நமக்கெல்லாம் குருபக்தி போதமாட்டேனென்கிறது. ஆனால் நம் ஸம்பிரதாயங்களுக்கு மூலமான குருமார்களாகவும் முக்யமான குருமார்களாகவும் இருந்த மஹா பெரியவர்களோ தாங்களே தங்கள் குருமார்களிடம் அபாரமான பக்தி செலுத்தியிருக்கிறார்கள்.
ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி. அவருக்கும்கூட ஒரு குருவிடம் தாம் பணிவாக இருந்து, சிஷ்யனாகி, உபதேசம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று இருந்திருக்கிறது. பரமேஸ்வரனான அவரே தம் சொந்தக் குழந்தையிடம், கைகட்டி, வாய் பொத்திப் பிரணவோபதேசம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
ஞானமே வடிவானவள் அம்பாள். அவளும் பதியான ஈஸ்வரனிடம் சிஷ்யையாகி உபதேசங்கள் வாங்கிக் கொண்டிருக்கிறாள். அநேக ஆகம, தந்த்ரங்கள் ஈஸ்வரன் அம்பாளுக்கு உபதேசம் பண்ணினவைதான்.
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே |
ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வராநநே ||
என்பதாக (மும்முறை ராமநாமா சொன்னால் அது ஸஹஸ்ர நாமம் சொன்னதற்கு ஸமானம் என்று) ராம நாம மஹிமையைச் சொல்லும் ஸ்லோகம் அம்பாளுக்கு ஈஸ்வரன் உபதேசித்ததுதான் என்று ‘விஷ்ணு ஸஹஸ்ர நாமம்’அறிந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.
ஜம்புகேஸ்வரம் (திருவானைக்கா) போன்ற பல க்ஷேத்ரங்களில் அம்பாள் ஈஸ்வரனிடம் உபதேசம் வாங்கிக் கொள்வதாக ஸ்தல புராணங்களில் இருக்கிறது.
மஹாவிஷ்ணு ராம, க்ருஷ்ண அவதாரங்களில் வஸிஷ்டர், ஸாந்தீபினி ஆகியவர்களிடம் பரம விநயத்தோடு குருகுலவாஸம் செய்திருக்கிறார். க்ருஷ்ண பரமாத்மா ஸுதாமா (குசேலர்) என்கிற ஸப்ரஹ்மசாரியுடன் (கூடப் படித்த மாணவருடன்) காட்டுக்குப் போய் இடி மழையில் ஸாந்தீபனி குருவுக்காக ஸமித்து (சுள்ளி) பொறுக்கிக் கொண்டு வந்திருக்கிறார். ராமர் வஸிஷ்டர் சொன்ன ப்ரகாரமேதான் ராஜ்யபாரம் பண்ணினார். ”ராஜ்யபாரம் பண்ண வரமாட்டேன்”என்று சித்ரகூட பர்வதத்தில் அவர் பரதனோடு வந்த வஸிஷ்டரிடம் மறுத்தபோதுகூட, அவரிடம் எத்தனை பணிவுடன் தெரிவிக்கலாமோ அப்படியே செய்து அவருடைய ஸம்மதத்தைப் பெற்றபின் தான் அந்த முடிவை நடத்திக் காட்டினார்.
குரு பரம்பரையில் தத்தாத்ரேயருக்கு ரொம்பவும் உன்னதமான ஸ்தானம் உண்டு. அப்படிப்பட்டவரோ மண்ணு, தண்ணி, மலைப்பாம்பு, குளவி, ஒரு தாஸி, ஒரு வேடன், ஒரு சின்னக் குழந்தை இவை உள்பட இருப்பது நாலு பேரைத் தம்முடைய குரு என்று சொல்லிக் கொண்டு அவர்களிடமிருந்து தாம் இன்னின்ன பாடம் கற்றேன் என்று (பாகவதத்தில்) சொல்கிறார்.