பட்டுத் துணி : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இங்கே பட்டைப்பற்றி என் அபிப்ராயத்தைச் சொல்ல வேண்டும். [அது] உங்களுக்கே தெரிந்திருக்கும். ஒரு முழப் பட்டுக்காக நூற்றுக்கணக்கில் பட்டுப் பூச்சிகளைக் கொல்ல வேண்டியிருக்கிறது. இதனாலே “அஹிம்ஸா பரமோ தர்ம”: என்கிற பெரிய ஆசாரத்துக்கு பங்கம் வந்து விடுகிறது. அதுவும் தவிர, பட்டு விலையும் ரொம்ப ஜாஸ்தியிருப்பதால் பட்டுப் புடவை மோஹத்தால் குடும்பப் பொருளாதாரமே சீர் கெடுகிறது. இதிலே வசதியிருக்கிறவர்களைப் பார்த்து வசதியில்லாதவர்களும் ‘காப்பி’ பண்ணப் பார்ப்பதால் ரொம்பவும் கஷ்டம், கடன், கஸ்தி உண்டாகிறது. இந்தக் காரணங்களை உத்தேசித்துத் தான் பட்டு கூடாது என்று நான் சொல்லிக் கொண்டு வருகிறேன். ரொம்ப அத்யாவசியமானால், வெளியூரிலோ, மழைக் காலத்தில் நாள் கணக்காகப் பெய்து கொண்டிருப்பதால் வஸ்திரம் காயாது என்பதாலோ, மடி வஸ்திரம் எப்போதும் ரெடியாய் இருந்தால் நல்லது என்றால் அப்போது ‘அஹிம்ஸாப் பட்டு’ என்பதாகப் பூச்சியைக் கொல்லாமலே நெய்கிற பட்டு வஸ்திரங்களை உபயோகப் படுத்தலாம். வழக்கமான பட்டின் ‘நைஸ்’, “ஷைனிங்’ எல்லாம் அஹிம்ஸாப் பட்டுக்கு இல்லைதான். என்றாலும் ஜீவகாருண்யத்தை உத்தேசித்து இதைத்தான் உபயோகப்படுத்த வேண்டும்.

[மறுபடியும் புஸ்கத்தைப் படித்த வண்ணம்:]

அதிதிக்குப் போடாமல் சாப்பிடக் கூடாது; வாசலில் நின்றுகொண்டு தெருக்கோடி வரையில் யாராவது வெளி மநுஷ்யர்கள் சாப்பாட்டுக்கு வருவார்களா என்று பார்த்து விட்டுத்தான் போஜனம் பண்ண உட்கார வேண்டும்.

அதிதி, அப்யாகதர் என்று இரண்டு வகை உண்டு. அதிதி என்பது நமக்குத் தெரியாதவர்; தானாகவே வந்தவர். அப்யாகதர் தெரிந்தவர்; நாம் கூப்பிட்டு வந்தவர் இரண்டு பேருக்கும் அன்னம் போட வேண்டும் —

இதிலே மநுஷ்யாபிமானமே ஆசாரமாக ஆகியிருக்கிறது. ஈகையில்லாமலிருப்பது நன்னெறிப்படி தப்பு என்பது மட்டுமில்லை. அது அநாசாரமும் கூட.

[புஸ்தகம் பார்த்து:] கால் அலும்பித் துடைத்துக் கொண்டுதான் படுத்துக்கொள்ள வேண்டும்.

கார்த்தாலே பல் தேய்த்துவிட்டு இத்தனை தடவை கொப்பளிக்கணும் போஜனம் முடிந்தபின் இத்தனை தடவை கொப்பளிக்கணும்; என்றெல்லாம் கணக்கு —

இப்படிக் கொப்பளிப்பதே நம்முடைய தொண்டை கழுத்து முதலிய gland -களின் சுரப்பு எழுந்தவுடனும் சாப்பிட்டவுடனும் ஆரோக்ய ரீதியில் எப்படியிருந்தால் ஹிதமோ அப்படி இருப்பதற்கு உதவுகிறது என்று குறிப்புப் போட்டிருக்கிறது.

பல் தேய்க்காமல் bed-coffee குடிப்பது அநாசாரத்துக்கு அநாசாரம்; அநாரோக்யத்துக்கு அநாரோக்யமும்.  ஒரே எச்சில் ப்ரஷ்ஷை பல நாளுக்கு வைத்துக் கொள்ளாமல் அன்றன்றும் ஒரு குச்சியால் தேய்த்துவிட்டு அதைப் போட்டு விட வேண்டும். ஆலங்குச்சி, வேலங்குச்சி இதற்கு எடுத்தது என்பதால்தான் ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்பது.

இப்படியெல்லாம் நன்றாகப் பல் தேய்க்கணும், ஏப்பம் வரும் வரை கொப்பளிக்கணும் என்று போட்டிருக்கிற சாஸ்திரத்திலேயே சிராத்தம் முதலான தினங்களில் குச்சி போட்டுப் பல் தேய்க்காமல் வாயைக் குழப்பிக்கொண்டு கொஞ்சம் கொப்பளிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இருக்கிறது. ஆசாரமென்றாலே சௌசமென்று சொல்லிவிட்டு இதென்ன அசுசியாயிருக்கிறதே என்று நினைக்கக் கூடாது.  சிராத்தத்தில் ஸ்நானம், மற்ற மடி ஸமாசாரங்களை ஏகமாகச் சொல்லியுள்ள அதே சாஸ்திரத்தில்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது என்பதாலேயே இதற்கு நமக்குத் தெரியாத காரணமிருக்க வேண்டுமென்று புரிந்து கொள்ள வேண்டும். நமக்குத் தெரியும்படியாகவும் ஒரு காரணம் இந்தப் புஸ்தகம் போட்டவர் சொல்லியிருக்கிறார். அதாவது நன்றாகப் பல் தேய்த்து,  நாக்கை வழித்துக் கொண்டு, அப்புறம் கொப்பளித்தால் பித்த நீரெல்லாம் வெளியே வந்துவிடும்; மற்ற நாட்களில் அப்படி வர வேண்டியது தான்; ஆனால் இப்படிப் பித்தநீர் வந்தவுடன் பசி எடுத்து விடும்; மற்ற தினங்களில் அப்போது பாலோ, மோரோ, கஞ்சியோ பானம் பண்ணிக் கொள்ளலாம். ஆனால் சிராத்த தினத்தில் ஒட்ட ஒட்டக் கிடக்க வேண்டும். அன்றைக்கு ரொம்பவும் லேட்டாக அதாவது மத்யான்னம் ஒரு மணிக்கு மேலே அபரான்ன காலத்தில் தான் சிராத்த கர்மா ஆரம்பித்து, அப்புறம் அதை முடித்து போஜனம் பண்ண வேண்டுமாதலால் அதுவரை பசி எடுக்காமலிருக்கவே பித்த ஜலமும் வெளியே போக வேண்டாமென்று பல் தேய்க்கிறதை இப்படி relax செய்திருக்கிறது என்று எழுதியிருக்கிறார். அதாவது இதுவும் தாக்ஷிண்யத்தோடு ஆசாரம் பண்ணிக் கொடுத்திருப்பதில் சேரும்.

[புஸ்தகத்தைப் புரட்டி:] எந்தெந்த உறவுக்காரர்கள் செத்துப்போனால் எத்தனையெத்தனை நாள், அல்லது நாழி தீட்டு; செத்துப் போய் எத்தனையோ நாழி அல்லது நாள் கழித்துத்தான் தகவலே கிடைக்கிறதென்றால் அதுவரை தீட்டு காக்காததற்கு என்ன பிராயசித்தம் என்கிற ஆசௌச விதிகளும்; இதே மாதிரி குழந்தை பிறந்தால் இன்னின்ன பந்துக்களுக்கு இத்தனை நாள் தீட்டு என்கிற ஸுதக விதிகளும் பக்கம் பக்கமாகப் போட்டிருக்கிறது.

இந்த இரண்டு தீட்டுக்கும் இடையே வித்யாஸங்கள் இருக்கின்றன. இந்த இரண்டுக்குமே வித்யாஸமாக க்ரஹண காலத் தீட்டைப் பற்றிப் போட்டிருக்கிறது. மற்ற தீட்டுகளில் ஜபம் கூடாது என்றால், க்ரஹண காலத்தில் ஜபம் பண்ணுவதற்கு வீர்யம் அதிகம்; அது அபரிமிதமாகப் பலன் தரும்.

எந்த தேசத்திலும் இல்லாதபடி ரொம்பக் கடுமையாக தீட்டுக்களை, அதிலும் சாவுத் தீட்டைச் சொன்ன அதே சாஸ்திரம், ஒரு பிள்ளை விவாஹ காலத்தில் ஸங்கல்பம் செய்து கொண்டு கங்கணம் கட்டிக் கொண்டு விட்டபின் அந்தச் சடங்கு சேஷ ஹோமத்தோடு முடிகிற வரையில் அவனுக்கு சொந்த மாதா பிதாக்கள் மரணமடைந்தால் கூடத் தீட்டுக் கிடையாது என்றும் சொல்கிறது.

இப்படியெல்லாம் விசித்ரமாக ஏகப்பட்டவை போட்டிருக்கிறது.

[புஸ்தகத்தைப் புரட்டி] இளநீரை வெண்கலப் பாத்திரத்தில் வைத்தால் அது கள்ளுக்கு ஸமமாகிவிடும் –

இதற்கு ‘கெமிகல் ரியாக்ஷன்’ ஏதாவது காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லலாம். ஆனால் அது மட்டும் காரணமாயிருக்க வேண்டுமென்பதில்லை.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஈடுபாடு, சிரத்தை   ஆசார விதிகளில் சில
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  சாஸ்திர கர்மாவும் ஸிந்தெடிக் வஸ்துக்களும்
Next