ஆசாரம் குறித்த நூல்கள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இரண்டு தலைமுறையாகவே ஆசாரங்கள் எடுபட்டு வருகின்றன. அதனால் இப்போது சாஸ்திரப் படிப் பண்ணுவதென்றால் எங்கள் அகத்துப் பெரியவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கத் தெரியவில்லையே என்பீர்கள். உங்களுக்கு யார் உபாத்யாயமோ அல்லது நல்ல ச்ரௌதிகளாக ஊரில் யார் இருக்கிறாரோ (ஒவ்வொரு ஜாதிக்கும் அததன் தர்மாசாரங்கள் தெரிந்த பெரியவர் இல்லாமல் போகமாட்டார்) அவரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். புஸ்தகங்கள் இருக்கின்றன. எல்லாம் ரொம்ப detailed-ஆகப் போட்டு வைத்யநாத தீக்ஷிதீயம் என்று இருக்கிறது. அத்தனை பெரிசாக வேண்டாமென்றால் ஸோமதேவ சர்மாவின் புஸ்தகம் இருக்கிறது. முத்துஸ்வாமி அய்யர் என்றும் ஒருத்தர் தர்ம சாஸ்திரச் சுருக்கம் எழுதியிருக்கிறார்*.

பழந்தமிழ் நூல்களும் நம்முடைய வைதிக ஸமயாசாரங்களைப்பற்றி நிறையச் சொல்லியிருக்கின்றன. ‘ஆசாரக்கோவை’ என்றே ஒன்று இருக்கிறது. திருக்குறள் தொடங்கி ‘அவ்வை பாடல்கள்’, ‘நன்னெறி’, ‘அறநெறிச் சாரம்’  முதலான நூல்கள் நீதிகளையும் தர்மங்களையும் பொதுவாகச் சொல்லிக் கொண்டு போகும்போதே, அன்றாட வாழ்க்கையில் அநுஷ்டிக்க வேண்டிய வைதிகாசாரங்களுக்கும் அங்கங்கே குறிப்புக் காட்டிக்கொண்டு போகும். நீதி சாஸ்திரக் கருத்துக்களை அப்படியே மொழி பெயர்த்து ‘நீதி வெண்பா’ என்றும் இப்படியொரு புஸ்தகமிருக்கிறது. பழந்ததமிழ் நாட்டில் எந்த அரசனைப் பற்றியும் புராணத்திலோ, இலக்கியத்திலோ, சாஸனங்களிலோ சொல்லும்போது அவன் மநுநீதிப்படி மறைவழி வருணாச்சிரமங்களை முறை பிறழாமல் நன்றாகப் பரிபாலனம் செய்து வந்தானென்று தப்பாமல் சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம். இப்படிப் பொதுப்படையாக வைதிகாசாரங்களைச் சொல்வதோடு நிற்காமல் நித்யப்படி வாழ்க்கையில் ஒவ்வொரு கார்யமும் எப்படி சாஸ்திராசாரப்படிப் பண்ணவேண்டும் என்று விளக்கிச் சொல்வதற்கே ஏற்பட்டதுதான் நான் சொன்ன “ ஆசாரக்கோவை”.  தமிழிலே உயர்ந்த இலக்கிய ஸ்தானம் கொடுத்துப் போற்றும் நூல்களில் பதினெண் கீழ்க் கணக்கு என்று பதினெட்டு புஸ்தகங்கள் உண்டு. இந்தப் பதினெட்டில் ஒன்றுதான் திருக்குறள். இன்னொன்று ஆசாரக் கோவை. தமிழ் மக்கள் அதைப் பார்த்தால் ஆசாரங்கள் அத்தனையும் தெரிந்துகொண்டுவிடலாம்.


* ஹிந்து சமய ஆசார வழக்குகளைப் பற்றித் தற்போது கீழ்க்கண்ட தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பதாகத் தெரிகிறது. (தொடர்ச்சி அடுத்த பக்கம்)

1. “ஸ்ம்ருதி முக்தாபலம்” என்னும் “வைத்யநாத தீக்ஷிதீயம்” (ஆறு பகுதிகள்)

2. “கௌதம தர்ம ஸூத்ரம்”

3. “போதாயன தர்ம ஸூத்ரம்”

இவற்றின் பதிப்பாளர் வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபை கும்பகோணம்.

4.” தர்ம சாஸ்திரச் சுருக்கம்” ஆர். முத்துஸ்வாமி அய்யர்; பதிப்பாளர் கே. எம். நாகராஜ அய்யர், கீழ்விடையல், கருப்பூர், கொடவாசல் போஸ்ட், தஞ்சை மாவட்டம்.

5. “ஸதாசாரம்” – ஸ்ரீவத்ஸ ஸோமதேவ சர்மா, பதிப்பாளர் பவானி புக் ஸெண்டர், 19, ஸ்டேஷன் ரோட், சென்னை-600 033.

6. (சைவமானது) “நித்யகன்ம நெறி” – கிடைக்குமிடம் தருமபுரம் ஆதீனம், தருமபுரம், மயிலாடுதுறை.

7. (வைஷ்ணவமானது:) “ஸ்ரீவைஷ்ணவ நித்யானுஷ்டானக் கிரமம்” – பதிப்பாளர்: “ லிஃப்கோ பதிப்பகம்”, தி.நகர், சென்னை-600 017.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is கட்டுப்படுவதன் பயன்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  அந்நாள் பெருமையும் இந்நாள் சிறுமையும் -  -
Next