மதாபிமானிகளின் கடமை : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இப்போது நாம் என்ன பண்ணவேண்டுமென்றால், ஹிந்து மதத்திலேயே உள்ள பிரிவுகளில் ஏற்பட்டிருக்கிற குலாசாரங்களில் நமக்குப் பிறப்பினால் எது அமைந்திருக்கிறதோ அதில் நிறைவு ஏற்படாமல் இதே வைதிக மரபில் இன்னொரு விதமான ஆசாரத்தில்தான் நிறைவடைகிறோம் என்றாலுங்கூட, எப்படிக் குமாரிலபட்டரும் மங்கையர்க்கரசியும் வெளிப்பட அன்ய மதங்களை அநுஸரித்தாற்போலிருந்துகொண்டு, உள்ளுக்குள் ஸொந்த மதத்திலேயே பற்றோடிருந்தார்களோ, அப்படி, வெளிப்பட குலாசாரத்தையே பின்பற்றிக் கொண்டு மனஸுக்குள் மட்டும் நமக்கு இஷ்டமான உபாஸனையை வைத்துக்கொள்ளவே பிரயத்னம் செய்ய வேண்டும். நம்முடைய உள்மனஸின் பற்றுதல் ஆழமானதாக, உண்மையானதாக இருந்தால் நிச்சயம் அந்த இரண்டு பேரையும் போல நாமே ஜயசாலிகளாகி தைரியமாய் நம் ‘கன்விக்ஷன்’ படி நடக்கிற நாள் வரும்.

“அதுவரை கன்விக்ஷன்படி தைரியமாய் நடக்கக் கூடாதா? இப்படி உள்ளொன்றும் புறமொன்றுமாக நடக்கும்படி உபதேசிப்பதற்கா நீங்கள் ஆசார்யன் என்று பேர் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இது மட்டும் மித்யாசாரமில்லையா?”என்றால்-

ஒன்றைத் தப்பு என்பது எதற்காக? ஸ்வய நலனுக்காப் பண்ணினால்தானே அல்லது ஒருத்தனைக் கெடுத்து இன்னொருத்தனுக்கு நன்மை பண்ணுவதுதானே தப்பு? இதிலே அந்த மாதிரித் தப்புகள் ஒன்றும் இல்லையே! ‘ஒருத்தனையும் கெடுத்து விடக் கூடாது; ஏற்கனவே ஸ்வாதந்திரியம் என்று சொல்லிக் கொண்டு குலாசாரங்களை விட்டுக் கெட்டுப் போய்க்கொண்டிருப்பவர்களுக்கு மதாபிமானம் உள்ள நாமும் வலுத் தந்து விடக் கூடாது. எவனையும் நாம் கெடுத்துவிடக் கூடாது. நமக்குப் பிரியமானது போனாலும் போகட்டும்’ என்கிற தியாகத்தின் மேல் தானே இப்படிச் செய்யச் சொல்கிறேன்? அதனால் தப்பு இல்லை.

அதனால், வைதிகாசாரங்களையே விட்டு மதாந்தரங்களுக்கு மாறினால்தான் தப்பு என்றும், வைதிகாசாரங்களிலேயே ஒரு ஸம்பிரதாயத்திலிருந்து இன்னொன்றுக்குப் போனால் தப்பில்லை என்றும் நினைக்காமல், முடிந்த மட்டும் அவரவரும் குலாசாரப்படியே நடக்கத்தான் பாடுபடவேண்டும். ‘ [பிறப்பால் ஏற்பட்ட மதத்தை] விட்டவன் பதிதனாகிறான் என்பது இவனுக்குப் பொருந்துமா, விட்டதோடு நாஸ்திகனாகவோ இதர மதமொன்றுக்கோ போகாமல் வைதிகாசாரத்திலேயே இன்னொன்றுக்குத்தானே போகிறான்?’ என்றால், இவனளவில் ஒன்றை விட்டு விட்டு நல்ல வழியில் இன்னொன்றைப் பிடித்துக் கொள்கிறானென்றாலும், இந்த ஸ்வதந்திர யுகத்திலே மற்றவர்கள் இவனைப் பார்த்து [குலாசாரத்தை] விடுவதில் மட்டும் துணிச்சலடைந்து, இன்னொரு ஆசாரத்தில் போகாமல், தப்பு வழியிலல்லவா போவார்கள்? அதாவது இவன் மற்றவர்கள் பதிதர்களாகப் போகத் தூண்டுதல் கொடுத்து விடுகிறானல்லவா? இப்படிப் பண்ணினவனை மட்டும் பதிதனாகிற தோஷம் விடுமா?

‘உலகத்தில் ஏற்கெனவே கட்டு விட்டுப்போச்சு; அதனால் கெட்டுப் போச்சு; இதற்கு நாமும் உடந்தையாகவோ, ஊக்கம் தருபவராகவோ இருந்துவிடக் கூடாது’ என்பதைத்தான் இன்றைக்கு மதாபிமானமுள்ளவர்களெல்லாரும் எல்லாவற்றுக்கும் மேலான தர்மமாக, கடமையாக நினைக்க வேண்டும். அப்படி நினைத்து, நம் அந்தரங்கத்திலே இப்படிக் குலாசாரத்துக்கு வித்தியாஸமான ஒரு விச்வாஸத்தை உண்டாக்கியிருக்கும் பகவானே அதை எப்படியாவது பூர்த்தி பண்ணி விடுவான் என்ற நம்பிக்கையோடுகூட, அவரவரும் தங்கள் குலாசாரப்படியே செய்து வந்தால் பகவான் நம் மூலம் உலகுக்கு க்ஷேமம் உண்டாக்கி, முடிவில் நமக்கும் நம் மனஸ் எப்படி நிறையுமோ அப்படிப்பட்ட நிறைவு உண்டாகும்படி அநுக்ரஹம் பண்ணுவான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is விதி விலக்கான மஹான்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஆசாரம் என்பதன் இலக்கணம்
Next