விதி விலக்கான மஹான்கள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

அதீத நிலையில் குலாசாரத்தை மீறிப்போன மஹான்களை நமக்கு மாடலாக நினைத்துக்கொண்டு விடக்கூடாது. அவர்களுடைய அஸாதாரண உள்ளநுபவத்தின் ‘அதாரிடி’யிலேயே அவர்கள் எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இப்படிச் செய்தார்கள். அப்படிப்பட்ட அநுபவம் நமக்கு வந்துவிட்டதாக பிரமை கொண்டு விடக்கூடாது.

ஸித்தாந்தம் பண்ணி வாதித்து ஜயிக்கத் தெரியாதவர்களும் இப்படி அதீத அநுபவத்தின்மேல் குலாசாரத்துக்கு வித்யாஸமாக பண்ணினதுண்டு. ரண சண்டிகையை உபாஸிக்கிற ராஜபுத்ரர்களில் இப்படித்தான் மீராபாய் கிருஷ்ணபக்தி என்று, அதுவும் பாதிவ்ரயத்துக்குக்கூட வித்யாஸம் மாதிரித் தெரியும் நாயிகா பாவத்தில் பண்ணிக் கொண்டிருந்தாள். இவள் பண்ணினது பக்தி வழியிலேயும் குலாசாரத்துக்கு வித்யாஸம்; பொது ஸமூஹத்தின் ஸ்திரீதர்மத்துக்கும் வித்யாஸம். பாரத தேசம் பூராவுக்குமே பாதிவ்ரத்யம் முக்யமென்றாலும், ராஜபுத்ர ஸ்திரீகள் அதிலே ரொம்பத் தீவிரமாகப் போனவர்கள் துருக்கர்களோடு யுத்தம் பண்ணி ராஜபுத்ர வீரர்கள் ரணபூமியில் மரணமடைந்த ஸமயங்களில் அவர்களுடைய பத்னிமார் கூட்டங் கூட்டமாக அப்படியே நெருப்பை மூட்டிக் கொண்டு அக்னிப் பிரவேசம் செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட தேசத்தில்தான் மீராபாய் புருஷன் அபிப்ராயத்துக்கு வித்யாஸமாகப் போனது மட்டுமில்லாமல், கிரிதரகோபாலனுக்கே தான் பத்னி என்ற பாவத்தில் பரவசமாகப் பாடியிருக்கிறாள். அவளை விஷங்கூட ஒன்றும் பண்ணவில்லை; அவள் பாட்டுக்கு அதையும் சிரித்துக்கொண்டே சாப்பிட்டாள் என்று கேட்கிறோம். அப்படி நாமும் விஷத்தைச் சாப்பிட்டு அது நம்மையும் ஒன்றும் செய்யாது என்றால் நாமும் அவள் மாதிரிப் பண்ணலாம்! ‘விஷங்கூட என்னை ஒன்றும் செய்யாதக்கும்’என்று சாலெஞ்சாக அவள் அதைப் பானம் பண்ணவுமில்லை! தன்னை அது பாதிக்காமல் கிரிதரகோபாலன் காப்பாற்ற வேண்டுமென்று பிரார்த்திக்கவுமில்லை! தனக்கே தெரியாத ஒரு ஆவேசத்தின் மேலே இப்படி மீராபாயைப்போல ஆசாரத்துக்கு வேறேயாகப் போனவர்கள் நமக்கு மாடல் இல்லை.

நன்றாக ஸித்தாந்தங்களை அறிந்து தர்க்கம் பண்ணி நிலைநாட்டுகிற ஸாமர்த்தியத்தையும் இப்பேர்ப்பட்ட அதீத அநுபவத்தோடு பெற்றிருந்த சில மஹான்களும் குலாசாரத்துக்கு வேறேயாகப் போயிருக்கிறார்கள். பிற்காலத்தில் ஹரதத்த சிவாசாரியார் என்று சைவத்தில் உயர்ந்த ஸ்தானம் பெற்ற ஒருவர் கஞ்சனூர் என்ற ஊரில் வைஷ்ணவராகப் பிறந்தவர்தான். ஆனால் அவர் கொதிக்கிற மழுவைக் கையில் பிடித்துக் கொண்டு சிவ உத்கர்ஷத்தை [மேன்மையை] ஸ்தாபித்து, சைவராக மாறியிருக்கிறார். திருமழிசையாழ்வார் என்கிறவர் சிவ வாக்கியர் என்றே பெயர் வைத்துக்கொண்டு, சிவபரமாகப் பாடின ஸித்தர்தான் என்றும், அப்புறம் பன்னிரண்டு ஆழ்வார்களிலேயே ஒருத்தராகிவிடுகிற அளவுக்குப் பெரிய விஷ்ணுபக்தராய்ப் போய்விட்டார் என்றும் கதை இருக்கிறது. இதெல்லாம் ஜெனரல் ரூல் இல்லை எக்ஸெப்ஷன்தான். அது ரொம்பவும் அபூர்வமாகத்தான் ஏற்பட்டிருக்கிறது. இப்போது அதை நமக்கு எக்ஸாம்பிள் என்று எடுத்துக் கொண்டால் எக்ஸெப்ஷன்தான் ரூல் என்றாகிவிடும்!

குமாரிலபட்டர் இருந்தார்* அவர் ஒரு ஸந்தர்ப்பத்தில் பௌத்தர்களோடேயே இருந்து அவர்கள் மாதிரியே வாழ வேண்டியிருந்தபோதுகூட அத்யாவசியமான (வைதிக) நித்ய கர்மாக்களை மட்டும் ரஹஸ்யமாகப் பண்ணிக் கொண்டிருந்தாராம். கூன் பாண்டியன் சமணனாகி விட்டபோது அவனுடைய பத்னி மங்கையர்க்கரசி ரஹஸ்யமாகவே வஸ்திரத்துக்குள்ளே விபூதி இட்டுக் கொள்வாளாம் முழுக்க நம்முடைய மதத்திலேயே அவர்கள் கன்விக்ஷன் உள்ளவர்களாயிருந்தாலும் force of circumstance-ல் [சூழ்நிலையின் நெரிசலில்] மதாந்தரத்தை அநுஸரிப்பவர்களைப்போல வெளியில் காட்டிக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் பிற்காலத்தில் இவர்களே ஹிந்து மதம் புது ஜீவனோடு எழும்புவதற்குக் காரணமாயிருந்திருக்கிறார்கள். நம் தேசத்தில் வடக்கே பௌத்தம் தலைசாய்வதற்கு முக்கிய காரணமாயிருந்தவர் குமாரிலப்பட்டர். அவர் குமாரஸ்வாமியின் அம்சம். அதேபோலத் தென்தேசத்தில் ஜைனம் நலிந்து வைதிக மதம் புத்துயிர் பெறக் காரணமாயிருந்த ஸுப்ரம்மண்ய அவதாரந்தான் ஞானஸம்பந்தரென்றால், அந்த ஞானஸம்பந்தர் இப்படிப்பட்ட பெருமையை கொள்வதற்குக் காரணமாக அவரை மதுரைக்கு வரவழைத்தது மங்கையர்க்கரசிதான். அவளை அறுபத்துமூன்று நாயன்மார்களிலேயே ஒன்றாகச் சேர்த்திருக்கிறது. அதாவது குமாரிலபட்டர், மங்கையர்க்கரசி ஆகியவர்களும் நம் லெவலுக்கு ரொம்பவும் மேலேயிருந்தவர்கள். ஆனாலும் குமாரிலபட்டர் குலாசாரத்தை விட்டு பௌத்தர்களின் ஆசாரத்தைக் கொஞ்சகாலம் அநுஸரித்தாரென்றால் அது அவர்களுடைய ஸித்தாந்தங்களை ஒன்றுவிடாமல் தெரிந்து கொண்டு, அப்புறம் அதற்குப் பதிலுக்குப் பதில் சொல்லி, ஹிந்து மதத்தை – அதாவது குலாசாரத்தை – இன்னும் நன்றாக நிலைநாட்ட வேண்டுமென்பதற்காகவே நல்ல உத்தேசத்தோடேயே இப்படிச் செய்ததுங்கூடப் பாபம் என்று நினைத்து, ஸுப்ரம்மண்ய அம்சமேயான அவ்வளவு பெரியவர் பிற்காலத்தில் பிராயச்சித்தமாக தம்மைச் சுற்றி உமியைக் கருக்கிக்கொண்டு அதிலேயே கொஞ்சங் கொஞ்சமாகப் பிராணத் தியாகம் செய்தார். குலாசாரத்தை விட்டதால் பதிதனாவதற்குப் பதில் இப்படி கோர மரணம் ஏற்படுத்திக் கொள்வதே மேல் என்று அவர் காட்டினது தான் நமக்குப் படிப்பினையே தவிர, நடுவிலே அதை விட்டது அல்ல. மங்கையர்க்கரசி புருஷன் வழியைப் பத்னி மீறவே கூடாது என்பதற்காகத்தான் அவன் ஜைனனாகி விட்டபோது, தானும் நம்முடைய குலாசாரத்தைத் தைரியமாக வெளிப்பட அநுஸரிக்காமலிருந்தது; தன் இஷ்டப்படி நடக்கவேண்டும் என்று அல்ல.


* ” தெய்வத்தின் குரல்” முதற்பகுதியிலுள்ள ‘முருகனின் வடநாட்டு அவதாரம்‘ என்ற உரை பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is முந்தைய உரைத் தொடர்பாக ஒரு விளக்கம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  மதாபிமானிகளின் கடமை
Next