சாஸ்திர கர்மாவும் ஸிந்தெடிக் வஸ்துக்களும் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

‘கெமிகல்’ என்றதால் மனஸில் தோன்றுகிற ஒன்றைச் சொல்கிறேன். இந்த நாளில் இயற்கையான வஸ்துக்களுக்குப் பதில் அதே பலனைத் தருகிற பொருள்களைக் கெமிஸ்ட்ரி மூலம் ‘ஸிந்தெடிக்’காகப் பண்ணுகிறார்கள். இம்மாதிரி இப்போது சாஸ்திர கர்மாக்களில் பிரயோஜனப்படுகிற திரவியங்களின் பலனைத் தருகிற கெமிகல்களையும் பண்ணலாம். அதனால் அந்த கெமிகலைக் கர்மாவில் பிரயோஜனம் பண்ணிவிடக் கூடாது. ஏனென்றால் இரண்டும் ஒரே பலனைத் தருவதுதான் என்று இவர்கள் சொல்லும்போது த்ருஷ்ட பலனைத்தான் சொல்கிறார்கள். அதைவிட முக்யமான அத்ருஷ்ட பலன் சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிற த்ரவியத்துக்குத்தான் உண்டே தவிர, த்ருஷ்டமாக அதே பலனுள்ள மற்ற எதற்கும் கிடையாது. ‘ஸிந்தெடிக்’காக (செயற்கையாக)ச் செய்ததுதான் என்றில்லை; இயற்கையாகவே உண்டாகிறவற்றில் கூட சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிற ஒன்றுக்குப் பதிலாக இன்னொன்றை ‘ஸப்ஸ்டிட்யூட்’ பண்ணக்கூடாது. சாஸ்திரத்திலேயே ‘ஸப்ஸ்டிட்யூட்’ சொல்லியிருக்கிற அம்சங்களில் மாத்திரம் ஒன்றுக்குப் பதில் அதிலேயே சொல்லியிருக்கும் இன்னொன்றை உபயோகப்படுத்தலாம்.

வெளியிலே நமக்குத் தெரிகிற பலன் ஒன்று என்பதால் வஸ்து ஒன்றாகிவிடுமா? கல்கண்டும் படிக்காரமும் பார்வைக்கு ஒரே மாதிரியிருந்தாலும் ஒன்றாய்விடுமா? ருசி, பௌதிகமான குணங்கள் இவற்றைக் கொண்டு இவை இரண்டும் வேறே வேறே என்று தெரிந்து கொள்கிறோம். இந்த பௌதிக விஷயங்கள் எல்லாவற்றிலும் ஒரே மாதிரியிருக்கிறவைகளும்கூட, பௌதிகாதீதமான ரீதியில் வேறே வேறேதான் என்றும் சாஸ்திரகாரர்கள் கண்டுபிடித்து, இது மாதிரி வஸ்துவில் கூட இதைத்தான் சேர்க்கலாம், இது கூடாது என்கிறார்கள். ஒரே மாதரிக் காய்கறிதான் என்றாலும் சிராத்தத்தில் பீன்ஸ் சேர்க்காதே, அவரைக்காய் சேர் என்கிறார்கள்; மிளகாயும் உறைப்பு, மிளகும் உறைப்பு என்றாலும் மிளகாய் சேர்க்காதே, மிளகு சேர் என்கிறார்கள்.

[புஸ்தகத்தைப் பார்த்து] தீட்டுக் காலத்தில் எந்த விரதமும் இருந்து பலனில்லைதானென்றாலும், அப்போதுங்கூட ஏகாதசி வந்தால் உபவாஸம் இருக்கத் தான் வேண்டும்.

ஒரு நாளில் த்வாதசி எத்தனை நாழிகையிருக்கிறதோ அதில் எட்டில் ஒரு பாகத்துக்கு ‘ஹரிவாஸரம்’ என்று பெயர். இதற்குள்ளேயே பாரணை (முதல் நாள் இருந்த ஏகாதசி உபவாஸத்தை முடித்து போஜனம் பண்ணுவது) செய்து விடவேண்டும். இதற்காக, வழக்கமாக மாத்யான்ஹிக காலத்திலேயே (காலை ஆறு மணிக்கு ஸூர்யோதயமானால் காலை 10-48 லிருந்து பகல் 1-12 வரை மாத்யான்ஹிகமாகும்) பண்ண வேண்டிய மாத்யான்ஹிகம், வைச்வதேவம் முதலானவற்றை த்வாதசியன்று மாத்திரம் முன்னாலேயே பண்ணி விடலாம் என்று relax செய்திருக்கிறது. ஆனால் த்வாதசியன்று திவஸம் வந்தால் அதை அபரான்னம் என்பதாக (பிற்பகல் 1-12 லிருந்து 3-36 வரை) மாத்யான்ஹிகத்துக்கு அப்புறம் வருகிற காலத்தில்தான் பண்ண வேண்டும். அதன் பிறகே பாரணை.

ரொம்பவும் சிரத்தையோடு செய்வதால் சிராத்தம் என்றே பெயருள்ள திவஸத்துக்கு இப்படி முக்யத்வம் கொடுத்திருக்கிறது. தீட்டுக் காலத்தில்கூட ஏகாதசிப் பட்டினி இருக்கணுமென்று சொன்னேனல்லவா? ஆனால் ஏகாதசியன்று திவஸம் வந்தால் அன்று பித்ருசேஷமாக அன்னம், பலவித காய்கறிகளுடன், எள்ளுருண்டை அதிரஸம் முதலிய பக்ஷணங்களுடனும் சாப்பிடத்தான் வேண்டுமென்று வைத்திருக்கிறது. மாத்வர்கள் ஏகாதசிக்கு ரொம்பவும் உயர்வு தந்திருப்பதால் அன்றைக்கு திவஸம் செய்வதில்லை.

[புஸ்தகத்தைப் பார்த்தவாறு] த்வாதசிப் பாரணையில் ஆத்திக் கீரை, சுண்டைக்காய், புளிக்குப் பதில் எலுமிச்சை, நெல்லி முள்ளி அவசியம் போஜனம் செய்ய வேண்டும். ஒரு நாள் பட்டினிக்குப் பின் உடம்பில் ஜீர்ண நீர்கள் நல்லபடி சுரப்பதற்கு இந்த ஆஹாரமே உதவுகிறதென்று dieticians (சமையல் விஞ்ஞானிகள்) சொல்வதாகவும் இதில் போட்டிருக்கிறது.

[புஸ்தகம் பார்த்து:] பிராம்மணர்கள் என்றுமே வெங்காயம், உள்ளிப்பூண்டு சாப்பிடக்கூடாது. மற்றவர்களும் விரத தினங்களில் சாப்பிடக்கூடாது. மந்திர ரக்ஷணையை முன்னிட்டே பிராம்மணருக்கு இங்கே கூடுதல் நியமம். பிரத்யக்ஷத்திலேயே வெங்காயத்தால் காம உணர்ச்சி ஜாஸ்தியாவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாகப் [புஸ்தகத்தில்] போட்டிருக்கிறது. இதே மாதிரி சாஸ்திரத்தில் சிறப்பித்துக் கூறப்படும் தூதுவளையைச் சாப்பிடுபவர்களுக்கு இந்திரிய நிக்ரஹம் சற்று ஸுலபமாக ஏற்படுவதும் பிரத்யக்ஷத்தில் தெரிகிறது.

நோய் வந்த காலத்தில் பூண்டு சேர்த்த மருந்து மற்றும் ஆசார விருத்தமான [ முரணான] சரக்குகளைச் சாப்பிட சாஸ்திரமே தாக்ஷிண்யத்தோடு அநுமதிக்கிறது. ஆனால் பிற்பாடு பஞ்சகவ்யாதி புண்யாஹவாசனம் பிராயசித்தமாகச் செய்து கொள்ளச் சொல்கிறது.

[புஸ்தகத்தைப் புரட்டி:] ரொம்பவும் ஜீவதயையோடு இங்கே ஒரு ஆசாரம்! வாசலில் ஒருத்தன் பசி என்று நிற்கிறபோது, அவனுக்குப் போடாமல் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அந்த சாதம் மாம்ஸத்துக்கு ஸமம்; அப்போது குடிக்கிற தீர்த்தம் கள்ளுக்கு ஸமம்.

ரிது காலத்தில் ஒரு ஸ்த்ரீ எப்படியிருக்க வேண்டும் என்பது முதலான மாதவிடாய்த் தீட்டுக்களைப் பற்றி நிறையப் போட்டிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is பட்டுத் துணி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  தீட்டால் விளையும் தீமை
Next