ஸகல ஜனங்களும் இதுகள்தான் ரூல் என்று ஒரே விதமான ஆசாரங்களை வைக்காமல், அவரவருக்கும் ஜன்மாப்படி குல வழக்காக வந்துள்ள தொழிலையொட்டியும், அவன் படிக்கிற பால்ய தசையிலிருக்கிறானா கல்யாணம் பண்ணிக்கொண்டு குழந்தை குட்டி பெற்றுக் கொண்டு குடித்தனம் பண்ணும் ஸ்டேஜில் இருக்கிறானா, இதுகளை விட்டுப்விடப் பக்குவமாகிற நிலையிலிருக்கிறானா, அதற்கும் மேலே பரமாத்ம தியானம் தவிர வேறு வேண்டாம் என்கிற ஸ்திதிக்குப் போயிருக்கிறானா என்பதையொட்டியுமே ஒவ்வொரு தொழில், ஒவ்வொரு ஸ்டேஜுக்கும் ஏற்றதாக ஆசாரங்களை நம் சாஸ்திரங்கள் வித்யாஸப் படுத்திக் கொடுத்திருக்கின்றன. தொழிலையொட்டி ஏற்பட்டது வர்ண தர்மம்; ஒருத்தர் எந்த தசையிலிருக்கிறாரென்பதையொயட்டி ஏற்பட்டது ஆச்ரம் தர்மம். இரண்டையும் சேர்த்து “வர்ணாச்ரம”ங்களைப் பொருத்து ஆசாரங்கள் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறோம். இது invidious discrimination -ஆக [பக்ஷபாதமாக] ப் பண்ணினதே அல்ல. அவனவனையும் அவனுடைய நிலையிலிருந்தே உயர்த்திக் கொண்டு போகவும், அதே சமயம் ஸமூஹம் பூராவையும் சீராக அபிவிருத்தி பண்ணிக்கொண்டு போகவுமே இப்படி, யாரைவிட அறிவிலும் பூததயையிலும் பெரியவர்கள் இல்லையோ அப்படிப்பட்ட ரிஷிகள் சாஸ்திரங்கள் மூலமாக ஏற்படுத்தியிருக்கிறார்கள். நம் மதத்தின் யுகாந்தரமான ஜீவசக்திக்கும் இதுவே உயிர் நிலையாயிருந்திருக்கிறது*.
உடம்பால் கடுமையாக உழைக்க வேண்டியவர்களுக்கு ஆசாரக் கட்டுப்பாடுகளையும் அதிகம் போட்டு இறுக்காமல், கொஞ்சம் ஸ்வதந்திரமாக விட்டு, பிராம்மணன் மாத்திரம் ஸெளக்யங்களைத் தியாகம் பண்ணி நிரம்ப ஆசாரக் கட்டுப்பாடுகளை அநுஸரித்து ‘ஐடியல் நிலையை முடிந்த மட்டும் வாழ்ந்து காட்ட வேண்டுமென்று சாஸ்திரங்கள் வைத்திருக்கின்றன.
*இது தொடர்பாக “ தெய்வத்தின் குரல்” முதற்பகுதியில் ‘தர்மங்களில் பாகுபாடு’, ‘வர்ண தர்மம்’, ‘அஹிம்சை’ முதலிய உரைகளும், இரண்டாம் பகுதியில் ‘வேதம்’ என்ற உரையில் ‘பிராம்மணரல்லாதார் விஷயம்’ என்ற உட்பிரிவும், ‘நாற்பது சம்ஸ்காரம்’ என்ற உரையில் ‘சிலருக்கு ஏன் இல்லை?’ என்ற உட்பிரிவும் பார்க்க.