தான் “ஸக்தா:கர்மண்யவித்வாம்ஸோ” என்கிறார். இவர்களிடம் “இப்படி அல்ப பலனையெல்லாம் நினைக்காதீர்கள். ஈஸ்வராநுபவம் என்ற உசந்த லக்ஷ்யத்தையே நினையுங்கள்” என்று உபதேசம் பண்ணினால் எடுபடாது. அவர்களுடைய ஸம்ஸ்காரக் குறைவு காரணமாக, அவர்களை இப்போது இருக்கிற இடத்திலிருந்தே அவர்களுடைய மனஸை அநுஸரித்துக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மேலே கொண்டு போக வேண்டும். இதற்கு அவர்களைப் பக்குவப்படுத்துவதற்காகத்தான் சாஸ்திரங்களே அவர்களுக்கு இப்படிப்பட்ட ஆத்ம ஸம்பந்தமில்லாத காரியங்களையும் கொடுக்கிறது. பலனுக்காகத்தான் அவர்கள் இவற்றைப் பண்ணுகிறார்கள். பண்ணிவிட்டுப் போகட்டும். ஆனால் இப்படிக் காரியம் பண்ணுவதால் என்ன ஏற்படுகிறதென்றால் இவர்கள் உத்தேசித்த பலன் உண்டாவதோடு கூட, இவர்கள் உத்தேசிக்காமேலே கொஞ்சங் கொஞ்சமாகச் சித்தசுத்தி என்ற பெரிய பலன் உண்டாக ஆரம்பிக்கிறது.

லௌகிக பலனை நினைத்தே கார்யம் பண்ணினாலும் சித்த சுத்தி உண்டாகிறது என்று இப்போதுசொல்லுகிறேன். இத்தனை நாழி என்ன சொன்னேன்? இம்மாதிரி லௌகிகமான ஸமத்துவம், ‘ரைட்’ இவற்றுக்காகவே மதத்தை மாற்ற முயல்வது சித்தத்தை மேலும் அசுத்தம்தான் செய்திருக்கிறது என்று சொன்னேன். இது ஒன்றுக்கொன்று மாறாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்துப் பார்க்கலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is தெய்வமும் மதமும் தர்மமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  மூன்று விதமான கொள்கைகள்
Next