கேள்வி கேட்காமல் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

விவாஹத்தில் கங்கணம் கட்டிக்கொண்டு தீக்ஷை பண்ணிக்கொண்டுவிட்ட வதூவரர்களுக்கு [மண மக்களுக்கு] சாவுத் தீட்டு கூட கிடையாது என்று சாஸ்திரமே சொல்கிறது. யஜ்ஞ தீக்ஷிதனுக்கும் ஏறக்குறைய இப்படியே அது தான் போட்ட கண்டிப்பான ஆசௌச ரூலுக்குத் தானே ‘எக்ஸம்ப்ஷன்’ தருகிறது. ரதோத்ஸவத்திலே எந்த ஜாதியார், எந்த வியாதிஸ்தர் மேலே இடித்து மோதிக்கொண்டு தேர் இழுத்தாலும் விழுப்பாகாது: வீட்டுக்கு வந்தபின் ஸ்நானம் செய்யக் கூடாது என்று சாஸ்திரத்தில் இருக்கிறது. வடக்கே ‘ஹோலி’யிலும் இப்படியே தீட்டுக் கிடையாதென்று வைத்திருக்கிறார்கள். ‘க்ளீன்லினென்ஸ்’ஸுக்காகத்தான் சாஸ்திரம் ரூல்களைக் கொடுத்திருக்கிறது என்று வைத்துக்கொண்டுவிட்டால், “தேர்த் திருவிழாவுக்குப் போய்விட்டு வந்த பின்பு கசகசவென்று இருக்கிறதே, குளித்தால்தான் க்ளீன்லினெஸ்” என்று தோன்றி ஸ்நானம் செய்யப் போவோம். அது தப்பு. சுத்தத்துக்கும் அநேக ஆசாரங்கள் உதவியாயிருக்கிறதென்பதால் சுத்தத்துக்காகவே எல்லா ஆசாரமும் என்று ஆக்கிக் கொள்வது சரியில்லை. ‘Cleanliness next to godliness’ என்று தான் அவர்களும் [மேல் நாட்டினரும்] சொல்கிறார்கள்: தெய்வாம்சமாக இருக்கிறதற்கு அடுத்தபடி — ஒரு படி கீழேதான் — சுத்தமாயிருப்பதென்பது என்கிறார்கள். அதனால் தெய்வ ஸம்பந்தமாக நம்மைச் சேர்க்கிறதையே முக்ய நோக்கமாய்ஆசாரங்கள் கொண்டிருப்பதால், இதற்காக ‘க்ளீன்லினெஸ்’ஸை அதுவிடச் சொல்கிற இடங்களில் விடவேண்டியதுதான். நமக்குத் தெரிகிறபடி சுத்தமோ இல்லையோ, ஆத்ம பரிசுத்தியை ‘அல்டிமேட்’டாக [இறுதியாக] உத்தேசித்தே ஆசாரங்கள் ஏற்பட்டிருப்பதால் அந்த லக்ஷ்யத்தை அடைய அது விதிக்கிற விதத்தில் தான் நடக்க வேண்டும். அதனால் அசுத்தம், அநாரோக்யம் ஏற்பட்டாலும் சரி, அது நவீனக் கொள்கைகளுக்கு அநாகரிகமாக இருந்தாலும் சரி, ஸயன்ஸுக்கும் பகுத்தறிவுக்கும் ஒத்துவராவிட்டாலும் சரி, கேள்வி கேட்காமல் அதற்கு அடங்கித்தான் நடக்கணும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is மூல சாஸ்திரமும், மாறான ஸம்பிரதாயமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  இம்மை நலன்களும் தருவது
Next