குலவழக்கையே கொள்க! : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

நம்முடைய பிறப்பு பூர்வ கர்மாவை அநுஸரித்து ஈஸ்வரனாலேயே நிர்ணயிக்கப்படுகிறது என்பதே சாஸ்திரம். அதனால் நாம் ஏதோ ஒரு மதத்தில், ஸம்ப்ரதாயத்தில் பிறந்திருக்கிறோமென்றால், அதுவே கர்மவசாத் ஈஸ்வரனால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்று அதை வரவேற்று, இதைக் கொண்டே நாம் கர்மாவைப் போக்கிக் கொண்டு நம்மை மேம்படுத்திக் கொள்ள முயல வேண்டும். அவரவர்கள் தாங்கள் பிறந்த ஸம்ப்ரதாயத்தையும் குலாசாரத்தையும் ரக்ஷிக்கிற ஆசார்யார்களின் உபதேசப்படி நடந்தாலே போதும். அதன் தத்வங்கள் அபூர்ணமாக இருந்தால்கூடப் பரவாயில்லை. கர்ம சேஷத்தினால் அபூர்ணமாக இருக்கிற இந்த ஜீவனுக்கு அந்த சேஷம் தீர இந்த அபூர்ண ஸமயாசாரமே உதவி பண்ணிவிடும். ஈஸ்வரன் என்று ஒருத்தனிடம் அசையாத நம்பிக்கையும், பக்திவிச்வாஸமும் வைத்து, ”நீ இப்படி ஜன்மா தந்ததால் இந்த ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த ஆசார்யரை ஆச்ரயிக்கிறேன்” என்று அவனிடம் விட்டுவிட்டுத் தன் குலாசாரத்தை அநுஷ்டித்தால் அவன் ஒரு நாளும் கைவிடமாட்டான். எப்படி, எப்போது, எந்த தினஸில் பூர்ண தத்வத்தை இவனுக்குக் கொடுக்க வேண்டுமோ அப்படித் தானே பண்ணி விடுவான். ஆசார்யன் ஈஸ்வர ஸ்வரூபமே என்ற நம்பிக்கை மட்டும் நமக்கு இருந்து விட்டால் போதும். எந்த குருவிடம் நாம் பிரபத்தி செய்தாலும் (சரணாகதி அடைந்தாலும்) ஈஸ்வரனிடம் பிரபத்தி செய்ததாக ஏற்பட்டு, பலன் ஸித்தித்துவிடும். உபநிஷத் சாந்தி பாட க்ரமத்தில் இதுதான் சொல்லிக் கொடுத்திருக்கிறது.

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்

யோ வை வேதாச்ச ப்ரஹிணோதி தஸ்மை |

தம் ஹ தேவம் ஆத்ம புத்தி ப்ரகாசம்

முழுக்ஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே ||*

ஒரு ‘ஸிஸ்ட’த்துக்குக் கட்டுப்படாவிட்டால் ஒரு மேதாவியின் ஸாமர்த்தியத்தாலே அனர்த்தம்தான் ஏற்படும். இப்படிப்பட்ட மேதாவியால்தான் முட்டாளை விட ஜாஸ்திக் கெடுதல் உண்டாகும். இதை நம் ஆசார்யாள் ”உபதேச ஸாஹஸ்ரீ” யிலே சொல்லி, ஒரு ஸம்பிரதாயத்தில் வராத எவனும் மூர்க்கனுக்கு ஸமம்தான் என்கிறார். அதாவது ஞானத்துக்குப் புஸ்தகப் படிப்பைவிட குருபக்தி தான் முக்கியம்.


* கருத்து: எவன் ஆதியில் பிரம்மாவைப் படைத்து அவருக்கு வேதங்களைக் கொடுத்தானோ அந்த தேவ தேவனே நம் புத்தியைப் பிரகாசிக்கச் செய்பவன். முக்தி நெறியில் விழைவு கொண்ட நான் அவனையே சரண் புகுகிறேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஆசானை ஈசனாக
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  தெய்வங்களும் சீடர்களாக
Next