இம்மை நலன்களும் தருவது : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

பொதுவாக ஆசாரங்கள் வெளிச் சுத்தம், ஆரோக்யம், ஸமூஹத்தின் ஸெளஜன்யம், குடும்ப வாழ்வின் ஒழுங்கு எல்லாவற்றையுங்கூடத் தருவதாக – அதாவது இம்மையிலும் ஸௌக்யம் தருவதாகவேதான் உள்ளன. அதனால் தான், “சாஸ்த்ராய ச ஸுகாய ச” என்பது. ஆசார வாழ்க்கை நடத்துவது சாஸ்த்ரத்துக்கு சாஸ்த்ரமும்; ஸெளக்யத்துக்கு ஸெளக்யமும்’ என்று அர்த்தம். இம்மை நலன்கள் எல்லாம் ஆசாரமாயிருப்பவர்களுக்குக் கிட்டும் என்பதற்கு சாஸ்திர வாக்யமே இருக்கிறது:

ஆசாராத் லபதே ஹ்யாயு: ஆசாராத் ஈப்ஸிதாம் ப்ரஜா: |

ஆசாராத் தனம் அக்ஷய்யம் ஆசாரோ ஹந்த்-யலக்ஷணம் ||

-‘ஆசாரத்தினால் தீர்க்காயுஸ் லபிக்கிறது; ஆசாரத்தினால் நமக்கு எப்படி இஷ்டமோ அப்படிப்பட்ட ஸந்ததி உண்டாகிறது; ஆசாரமாயிருப்பதால் குறையாத செல்வச் செழிப்பு ஏற்படுகிறது; ஆசாரம் குரூபத்தையும் போக்குகிறது’. இப்படி ‘மெடீரியல் பெனிஃபிட்’களைக்கூட ஆசாரத்துக்குப் பலனாகச் சொல்லியிருக்கிறது. சரீர லாவண்யங்கூட ஆசாரத்தால் உண்டாகிறதாம். ஆசார அநுஷ்டானங்களை அப்யஸிப்பவர்களின் தேஹத்திலேயே ஒரு காந்தியும் தேஜஸும் ‘ஆசாரக்களை’ என்று ஏற்பட்டு விடுவதால், காது, மூக்கு எப்படியிருந்தாலும் அந்த ரூபத்தைப் பார்த்தவுடன் மதிப்பும், பிரியமும் உண்டாகி விடுவதையே இப்படிச் சொல்லியிருக்கிறது.

‘ஆசாராத் தனம் அக்ஷய்யம் — குறையாத செல்வம் ஆசாரத்தால் உண்டாகிறதென்றால் இரண்டு விதமாய் அர்த்தம் செய்து கொள்ளலாம். பக்தி, ஞானம், விவேகம், வைராக்யம் முதலான ஆத்மார்த்தமான செல்வம் தான் என்றைக்கும் குறைவுபடாத ‘அக்ஷய்யம் தனம்’ என்று சொல்லலாம். அல்லது ‘மெடீரியலாக’வே கூடப் பணப் பற்றாக்குறை எந்நாளும் இல்லாமலிருக்க ஆசாரம் உதவுகிறது என்று சொல்லலாம்.

இதற்கு நிரம்பப் பணம் கொழுத்திருப்பது என்று அர்த்தம் பண்ணிக்கொள்ளாமல் இன்னொரு விதத்தில் அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம். வரவு ஜாஸ்தியாகிவிட்டால் மாத்திரம் ஸுபிக்ஷமாகிவிடுமா? நிறையப் பணம் இருப்பதாலேயே நிறையத் தப்பு வழிகளில் போய்க் கஷ்டப்படுவதாக ஆவதையும் பார்க்கிறோமே! இரண்டு கையாலும் ஸம்பாதனை செய்தாலும் அதைவிட ஜாஸ்தி செலவுகளில் மாட்டிக்கொண்டு, கடன், கஸ்தி, ஓவர் டிராஃப்ட் என்று அவஸ்தைப்படுபவர்களைப் பார்க்கிறோமே! குடி, ரேஸ் என்று உடம்பும் கெட்டு குடும்ப வாழ்க்கையும் கெட்டுப் போகிறதும் பணக்காரர்களில்தான் அதிகம் பார்க்கிறோம். அதனால் நமக்கு வேண்டும் ஸுபிக்ஷம் வரவு ஜாஸ்தியாவதால் கிடைக்காது; செலவு குறைந்து வரவுக்கு அடங்கியிருப்பதுதான் ஸுபிக்ஷம். “ஆன முதலுக்கதிகம் செலவானால்”எத்தனை வரும்படி இருந்தாலும் “மானமழிந்து மதிகெட்டு” என்று எல்லா அனர்த்தமும் ஏற்படத்தான் செய்யும்.

ஆசாரமாயிருப்பதால் வேறென்ன பிரயோஜனம் ஏற்படுமோ ஏற்படாதோ செலவிலே சிக்கனம் உண்டாவது நிச்சயம். காஃபி அநாசாரம்; கிளப் [ஹோட்டல்] அநாசாரம்; ஸினிமாவும் கூத்தும் சாஸ்திர ஸம்மதமானதில்லை; குடிக்கக்கூடாது; சூதாடக் கூடாது (ரேஸ், சீட்டு எல்லாம் சூதுதான்); என்ன ‘மொஸெய்க்’ போட்டாலும் சாணி போட்டு மெழுகக்கூடிய ஸாதாத் தரைக்கு ஸமதையாகாது; ஆசார அநுஷ்டானங்களுக்கு ஹானியாக இருப்பதால் வெளியூர்களுக்குப் போய்வருவதை ‘மினிமைஸ்’ பண்ணிக் கொள்ள வேண்டும் – என்றெல்லாம் சாஸ்திரோக்தமாக வாழ்கிறபோது, இந்த இனங்களில் ஏற்படுகிற அத்தனை செலவும் மிச்சம். ஆசாரமாயிருக்கிற ஒருவனுக்கு இந்த அநாசாரங்களில் ஆசை வந்து இவனே ஒரு க்ளப்புக்கோ ஸினிமாவுக்கோ போனால்கூட, பஞ்சகச்சமும் குடுமியுமாய் இவன் வருவதைப் பார்த்து அங்கேயிருக்கிறவர்களே இவனைக் கேலி செய்து திரும்பிப் போகும்படிப் பண்ணிவிடுவார்கள். ட்ரெஸ் ஒன்றை எடுத்துக்கொண்டால் இப்போது இங்கிலீஷ் மோஸ்தர்களுக்காக, அப்புறம் லான்டிரிக்காக எத்தனை செலவு? ஏதோ ஒரு வேஷ்டி, துண்டு என்று வைத்துக்கொண்டுவிட்டால் எத்தனை மிச்சம்?

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is கேள்வி கேட்காமல்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஆசாரமும், அலுவலக நடைமுறையும்
Next