ஆசாரத்தில் ஸாமான்ய தர்மங்கள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

வெளித்தூய்மையான ‘சௌச’த்தையே ஆசாரம் என்பது முக்கியமாகக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. மடி-விழுப்புதான் ஆசாரத்தில் முக்கியமாயிருக்கிறது என்பதால் சௌசம் இதில் பிரதானம் என்பது வாஸ்தவந்தான். இந்த ‘சௌசம்’ ஐந்து ஸாமானிய தர்மங்களில் நாலாவதாக வருகிறது. எல்லா ஜாதியாருக்கும், ஸகல ஜனங்களுக்குமான பொது அறங்களை மநுஸ்மிருதி ‘ஸாமான்ய தர்மங்கள்’ என்ற ஐந்தாகச் சொல்லி, இவற்றில் முதலில் அஹிம்ஸை, அப்புறம் ஸத்யம், மூன்றாவதாக அஸ்தேயம் (திருடாமலிருப்பது, அதாவது பொருளாசை பிடித்தலையாமலிருப்பது) என்பவற்றையும், அப்புறம் ‘சௌசம்’ என்கிற தூய்மையையும் சொல்லிவிட்டு, ஐந்தாவதாக இந்திரிய நிக்ரஹத்தை (புலனடக்கத்தை) விதித்திருக்கிறது*. ஆசாரம் என்பது பெரும்பாலும் இதில் ‘சௌச’த்தின் கீழ் வருவதாகவே தோன்றினாலும், சாஸ்திரங்களை ஆராய்ந்து ஆலோசித்துப் பார்த்தால் ஐந்து தர்மங்களையுமே ஆசாரம் என்பது தழுவுகிறது என்று தெரியும். எப்படியென்று பார்க்கலாம்.

ஆஹார சுத்தியைப் பற்றி ஆசாரத்தில் சொல்கிற போது மாம்ஸ போஜனம் கூடாது என்கிறது. இதனால் ஸாமான்ய தர்மங்களில் முதலாவதான அஹிம்ஸையை ஆசாரமும் சொல்வதாக ஆகிறது. “ஸத்யான் நாஸ்தி பரோ தர்ம:” என்று தர்மங்களின் உச்சியில் ஸத்யத்தை வைத்திருப்பதால் ஸத்யமும் ஆசாரமாய் விடுகிறது ஆசாரத்திலேயே ஸத்யமும் இருக்கிறது என்பதற்கு இன்னொன்றும் சொல்கிறேன். ராஜதண்டனைக்கு ஆளாகி ஒருத்தன் ஜெயிலுக்குப் போனால் அவன் தோஷியாகி விடுகிறான் (தோஷமுள்ளவனாகி விடுகிறான்); பிராயசித்தம் பண்ணிக்கொண்டாலொழிய அவனை ஸமூஹ ப்ரஷ்டம் செய்துவிட வேண்டுமென்பது ஒரு ஆசாரவிதி. தர்மராஜ்யம் நடந்துவரும் காலத்தில் – சாஸ்திர காலங்களில் அப்படித்தான் நடந்து வந்தது – வாஸ்தவமாகவே குற்றம் பண்ணினவன்தான் தண்டனை பெற்று ஜெயிலுக்குப் போவான். குற்றம் இரண்டு தினுஸு – ஸிவில், கிரிமினல் என்று. ஸிவில் வியாஜ்யங்கள் என்பவை அநேகமாக ஏமாற்று, மோசடி முதலானவற்றைச் சேர்ந்தவைதான். அதாவது அஸத்யத்துக்காத்தான் ஸிவில் வியாஜ்யங்களின் பேரில் ஒருத்தன் ஜெயிலுக்குப் போவது. இதனாலேயே, ஒருத்தன் ஆசார சாஸ்திரப்படி ஜெயிலுக்குப் போகாமலிருக்க வேண்டுமென்றால் அவன் ஸாமானிய தர்மங்களில் இன்னொன்றான ஸத்யத்தைக் கடைப்பிடித்துத்தான் ஆகவேண்டும். அநேகமாக இப்படி அஸத்யமாக ஏமாற்றுப் பண்ணுவது இன்னொருத்தனுடைய சொத்தை ஏப்பம் விடுவதற்காகத்தானிருக்கும். வாங்கின கடனைத் திருப்பித் தரமாலிருப்பது, பொய்பத்திரம் எழுதி இன்னொருத்தன் பணத்துக்கு பாத்யதை கொண்டாடுவது, குத்தகைப் பணம் கட்டாமலிருப்பது ஆகிய இதெல்லாம் ஸாமானிய தர்மங்களில் மூன்றாவதாயிருக்கிற அஸ்தேயத்தின் கீழ் வந்து விடுகின்றன. கிரிமினல் கேஸ்கள் அடிதடி பண்ணிக் கொலை-கொள்ளை பண்ணுவதற்காக ஜெயில் தண்டனை கொடுக்கின்றன. அடிதடி, கொலை கூடாது என்பதால் அஹிம்ஸையையும் ஆசாரத்தில் implied -ஆக [உட்கிடையாக] க் கொண்டு வந்தாகி விடுகிறது. கொள்ளை, திருட்டு எல்லாம்தான் ஸ்தேயம். இவற்றைச் செய்யாதிருப்பது அஸ்தேயம். பெண்களை மானபங்கப்படுத்துவது, வியபசாரம் முதலானவையும் ஸிவிலாகவோ, கிரிமினலாகவோ குற்றங்களில் வருவதால், ஜெயிலுக்குப் போகக் கூடாது என்ற ஆசாரவிதியே ஐந்தாவது ஸாமான்ய தர்மமான இந்திரிய நிக்ரஹத்தையும் வலியுறுத்துவதாக ஆகிவிடுகிறது. இதுவும் தவிர [இந்திரிய] ஒழுக்கங்கெட்டவர் எந்த சாஸ்திர கர்மாவுக்குமே அனர்ஹர் [தகுதியில்லாதவர்] என்று வியக்தமாகவே அவர்களை ஆசார முறையானது ஒதுக்கி வைத்திருக்கிறது. இதேமாதிரி சௌச விதிகளோடு கூடவே ஸத்யம், தயை, தியாகம், லோப குணமில்லாமை, அஹிம்ஸை முதலானவற்றையும் நேரடியகாவே ஆசார நூல்கள் சிறப்பித்துப் பேசுகிற இடங்களுண்டு இன்னம் அநேக இடங்களில், ‘இன்ன ஆசாரத்தை அநுஷ்டிக்காதவன் வாக்குப் பிரமாணம் தவறினால் என்ன பாபமோ, ஆயிரம் பொய் சொன்னால் என்ன பாபமோ, ஜீவஹிம்ஸை பண்ணினால் என்ன பாபமோ, ஸ்வர்ணஸ்தேயம் [பொன்னைத் திருடுவது] பண்ணினால் என்ன பாபமோ, பரதார கமனம் பண்ணினால் என்ன பாபமோ அப்பேர்ப்பட்ட பாபத்தை அநுபவிப்பான்’ என்று சொல்லியிருக்கும். இங்கே சொன்ன பாப லிஸ்டைப் பார்த்தால் சௌசத்தின் கீழ் வருவதாகவே பெரும்பாலும் தோன்றுகிற ஆசாரமானது அஹிம்ஸை, ஸத்யம், அஸ்தேயம், இந்திரிய நிக்ரஹம் ஆகிய மற்ற நாலு ஸாமானிய தர்மங்களையும் அவலம்பித்து விடுகிறது (நிலைநாட்டி விடுகிறது) என்பது தெரிகிறது.

வித்யாப்யாஸம் செய்கிறவனுக்கு அந்தக் காலம் பூராவும் பிரம்மசர்யத்தை விதித்து (அந்த ஆச்ரமத்துக்கே ‘பிரம்மசர்ய ஆச்ரமம்’ என்றுதான் பெயர் வைத்திருக்கிறது) அப்புறம் கல்யாணமான பின்னால் இன்னின்ன நாளில்தான் தம்பதிகள் ஸங்கமனம் செய்யலாம், பித்ருதிமனம், விரதகாலம் போன்றவற்றில் கூடாது என்றெல்லாம் ஆசார நூல்கள் விதிப்பதால் இந்திரிய நிக்ரஹ விஷயத்தில் அவை ஸ்பெஷல் எம்ஃபஸிஸ் [தனியான அழுத்தம்] கொடுப்பது தெரியும்.

முடிவிலே இந்த ஆசாரம் எல்லாமே சித்த சுத்தியைத்தான் லக்ஷ்யமாகக் கொண்டவை சித்தமலம் நீங்க வழி இந்திரியங்களை அழுக்கு எடுத்து ஒழுக்கத்தில் கொண்டு வருவதன்றி வேறில்லை. தன்னிஷ்டப்படி திரிகிற இந்திரியங்களை ஒரு நெறியில் அடக்கிக் கொண்டு வரவே ஆசாரம் என்பதால் இந்திரிய நிக்ரஹமும் அதுவும் ஒன்றேதான்.

இப்படியாக எல்லா தர்மங்களும் ஆசாரத்துக்குள் வந்து விடுகின்றன.


*.” தெய்வத்தின் குரல்” முதற் பகுதியில் “ஸாமான்ய தர்மங்கள்: அனைவருக்கும் பொதுவானவை” என்ற உரை பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is புறத்திலிருந்து அகத்துக்கு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  தர்மத்துக்கும் ஆசாரத்துக்கும் தொடர்பு
Next