ஆதர்ச நிலையும் நடைமுறை ஸாத்தியமும் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஸமூஹத்தில் ஸகல வர்க்கத்தினருக்கும் ‘ஐடியல்’  தர்மங்களை வைத்தால் ஒருவரும் அதைப் பின்பற்றாத நிலைதான் ஏற்படும் என்பதைப் புரிந்துகொண்டு நம் சாஸ்திரம் ‘ரூல்’களை வித்தியாஸப்படுத்திக் கொடுத்திருக்கிறது. இதைக் கண்கூடாக மற்ற மதங்களின் விஷயத்தில் பார்க்கிறோம்.

யுத்தம் க்ஷத்ரிய தர்மமென்றும், அஹிம்ஸை பிராம்மண தர்மம் என்றும் வைத்த நம் மதஸ்தரைவிட, ‘ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தையும் காட்டு’என்று எல்லாருக்கும் பொதுவாக வைத்தவரின் மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் ஜாஸ்தி யுத்தம் செய்து, தேசம் தேசமாக, கண்டம் கண்டமாகத் தங்கள் ஆதிக்கத்தைப் பரப்பி, அணுகுண்டு வரையில் கொண்டுபோய் விட்டிருக்கிறார்கள்! ‘க்ரைஸ்ட், புத்தர் மாதிரி பிரேமையை, அஹிம்ஸையை நம் மூல புருஷர்கள் எங்கே சொன்னார்கள்?’ என்று நாமே சொல்லிக் கொண்டிருந்தாலும் historical fact [சரித்ர உண்மை] நாம்தான் பரம ஸாத்விகர்களாக, சாந்தர்களாக, எல்லா மதஸ்தரையும் அரவணைத்துக் கொண்டு போகிறவர்களாக இருந்திருக்கிறோமென்பது. இப்போதும் அந்த அணுகுண்டுக்காரர்களையே நாம் அஹிம்ஸா மார்க்கத்தால்தான் வெளியேறி ஸ்வதந்திரம் பெற்றதாகவும் பெருமையடித்துக் கொள்கிறோம். ஐடியலை எல்லோருக்கும் ரூலாக வைக்காமல், குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் வைப்பதாலேயே அதை அவர்கள் தனிப் பெருமிதத்தோடு, கவனத்தோடு ரக்ஷிக்கிறார்கள். இப்படிச் சிலர் இருப்பதைப் பார்த்து இந்த உத்தம உதாரணத்தாலேயே அந்த ஐடியலைத் தங்களுக்கு ரூலாகக் கொள்ளாதவர்களுங்கூட ஓரளவுக்கு அதைத் தாமாகவே எடுத்துக் கொண்டு பின்பற்றி, ஸமூஹம் முழுவதிலுமே அதன் ‘ஸ்பிரிட்’ பிரகாசிக்கும்படிப் பண்ணுகிறார்கள். இதனால்தான் மற்ற மத ஸமூஹங்களைவிட நம் ஸமூஹமே ஆதியிலிருந்து தர்ம வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாய் இருந்து வந்திருக்கிறது.

திருஷ்டாந்தமாக, ஐடியல் அஹிம்ஸையை ஸகலருக்கும் வைத்த புத்தரின் மதத்தில்தான் இன்றைக்கு ஹிந்துக்களைவிட ஜாஸ்தி ‘நான்-வெஜிடேரியன்’கள் இருக்கிறார்கள்! ஹிந்து மதத்தில் பிராம்மணனைத் தவிர மற்றவர்களுக்கு மாம்ஸ போஜனம் கூடாதென்று ரூலே இல்லாமலிருந்தும் இங்கேதான் ஜாஸ்தி வெஜிடேரியன்கள் என்பதாகயிருக்கிறது! பௌத்த மதஸ்தர்களிலோ இன்று பிக்ஷுக்கள் உள்பட எல்லோருமே மாம்ஸம் சாப்பிடுபவர்களாக இருப்பதை அந்நிய தேசங்களில் பார்க்கிறோம்.

பலவிதமான தொழில்களில் ஈடுபட்டுள்ள எல்லாருக்கும் ஏகப்பட்ட ஆசாரங்களைக் கொடுத்துக் கஷ்டப்படுத்தக்கூடாது என்ற தாக்ஷிண்யத்தினாலேயே ஜாதி ஆசாரங்கள் என்று வித்யாஸமாகப் பண்ணிக் கொடுத்திருக்கிறார்கள் என்று ஆரம்பித்தேன். அது திருக்குறளில் கொண்டு விட்டு விட்டது. நல்ல விஷயந்தான். திருவள்ளுவர் பரம வைதிகர் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.

நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழவு முதலான தொழிலைச் செய்கிறவனிடம், ‘இத்தனை கவளத்துக்கு மேல் சாப்பிடாதே; அதுவும் இத்தனை நேரத்துக்கு முந்தியும் சாப்பிடாதே, இன்ன நேரத்துக்குப் பிந்தியும் சாப்பிடாதே; ஏகாதசியில் காயக் காயக் கிட; மூன்று வேளையும் குளி’ என்றெல்லாம் பிராம்மண ஆசாரத்தைச் சொன்னால் அவன் எத்தனை கஷ்டப்படுவான்? இப்படி நல்லெண்ணத்தின் பேரில் சொன்னதையே, ‘பிராம்மணனுக்கு மாத்திரம் நிறைய ஆசாரமென்றால், அவன் மட்டும்தான் புண்யலோகம் போகும்படியாகப் பக்ஷபாதம் பண்ணியிருப்பதாகவே அர்த்தம்’ என்கிறார்கள்.

‘அஹிம்ஸையானது சித்த சுத்திக்கு ரொம்பவும் உபகாரம் பண்ணுகிறது என்கிறீர்கள். ஆனால் பிராம்மணனுக்கு மட்டும் அஹிம்ஸை விதி கட்டாயமானது, மற்றவர்களுக்கு இல்லை என்கிறீர்கள். அப்படியானால் பிராம்மணன் மாத்திரம் சித்த சுத்தி பெற்றால் போதும் என்று பக்ஷபாதம் பண்ணினதாகத்தானே ஆகிறது?  ‘எருவுக்குத் தகுந்த பயிர்;  உணவுக்குத் தகுந்த உயிர்’  என்று சொல்லிவிட்டு, பிராம்மணனுக்கு மட்டும் அஹிம்ஸா மரக்கறி போஜனம், மற்றவர்களுக்கு மாம்ஸம் பரவாயில்லை என்றால் இது  ‘டிஸ்க்ரிமினேஷன் ‘ இல்லாமல் வேறென்ன?’  என்று கேட்கலாம்.

அஹிம்ஸா போஜனத்தால் ஸத்வ குண அபிவிருத்தி ஏற்படுவதைக்கொண்டு அதைச் சித்த சுத்திக்காகப் பொதுவில் விதிதித்திருக்கிறது. ஆனால் பகவானின் லீலையில் இந்த லோகத்திலேயே தர்ம ரக்ஷணார்த்தம் ராஜஸ, தாமஸ காரியங்கள்கூட நடக்க வேண்டியிருக்கிறது தப்பு செய்கிறவனைத் தண்டிக்க வேண்டியிருக்கிறது. தர்மத்துக்காக யுத்தம் பண்ணிகொன்று குவிக்கவும் வேண்டுமென்று தானே பகவான் அர்ஜுனனுக்கு உபதேசம் பண்ணினார்? இது ராஜஸ குணம்தான். உழுவது, கொத்துவது, வெட்டுவது முதலான கார்யங்களை ஸமூஹ க்ஷேமத்துக்காகப் பண்ண வேண்டியிருக்கிறது. இப்படிக் கடுமையாக உழைப்பவர்கள் அடித்துப் போட்டாற்போல தூங்கவேண்டும். இது தாமஸம்தான். ஆனாலும் லோக க்ஷேமார்த்தமாக ஏற்பட்ட இந்தக் கார்யங்களைச் செய்யும்படிப் பிறப்பினாலேயே ஈஸ்வராக்ஞை பெற்றிருப்பவர்கள் இந்த ராஜஸ தாமஸங்களை மேற்கொள்வதால் அது அவர்களுக்கு தோஷமாகாது.

ஸமூஹத்துக்காகச் செய்வதால் அந்தத் தியாகத்தினாலேயே, செய்கிற கார்யம் புண்யமாகிறது. இவர்கள் ராஜஸ, தாமஸ குணத்துக்கு அநுகூலமான அசைவ போஜனம், பழையது மாதிரி ஆசார விரோதமான சாப்பாட்டு தினுசு முதலியவற்றைச் சாப்பிடுவதிலுள்ள தோஷங்கூட அவர்களால் ஸமூஹத்துக்கு ஏற்படுகிற உபகார புண்யத்தில் அடிபட்டுப் போய்விடும்.

“எருவுக்கு தகுந்த பயிர். உயிரும் பயிர் மாதிரிதான். அதனால் ஆஹார விஷயத்தில் ரொம்ப கவனம் வேண்டும். உயிர் என்றால் சரீரம் மூச்சு விடுவது மட்டுமில்லை. மநுஷ்யனுக்கு மனஸில் உயர்வு இல்லாவிட்டால் அவன் உயிரிருந்தும் பிணம்தான். மனஸில் உயர்வுதான் ஜீவனுக்கு உயிர்நாடி” என்பெதல்லாம் ஸரிதான். ஆனால் மனஸின் உயர்வை சரீரத்தில் செலுத்தி ஸமூஹத்துக்கான பலதரப்பட்ட கார்யங்களையும் பண்ணவேண்டியிருக்கிறதே! ஒருத்தன் தர்ம ரக்ஷணத்துக்காகக் கத்தியைப் பிடித்துக் கொண்டு சண்டை போட வேண்டியிருக்கிறது. தர்மரக்ஷணை என்பது மனஸின் உயர்த்தி. அதுவே இவனுடைய கார்யத்தில் வருகிறபோது யுத்தம் என்று ஹிம்ஸை மாதிரி ஆகவேண்டியிருக்கிறது. ஆனால் இவன் ஜன ஸமூஹம் தர்மத்தில் அழிவடையாமல் காப்பாற்றுகிற உயர்ந்த நோக்கம் கொண்டவன். “க்ஷதாத் கில த்ராயதே”* – ஜன ஸமூஹம் துஷ்டர்களால் அழியாமல் காப்பாற்றுகிறான் அல்லவா? -அதனாலேயே க்ஷத்ரியன் என்று இவனுக்குப் பெயர். இந்த உயர்ந்த நோக்கம் இவனுக்குப் பெயர். இந்த உயர்ந்த நோக்கம் இவனுக்கு இருப்பதால், இவனுக்கு யுத்தத்தில் உத்ஸாஹமும் நல்ல சரீரக் கட்டும் ஏற்படுவதற்காக மது மாம்ஸாதிகளை ஓரளவு சாப்பிட்டுவிட்டுப்போகட்டும். அது அவன் சூழ்நிலையில் அவனுக்குரிய தொழிலால் அவன் பெறுகிற ஆத்ம வளர்ச்சியைக் கெடுக்காது என்றிப்படி சாஸ்திரம் வைத்திருக்கிறது.

ஆனால் இப்படிப்பட்ட க்ஷத்ரியர்களிலும் ராஜரிஷிகள் என்று கொண்டாடும்படியாக அஹிம்ஸா தர்மம் முதலான எல்லாவற்றிலும் சிரேஷ்டர்களாகப் பலர் இருந்திருக்கிறார்கள். அஹிம்ஸை என்றவுடனேயே நினைவுக்கு வருகிற புத்தர், மஹாவீரர் இரண்டு பேருமே க்ஷத்தரியர்கள்தானே? புராண இதிஹாஸங்களைப் பார்க்கும்போது அநேக ராஜாக்கள் விருத்தாப்பியத்தின் போது ராஜ்யத்தைப் புத்திரனிடம் ஒப்படைத்துவிட்டு, காட்டுக்குப் போய் தபஸ் பண்ணினார்களென்று தெரிகிறது. அப்போது இவர்கள் சாக போஜனம்தான் பண்ணியிருக்க வேண்டும். ‘ஐடியல்’ ஒன்று எல்லாருக்கும் விதியாயில்லாமல் ஒரு பிரிவுக்கு மட்டும் ரூலாக இருந்ததால், தானாகவே மற்றவர்களுக்கும் அதில் பற்றுதல் ஏற்பட்டு அவர்களும் அதை எடுத்துக்கொண்டு, அந்த ஐடியல் ரூல் மற்றவர்களிடமும் பிரகாசித்ததுதான் இதற்குக் காரணம்.

தேசத்தில் பொருளாதார ஸுபிக்ஷம் ஏற்பட வேண்டாமா? இதற்குச் சிலபேர் வியாபாரம், வியவஸாயம், கோரக்ஷை [பசு வளர்ப்பு] செய்ய வேண்டும். வியாபாரத்துக்காகக் கடல் கடந்தும் போக வேண்டியிருக்கும். அப்போதுதான் பொருளாதார மேம்பாடு தேசத்துக்குக் கிடைக்கும். அருளை முக்யமாகச் சொன்னாலும் பொருளையும் வேதமதம் மறக்கவில்லை. அதற்கு எவ்வளவு இடமோ அதைக் கொடுத்துத் தானிருக்கிறது, நாலு புருஷார்த்தத்திலேயே ‘அர்த்தம்’ இருக்கிறது; அறம், பொருள் என்கிறது அதுதான். லோக வாழ்க்கையை ஹிந்துமதம் அலக்ஷ்யப்படுத்துகிறது என்று சொல்வது நியாயமே யில்லாத குற்றச்சாட்டு. நம் மதத்தில் பொருள் வளர்ச்சிக்கென்றே நாலு வர்ணத்தில் ஒன்றை வைத்திருக்கிறது. ஸமூஹத்தில் பொருள் வளர்ச்சியை உண்டாக்குவதான தர்மத்தைப் பண்ணும் இவனுக்கு வைச்யன் என்று பெயர். ‘விச்’, ‘விச்வம்’, ‘வைச்யன்’ எல்லாவற்றுக்கும் ‘ரூட்’ ஒன்றுதான். இவன் லோகம் பூராவும் போய்ப் பொருள் தேடி வரவேண்டியவன். ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது இவனுக்கு வைத்த தர்மம். இவனுக்காகக் கடல் வாணிப்பத்தைப் பெருக்கித் தந்ததில் க்ஷத்ரியர்களான ராஜாக்களுக்கும் பெருமை ஏற்பட்டது. ஸமுத்ரத்தில் பல நாட்கள் போக வேண்டியவனை, பல தேசங்களுக்குப் போக வேண்டியவனை வெஜிடேரியனாகத்தான் இருக்க வேண்டுமென்றால் முடியமா? இவனுடைய சூழ்நிலை, காரியம் இவற்றைப் பொருத்து இவனுக்கும் சாக போஜனந்தான் என்று வைக்காமல் இவனால் ஸமூஹம் பெறுகிற உதவியினாலே இவனுடைய மாம்ஸ போஜன தோஷம் போகட்டுமென்று generous -ஆக இவனுக்கு ‘ரூல்’ போட்டிருக்கிறது. ஆனாலும் என்ன பார்க்கிறோம்? வைச்யர்களில் வடக்கே அநேக ராஜ்யங்களின் பனியாக்கள், தெலுங்கர்களான கோமுட்டிகள், தமிழ் நாட்டுச் செட்டிமார்களில் சுத்தசைவர்கள் ஆகியோர் வெஜிடேரியன்களாகவே இருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆதியில் பல தேசங்களுக்குப் போய் நன்றாகச் செல்வம் ஸம்பாதித்து வந்தபின் வைச்யர்களும் வயஸுக்காலத்தில் ஊரோடு ஸெட்டில் ஆனபோது, தாங்களாகப் பிரியப்பட்டு இங்கே ஐடியலாக பிராம்மணன் பின்பற்றிய அஹிம்ஸா போஜனத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ராஜாக்களைப் போல வ்ருத்தாப்யத்தில் காட்டுக்குப் போய்விடவில்லை. வீட்டிலேயேதான் இருந்து கொண்டிருந்தார்கள். அதனால் இவர்களுடனேயே வஸித்து வந்த இவர்களுடைய பின்தலைமுறையினருக்கும் இவர்களுடைய ஆஹார நியமம் இளவயஸ தொட்டே வந்திருக்கிறது. அதனால் அப்புறம் இவர்களுக்கு சைவபோஜனமே பிறந்தநாள் தொட்டுக் குலவழக்காகியிருக்கிறது.

இப்படியேதான் நாலாம் வர்ணத்திலும் உடல் வருந்தி உழைத்து ஸமூஹத்துக்கு உபகாரம் பண்ண வேண்டிய அவனுக்கு அவனுடைய சூழ்நிலையில் வெஜிடேரியனிஸத்தை வைக்காமல் விட்டிருக்கிறது. ஆனால் காலப்போக்கில் அந்த வர்ணத்தாரிலேயே பலர் உடம்பு வேலைசெய்கிறவர்களாக இல்லாமல், வியாபாரம் வியவஸாயம் முதலியவற்றில் ஈடுபட்டு வளர்ச்சி அடைந்தபோது, தாங்களாகவே சைவ ஆஹாரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வடக்கேயும் சரி, தெற்கேயும் தஞ்சாவூர் ஜில்லாவில் அநேக வேளாளர்கள், திருநெல்வேலியில் பிள்ளைமார் போன்றவர்களும் சரி, பிராம்மணன்கூடத் தோற்றுப்போய் விடுவான் என்கிற அளவுக்குப் பரம சுத்தமான மரக்கறி போஜனம், வ்ரதாநுஷ்டானம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் ‘ஆப்ஷன’லாகச் சிலருக்கு வெஜிடேரியனிஸத்தில் பிடித்தம் ஏற்படுவதற்குக் காரணம் நாலு வர்ணங்களில் பாக்கியுள்ள பிராம்மணனுக்கு அதைக் ‘கம்பல்ஸரி’யாக வைத்திருப்பதுதான். இவன் வேதத்தை ஓதியும் ஓதவித்தும் ரக்ஷிக்க வேண்டியவனாதலால் மந்திர சுத்தியை முன்னிட்டுப் புலால் உண்ணக்கூடாது என்று வைத்தார்கள். இதன் திரை கடல் ஓடியும் திரவியம் சேர்க்கவும் கூடாது என்று ரூல். இவனுக்கு தரித்ரந்தான் சாஸ்திரம் விதித்திருப்பது. இவன் அந்நிய தேசங்களுக்குப் போகப்படாது. போனால் பிரஷ்டனாகி விடுவான். ஏன்? வேதரக்ஷணத்தின் purity கெட்டுப்போய் விடுகிற ஹேது உண்டாகிவிடும் என்பதால்தான். வெளிநாடுகளுக்குப் போனால் அவற்றின் பழக்கவழக்கங்கள் இவனுக்கு ஏற்பட்டுவிடும். ஸ்வதர்மமான பழக்கவழக்கம் போய்விடும். வெளி தேசத்துக்குப் போய்விட்டுத் திரும்பிவந்து, இப்படிப்பட்ட விதேசப் பழக்கங்களை ஸ்வஜாதி பந்துக்களிடம் கலந்து, அவர்களால் ஆகிற வேத ரக்ஷணையைக் கெடுத்துவிடப் போகிறானே என்றுதான் பிரஷ்டம் பண்ணச் சொன்னது.

இவனுக்குக் கம்பல்ஸரியாக வைத்த அநேக ஆசாரங்களும் வ்ரதாநுஷ்டானங்களும் மற்றவர்களையும் ஆகர்ஷித்து அவர்கள் ஒரு ஸ்டேஜுக்குப் பிற்பாடு ப்ரியப்பட்டு தாங்களும் அவற்றை adopt பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியே [அதாவது வர்ணப் பாகுபாடு போலவே] தான் பிராம்மணனுக்கான ஆச்ரம விபாகமும், பால்ய தசையில் இருக்கிறவனைப் பட்டினி கிடக்கச் சொல்லலாமா என்று பிரம்மச்சாரிக்கு ஆஹாரத்தின் அளவில் கட்டுப்பாடு பண்ணாமல் விட்டிருக்கிறது. அளவில்தான், quantity -யில்தான்; quality -யில் இல்லை. அவனும் சுத்த வெஜிடேரியன் ஆஹாரந்தான் சாப்பிட வேண்டும். ஆனாலும் வ்ரதம், உபவாஸம் என்றில்லாமல் நிறையச் சாப்பிடலாம். இவன் செய்யவேண்டிய வித்யாப்யாஸத்தையும் குருகுலவாஸத்தையும் பொருத்து இவனக்கென்று தர்மங்கள். கிருஹஸ்தனக்கென்று பல தர்மங்கள். அதற்கு வேறாக ஸந்நியாஸிக்கு ரூல்கள். குழந்தை குட்டிகளைக் காப்பாற்றுவது, பத்தினியின் கற்பை ரக்ஷிப்பது, குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்றுவது எல்லாமும் க்ருஹஸ்தனின் கடமையில் வரும். ஸமூஹத்துக்கு ஆற்றவேண்டியதாகவும் இவனுக்குப் பல பொறுப்புகள் இருக்கின்றன. உத்யோகம், சொத்து முதலியன இல்லாத ஸந்நியாஸிகளையும் இவன்தான் ஆதரிக்கிறான். இப்படி மற்றவர்களின் ரக்ஷணையைச் செய்யும்போது அவர்களுக்காக fight பண்ணவும் [போராடவும்] ஸந்தர்ப்பங்கள் ஏற்படலாம். அதனால்தான் இவனுக்கு அஹிம்ஸையை ‘ஸ்டரிக்ட்’ ஆக வைக்கவில்லை. அஹிம்ஸா போஜனத்தைச் சொல்லியிருந்தாலும், துஷ்டர்களை தண்டிப்பது, பூச்சி பொட்டுகளை அடிப்பது ஆகியவையெல்லாம் கிருஹஸ்தனுக்கு அநுமதித்திருக்கிறது. லோகம் நன்றாக இருக்க இவன் யாகம் பண்ண வேண்டியவனாயிருப்பதால் அதில் பலியையும் அநுமதித்திருக்கிறது.

ஸந்நியாஸி விஷயம் வேறு. அவனுக்குப் பெண்டாட்டி, பிள்ளைகுட்டி இல்லை. ஸமூஹ விசாரமும் இல்லை. லோகம் எப்படிப் போனாலும் அதைப் பற்றி அவனுக்குப் பொறுப்பு ஒன்றுமில்லை. பரமாத்ம சிந்தனையாகவே இவன் இருப்பதால், பிரேம ஸ்வரூபமான அந்தப் பரமாத்மாவின் அருள் தன்னால் இவன் வழியே ஸர்வஜனங்களுக்கும் பாய்ந்து நல்லது செய்ய வேண்டுமே தவிர, இவனாகக் கார்யத்தில் இறங்கி ஸமூஹத்துக்கு எதுவும் செய்ய வேண்டுமென்பதில்லை. இவன் பரமாத்மாவை அடைகிறதேதான் ஸமூஹத்துக்கும் செய்கிற உபகாரம். அதனால் இவனுக்கு துஷ்ட சிக்ஷணம், யாகம் ஆகிய எதையும் கடமையாகக் கொடுக்கவில்லை. பரிபூர்ண அஹிம்ஸா தர்மமே இவனுடைய தர்மம் என்று வைத்திருக்கிறது. ஹிந்து மதத்தின்படி ஒரு தினுஸிலும் ஹிம்ஸைக்குக் காரணமாக இல்லாமல், ‘ஒரு இலையைக் கூடக் கிள்ளக்கூடாது’ என்கிற அளவுக்குத் தீவிரமான அஹிம்ஸைக்கு அதிகாரியாக வைத்திருப்பது ஸந்நியாஸியைத்தான்.

இப்படி வர்ணமென்றும் ஆச்ரமமென்றும் தர்மங்களைரப் பிரித்துக் கொண்டதால்தான் மற்ற எந்த மதஸ்தர்களாலும் முடியாத மிக மிக உயர்ந்த கொள்கைகளை நம் மதஸ்தர்களில் ஏராளமானவர்கள் அநாதிகாலம் தொட்டு அழியாமல் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். மற்ற மத புருஷர்களின் உபதேசத்தையே இன்றைக்கு இருக்கிற நம்மவர்கள் எடுத்துக் கொண்டு, ஆனால் அவர்களைப்போல் ஆத்ம ஸம்பந்தமாகவும் இல்லாமல், பெரும்பாலும் அரசியல் நோக்கத்திலேயே, “எல்லாரும் ஒன்றுதான், எல்லாரும் எல்லாக் காரியங்களையும் செய்யலாம்” என்று ஆரம்பித்து ஒவ்வொரு உயர்ந்த கொள்கையாக விட்டுவிடும்படிப் பண்ணி, தர்மத்தில் குழப்பம் உண்டாகி வருகிறார்கள்.

‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை’ என்பதிலே இப்படி அதிகார பேதம் பண்ணி எவனோ ஒருத்தனுக்கு பரம உத்தம தர்மத்தை விதியாக வைக்கிற தாத்பரியம் அடங்கியிருக்கிறது. அத்தனை பேரும் நல்லவனாகத்தானிருக்க வேண்டுமென்றால் முடியாது; ஒரு நல்லவன் இருந்தாலே அவனை உத்தேசித்து அத்தனை பேரும் மழை பெய்துவிடுகிறது என்று பழமொழி சொன்னார்கள். ஸமூஹத்தில் ஒரு பிரிவு உத்தம தர்மத்தை அநுஷ்டித்தாலே போதும், அதன் பலன் அத்தனை பிரிவுகளையும் சேர்ந்துவிடும். சிலருடைய அநுஷ்டானத்தாலேயே ஸகலருக்கும் தர்ம மழை, அன்பு மழை, ஆண்டவனுடைய அருள் மழை கிடைத்து விடும்படியாக வர்ணாச்ரம விபாகம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

அவனவன் எந்தக் கர்மத்திலிருக்கிறானோ அதற்கேற்க அவனவன் தர்மம், ஆசரணைகள் இருக்கும். ஒவ்வொருதனுக்கும் தன்னுடைய கர்மத்தை மனஸில் காமம், க்ரோதம் அதிகம் இல்லாமல், அதாவது ஆசை-த்வேஷம் அதிகமில்லாமல், செய்யவேண்டும். இப்படிச் செய்தால் முதலில் வெளிப்பார்வைக்கு ஹிம்ஸை முதலானவை ஸ்வதர்மமாக இருக்கிறவனுக்குக்கூடப் போகப்போக அஹிம்ஸை முதலான தர்மங்களில், உயர்ந்த பண்புகளில், உயர்ந்த கொள்கைகளில் தானாகப் பிடிப்பு உண்டாகி அவற்றை அநுஸரிக்கத் தொடங்கி விடுவான். பிரத்யக்ஷமாக நம் தேசத்தில் இப்படி நடந்து வந்திருப்பதைப் பார்க்கிறோம்.

கீதாதி சாஸ்திரங்களில், “மநுஷ்யனாய்ப் பிறந்தவர்கள் தத்தமது கர்மாவில் கண்ணும் கருத்துமாயிருந்தே உயர்ந்த ஸித்தியை அடைகிறார்கள். தன்னியல்பாகப் பக்குவமாகி இதைவிட உயர்ந்த தர்மத்துக்கு போக வேண்டுமேயொழிய, பிறரது தர்மம் எத்தனை உசத்தியானதாய்த் தோன்றினாலும் அபக்குவ நிலையில் அதற்குப் போவதால் ச்ரேயஸ் வந்துவிடாது. ஸ்வதர்மத்தில்தான் ச்ரேயஸ். ஸ்வதர்மத்தைப் பண்ணியே செத்துப்போனாலும்கூட அதுதான் ச்ரேயஸ்” என்றெல்லாந்தான் சொல்லியிருக்கிறது.

ஸ்வே ஸ்வே கர்மண்பிரத: ஸம்ஸித்திம் லபதே நர: |

[கீதை 18.45]

ச்ரேயாந் ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத் ஸ்வநுஷ்டிதாத் |

[கீதை 18.47 ; 3.35]

ஸ்வதர்மே நிதநம் ச்ரேய: |

[கீதை 3.35]

இப்படியாக அதிகார பேதப்படி நாலு வர்ணத்தையும் நாலு ஆச்ரமத்தையும் ஒட்டி ஏற்பட்டிருக்கும் வித்யாஸமான தர்மங்களைத்தான் பின்பற்ற வேண்டுமே தவிர, எல்லாருக்கும் ஒன்றுதான் தர்மம் என்று பண்ணப்படாது என்பதிலேயே நம் சாஸ்திரங்கள் உறுதியாயிருக்கின்றன.

மேல் பார்வைக்கு இப்படி பண்ணின ஹிந்து சாஸ்திரகாரர்கள் கருணையில்லாதவர்கள் என்றும், எல்லோருக்கும் ஒரே தர்மத்தைச் சொன்ன புத்தர், ஜீஸஸ் போன்றவர்கள்தான் கருணையுள்ளவர்கள் என்றும் தோன்றினாலும், நடைமுறையில் பார்த்தால், அவர்கள் அத்தனை பேருக்கும் வைத்த உத்தம தர்மங்களைப் பண்ணுகிறவர்கள் நம்முடைய ஹிந்து மதத்தில்தான் கணிசமாக இருக்கிறார்களே தவிர, அவர்களுடைய சொந்த மதஸ்தர்களில் மிகப் பெரும்பாலோர் இவற்றைக் கழித்துக் கட்டியிருப்பதையே பார்க்கிறோம். பலனைப் பார்த்தால், லோகத்துக்கு உண்டான நலனைப் பார்த்தால், நம்முடைய சாஸ்திரங்களைச் செய்த ரிஷிகளையும் மநு முதலான பெரியவர்களையுந்தான்  கருணையுள்ளவர்களென்று சொல்ல வேண்டும்.


*காளிதாசரின் ‘ரகுவம்சம்’ 2.53.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஆசாரமும் வர்ணாச்ரமங்களும் -  -
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  அதிகார பேதமின்மையின் தோஷங்கள்
Next