தர்மத்துக்கும் ஆசாரத்துக்கும் தொடர்பு : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இன்னொரு தினுஸாயும் சொல்வதுண்டு அதாவது தர்மம் என்ற மருந்துக்கு ஆசாரம் பத்தியம் என்பார்கள். வியாதி தீர மருந்து மட்டும் சாப்பிட்டால் போதுமா? பத்தியமும் இருக்கணுமல்லவா? நல்ல ஜ்வரம் என்றால் மருந்து சாப்பிட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் பழையது சாப்பிட்டால் என்னவாகும்? மருந்தின் எஃபெக்ட் போய்விடுமல்லவா? அப்படித்தான் குணத்தையும் நடத்தையையும் பொறுத்த தர்ம மருந்தானது வெளித் தூய்மை, சின்னம் முதலானதைக் கொண்ட ஆசாரம் என்ற பத்தியமில்லாமல் பலிக்காது ….. வாஸ்தவத்தில் ஆசாரத்தின் சௌசம் வெளித்தூய்மை மட்டுமில்லாமல் உள்தூய்மைக்குமானதுதான். ஆனாலும் ‘பாபுலர் கன்ஸெப்ஷ’னை (பஹுஜன அபிப்ராயத்தை) யொட்டி இப்படிச் சொன்னேன் …… தர்ம மருந்துக்கு ஆசாரம் எப்படிப் பத்தியம் என்று ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறேன்: பித்ரு தர்ப்பணம் பண்ணவேண்டியது எல்லா ஜாதியாருக்குமான தர்மம். மூதாதையரை ஸ்மரித்து வேதமந்திரங்களையோ, ஸ்லோக ரூபமான மந்திரங்களையோ சொல்லி எள்ளும் தண்ணீரும் இறைக்க வேண்டுமென்பது நம்முடைய பித்ருகடன் தீருவதற்கு மருந்து. இதைப் பண்ணும்போது ஸ்நானம் செய்து, வேஷ்டியைக் கச்சமாய் உடுத்துக் கொண்டு, தெற்கு முகமாகச் செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்கிற ஆசார விதிகள் பத்தியம். குளிக்காமல் உபவீதமாகப் பூணூலைப் போட்டுக்கொண்டு வடக்கு முகமாகத் தர்ப்பணம் பண்ணினால் பலனே கிடைக்காது.

‘தர்மத்துக்கு ஆசாரம் அங்கம்’, ‘தர்மமே ஆசாரம்’, ஆசரத்திலிருந்துதான் தர்மம் பிறக்கிறது (ஆசார: ப்ரபவோ தர்ம:*) என்றெல்லாம் சொல்லும்படியாக தர்மமும் ஆசாரமும் ஒன்றேடொன்று பின்னிக் கொண்டிருக்கின்றன.

தர்மத்தை அநுஸரிப்பவர்களே ஸத்புருஷர்கள் சிஷ்டர்கள் எனப்படுகிறவர்கள், அதனால் ஆசாரத்தை ஸதாசாரம், சிஷ்டாசாரம் என்று சொல்கிறோம். ஆசாரமில்லாமலிருப்பது அநாசாரம்; ஆசாரத்துக்கு விரோதமாகப் பண்ணுவது துராசாரம். ஸஜ்ஜனங்கள் அநுஷ்டிப்பது ஸதாசாரம் என்கிறாற்போல் துர்ஜனங்கள் போகிற வழி துராசாரம் என்றும் சொல்லலாம்.


* விஷ்ணு ஸஹஸ்ரநாம பலச்ருதி

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஆசாரத்தில் ஸாமான்ய தர்மங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  அனைத்தும் அடங்குவது
Next