ஆத்ம திருப்திக்கே ஆசாரம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

பசுவைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். பசுவின் முகத்தில் மஞ்சள் குங்குமமிட்டு கொம்பிலே குஞ்சலம் கட்டி, கழுத்திலே மாலைகள் போட்டு மணிகள் கட்டினால் பார்க்க ரொம்ப அழகாகத்தானிருக்கிறது. நமக்குப் பல தினுஸில் உபகாரம் பண்ணும் பசுவைப் போற்றுவதில் psychological satisfaction இருப்பது போல இப்படி அந்த கோமாதாவை அலங்காரம் பண்ணிப் பார்ப்பதில் artistic satisfaction [கலையுணர்வுத் திருப்தி] -ம் உண்டாகிறது. ஆனாலும் பசுவுக்கு அர்ச்சனை பண்ணுவது என்றால் அப்போது அதன் முகத்திலே பண்ணாமல் பிருஷ்ட பாகத்திலே [வால் புறத்திலே] தான் அர்ச்சிக்க வேண்டும். நமக்கு அது பிடிக்கிறதா, பிடிக்கவில்லையா, இப்படிப் பண்ணுவதற்குக் காரணம் உண்டா, இல்லையா என்ற கேள்விக்கு இடமில்லை. இப்போது நமக்கு ஒவ்வொன்றாகக் காரணம் தெரிகிற அநேக ஆசார விதிகளை ஏற்படுத்தின ரிஷிகள், காரணமில்லாமலா, ‘பசுவின் முகத்தில் பூஜை பண்ணாதே, பின்பக்கம் பண்ணு; அங்கேதான் லக்ஷ்மி வாஸம் பண்ணுகிறாள்’என்று சொல்வார்கள்? நம்பிப் பண்ண வேண்டும். அப்போது அங்கே வாஸம் பண்ணும் லக்ஷ்மி தெரிவாள். ஸைகலாஜிகலாவோ, வேறு விதங்களிலோ நம்மை ‘ஸாடிஸ்ஃபை’ பண்ணாவிட்டாலும் ஸரி, நாம் சாஸ்திரங்களுக்கு அடங்கி, அடி பணிந்து, அதன் பிரகாரம்தான் செய்ய வேண்டும். இந்த எல்லா ஸாடிஸ்ஃபாக்ஷன்களையும்விட ஆத்ம-ஸாடிஸ்ஃபாக்ஷனுக்காகத்தான் சாஸ்திராசாரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதுதான் எக்காலத்துக்குமான ‘ஸாடிஸ்ஃபாக்ஷன்’. மற்ற ‘ஸாடிஸ்ஃபாக்ஷ’னெல்லாம் அடுத்த நிமிஷமே பறந்து போய் ‘டிஸ்ஸாடிஸிஃபாக்ஷனில்’ கொண்டு விடுபவை தான். ஆத்மா நிறைந்து, திருப்தியாய், ஸாடிஸ்ஃபை ஆகவேண்டுமென்றால் பாபத்தைப் போக்கிக் கொண்டு புண்யத்தை ஸம்பாதித்துக் கொண்டால்தான் முடியும். இதற்காக நம்முடைய மற்ற ஸாடிஸ்பாக்ஷன்களைத் தியாகம் பண்ணிக் கஷ்டப்படவும் தயாராகத்தான் இருக்க வேண்டும்.

கோவிலுக்குப் போகிறோம். வழியிலே பிரஸவ ஆஸ்பத்திரியில் ஸஹோதரிக்குப் பிள்ளை பிறந்திருக்கிறது. குழந்தையைப் பார்க்க ஆசையாய்த்தானிருக்கும். ஸஹோதரியும் ரொம்ப ஸந்தோஷப்படுவாள். ஸைகலாஜிகல் ஸாடிஸ்ஃபாக்ஷன், மநுஷ்யாபிமானம் இவற்றைக் கொண்டு பார்த்தால் பிரஸவ ஆஸ்பத்திரிக்குள் போகத்தான் வேண்டும். ஆனால் அங்கே போய்வந்தபின் ஸ்நானம் பண்ண முடிந்தால்தான் கோவிலுக்குப் போகலாம். ஸ்நானம் பண்ணாமல் பிரஸவத் தீட்டோடு கோவிலுக்குப் போகப்படாது. ‘கோவிலில் விசேஷமாச்சே, போகத்தான் வேணும்’ என்றால், இப்போது நமக்கு ஸ்நானம் பண்ண வசதி இல்லாவிட்டால், பிரஸவித்த ஸஹோதரியைப் பார்க்காமலேதான் போக வேண்டும். அந்தத் தியாகம் பண்ணத்தான் வேண்டும். சாஸ்திரம் மநுஷ்யாபிமானமில்லாதது என்று குற்றம் சொல்வது நியாயமில்லை. அப்படிச் சொன்னால் அந்த ஆஸ்பத்திரியில் அமலாகிற வைத்ய சாஸ்திரத்தையும் குறை சொல்லத்தான் வேண்டும். ஏன்? அங்கே ஆபரேஷன் தியேட்டரில் நம்மை உள்ளே விடுவார்களா? நமக்கு ரொம்பவும் பிரியமான பந்துவுக்குப் பிராணாபத்தான ஆபரேஷன், அப்போது பக்கத்திலிருக்க வேண்டும். இரண்டு மணி-மூன்று மணி பெரிய ஆபரேஷன் நடக்கிற வரை இன்னது நடக்கிறது என்று தெரியாமல் வெளியிலே திக்கு திக்கென்று உட்கார்ந்திருக்க முடியாது என்றால் டாக்டர் ஒப்புக் கொள்வாரா? உடலின் க்ஷேமத்தைக் குறித்து டாக்டர் சொல்வதை ஒப்புக்கொண்டு, அவர் சொல்வது கடுமையாக இருந்தாலும் அவருடைய நல்லெண்ணத்தை மதித்து, அவரைத் திட்டாமல் தியேட்டருக்குள் போகாமலிருக்கிறோமென்றால் (நம் ஸைகலாஜிகல் ஸாடிஸ்ஃபாக்ஷனை ஸாக்ரிஃபைஸ் பண்ணுகிறோமென்றால்) அதே ஆஸ்பத்திரிக்கு, பிற்பாடு ஸ்நானம் பண்ணும் வசதி இருந்தாலொழியப் போகக்கூடாது என்று உயிரின் க்ஷேமத்தைக் கருதி சாஸ்திரகாரர் சொல்வதையும் திட்டாமல் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

‘மற்ற தேசங்களில் பிரஸவத் தீட்டு பார்க்கிறார்களா, பஹிஷ்டா [மாதவிடாய்] விதிகளை அநுஸரிக்கிறார்களா? இன்னம் நம்முடைய மற்ற ஆசாரங்கள், ஸம்ஸ்காரங்கள் இதுகளைப் பின்பற்றுகிறார்களா?’ என்று கேட்பதில் அர்த்தமில்லை. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் இப்படியிருக்கிற மற்ற எல்லா தேசங்களும் ஆத்ம ஸம்பந்தமான ஞானத்திலும், அப்படிப்பட்ட ஞானத்தை ஸம்பாதித்துக் கொண்டவர்களிலும் நம் தேசத்தைவிட ரொம்பவும் பின்தங்கியிருந்து வந்திருக்கின்றன என்று அவர்களே ஒப்புக்கொள்வதுதான். நித்ய சிரேயஸ் வேண்டும், ஈஸ்வரனை அடைய வேண்டும், ஆத்மஞானம் பெற வேண்டும் என்றால், அந்த தேசம்-இந்த தேசம், அந்தக் காலம்-இந்தக் காலம் என்று கால, தேசங்களைச் சொல்லிக் கொண்டிருக்காமல் சாஸ்திரப்படி செய்தால்தான் ஸித்தி கிடைக்கும்.

அதுவும் தவிர லோகத்திலேயே இந்த பாரத தேசத்தைத்தான் ஈஸ்வரன் கர்மபூமியாக வைத்திருக்கிறான். ஒரு வீடு என்றால் அதில் சமையலறை, பூஜையறை, படுக்கையறை என்று வெவ்வேறாக இல்லையா? ஒரு ஃபாக்டரி என்றால் அதில் யந்திரசாலை, நிர்வாஹஸ்தர் ஆஃபீஸ், கான்டீன் என்று தனித்தனியாக இல்லையா? இவற்றில் ஒன்றில் செய்வதை இன்னொன்றில் செய்வார்களா? அப்படி பகவான் லோகத்தில் வைதிக கர்மாநுஷ்டானத்துக்காக பாரத பூமியைத்தான் வைத்திருப்பதால் இங்கே மாத்திரம் இத்தனை சாஸ்திரங்களும் ஆசாரங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

இதிலே கடுமையாகத் தோன்றுவதும் நம்முடைய நித்ய ஸெளக்யத்தை உத்தேசித்துக் கருணையினால் சொன்னதுதான்.

நித்ய ஸெளக்யமான மறுமையின்பத்தோடு இம்மையின்பத்தையும் அது மறுமைக்கு பாதகமாக இல்லாதவரையில் சாஸ்திரங்கள் அளிக்கத்தான் செய்கின்றன. நோய் நொடியில்லாமலிருக்க வேண்டும்;ஜனங்களெல்லாம் ஸெளஜன்யமாகக் கூடி வாழ வேண்டும்; தப்பு தண்டாக்களில் மாட்டிக்கொண்டு கஷ்டப்படக் கூடாது என்று இம்மைப் பயன்களைக் கருதியும் அநேக ஆசாரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பலர் நினைக்கிறபடி ஒரே நிர்தாக்ஷிண்யமாயில்லாமல், ஸைகலாஜிகலாகவும், மற்ற ரீதியிலும் அநேக இடங்களில் விட்டுக் கொடுத்தும் விதிமுறைகள் செய்யப்பட்டிருக்கின்றன.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is விஞ்ஞானத்துக்குக் கட்டுப்பட்டதல்ல
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஆசாரங்களில் பாகுபாடு: குறள் தீர்ப்பு
Next