ஆசாரமும் அலுவலக நடைமுறையும் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஆஃபீஸுக்குக்கூடச் சட்டை போட்டுக் கொள்ளாமல்தான் வருவோம் என்று அத்தனை பேரும் உறுதியாய் இருந்தால் இந்தக் குடியரசு யுகத்தில் ஸர்க்கார் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஷர்ட்டிங், டெய்லர், லான்ட்ரி — எல்லாச் செலவும் மிச்சம். காந்தி நாலு முழு வேஷ்டியும், துண்டுமாகவே ‘கிங் எம்பரர்’ வரைக்கும் போகவில்லை? ஸ்வதேசி உடுப்பு வந்து, இதில் நான் ஆசைப்படுகிற மாதிரி பட்டு மோஹமும் போய்விட்டால், செலவு ரொம்ப மட்டுப்படும். தோய்க்காவிட்டால் மடியில்லை. ஸூட் தினமும் தோய்க்க முடியுமா? பார்வைக்கு அது எத்தனை சுத்தமாக இருந்தாலும் அநாசாரம்தானே? வேர்வைதானே? [அருகிலிருப்பவர் ஏதோ குறுக்கிட்டுக் கூற அதைக் கேட்டு அவரிடம் சிறிது விசாரணை செய்துவிட்டுப் பெரியவர்கள் தொடர்கிறார்கள்:]  இப்போது ஏதேதோ செயற்கைத் துணி தினுஸுகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்; அதனால் கால் சராய்கூட தினமும் நாமே தோய்த்துப் போட்டு விடலாம். உடனேயே காய்ந்து விடும், பிழிந்தால் கூட அதிலே மடிப்பு விழுவதில்லை, அதனால் லான்ட்ரிக்கும் போட வேண்டியதில்லை என்று இவர் சொல்கிறார். ஆனால் இம்மாதிரி (artificial) செயற்கை வஸ்திரமே சாஸ்திர ஸம்மதமானதில்லை. பருத்தியாகவோ, பட்டாகவோதான் இருக்க வேண்டும். நானோ பட்டும் வேண்டாமென்று சொல்லி அந்தச் செலவும் இல்லாமல் பண்ணுகிறேன். இப்போது கோல்-தாரிலிருந்து பண்ணுகிற அநேக அநாசார வஸ்துக்கள்தான் – ப்ளாஸ்டிக் இதில் சேர்ந்ததுதான் – ஸர்வ வியாபகமாயிருக்கின்றன. நம் சரீரத்தின் மேலேயே இம்மாதிரி உடுப்புப் போட்டுக் கொள்வது ஆசாரத்துக்கு தோஷம்தான். [முதலில் குறுக்கிட்டவர் மீண்டும் ஏதோ கூறியதன் மீது] இவரே சொல்கிறார், இம்மாதிரி துணி வழியாகக் காற்று உள்ளே போகிறதில்லை, நம் சீதோஷ்ணத்தில் இது ஆரோக்யத்துக்கு உகந்ததில்லை என்று சில டாக்டர்கள் சொல்கிறார்கள் என்று.

அநேக மாஸங்கள் வெய்யிலும் புழுக்கமுமாகவே உள்ள தக்ஷிணத்தில் சட்டை அவசியமேயில்லை. குளிர் காலத்திலுங்கூட நன்றாகத் துண்டைப் போர்த்திக் கொண்டுவிட்டால் போதும். சால்வைக்கு விழுப்பு தோஷமே கிடையாது; போர்த்திக் கொள்ளலாம். இப்படி [ஷர்ட் போட்டுக் கொள்வதென்று] வழக்கமாய் விட்டதேயென்றால், அந்த வழக்கமும் புதிதாக ஒன்றரை நூற்றாண்டில் ஏற்பட்டதுதானே? ஜனங்கள் ஏகோபித்து மனஸ் வைத்து விட்டால் எந்த வழக்கத்தையும் மாற்றி விடலாம் ராஜாங்கம், அல்லது கம்பெனிகளில் அதிகார ஸ்தானத்திலிருப்பவர்கள் ரூலை மாற்றும்படிப் பண்ணி விடலாம்.

ட்ரெஸ் விஷயம் மாத்திரமில்லை. சாஸ்த்ரீயமான வேறு சில விஷயங்களிலும், ஆஃபீஸ் அநுமதிக்காதே, ‘ஆஃபீஸ் நடைமுறை இதற்கு இடம் கொடுக்காதே’ என்று சொல்கிறார்கள். ‘ஏகாதசியில் வ்ரதம் இரு என்கிறீர்களே! ஆஃபீஸில் லீவு தருவார்களா? எப்படிப் பட்டினிக் கிடந்து கொண்டே வேலை பார்ப்பது? அமாவாஸ்யைக்கு யதோக்தமான காலத்தில்தான் தர்ப்பணம் பண்ணுவது என்றால் ஆஃபீஸுக்கு லேட்டாகி விடுமே’ என்றெல்லாம் கேட்கிறார்கள். நான் சொல்கிறேன்: ஸகல ஜனங்களும் ஏகாதசி உபவாஸமிருப்பது, சாஸ்திர காலப்படி அமாவாஸயை தர்ப்பணம் பண்ணுவது என்று தீர்மானமாகச் செய்து காட்டினால், தன்னால் ராஜாங்கத்தில் லீவு விட்டுவிடுவார்கள். ஜனங்கள் கிளம்பினால் எல்லாம் ஸரியாய்விடும். அநாவசியத்துக்கெல்லாம் கிளம்பி, தாங்கள் சொல்கிற மாதிரி ஸர்க்காரோ கம்பெனி முதலாளிகளோ செய்யும்படிப் பண்ணவில்லையா? அந்த ரைட், இந்த ரைட், ஸ்ட்ரைக், டெமான்ஸ்ட்ரேஷன் என்று – அந்த டே, இந்த டே என்று கொடியைப் பிடித்துக்கொண்டு சுத்தப் போகிறோம், சத்தம் போடப் போகிறோம் என்றால் லீவ் விடவில்லையா? நமக்கு நிஜமாக சிரத்தையும் தைரியமுமிருந்தால் எதையும் நடத்திக்கொண்டு விடலாம். வெள்ளைக்காரன் நாளிலேயே ஸர். டி. முத்துஸ்வாமி அய்யர் மாதிரிப் பரம ஆசாரமாயிருந்துகொண்டே ஜட்ஜ் பதவி வரை வஹித்தவர்களில்லையா என்ன?

நம்பிக்கையோடு சுத்தராக, சிஷ்டராக ஒருத்தர் இருக்கிறாரென்றால் இன்றைக்கும் லோகம், தான் எத்தனை கெட்டுப் போனாலும் அவருக்கு ஒரு ரெஸ்பெக்ட் கொடுக்கத்தான் செய்கிறது. மற்ற ட்ரெஸ், உடுப்புகளில் எத்தனை வசீகரமிருந்தாலும் அதிலே ஜனங்களுக்கு இல்லாத பக்தியும் மரியாதையும் நல்ல ஆசாரசீலராயிருக்கிற ஒருவர் ஸ்நானம் பண்ணிவிட்டு பட்டை பட்டையாக விபூதியோ நாமமோ போட்டுக்கொண்டு எதிரே வந்தால் ஏற்படுகிறது. ஆசாரத்துக்கொன்று ஒரு காந்தி உண்டாகிறது. அது யாரையும் [அப்படிப்பட்டவர்களுக்கு] நமஸ்காரம் பண்ண வைக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is இம்மை நலன்களும் தருவது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  அனைவரும் வைதிகராகுக!
Next