அந்நாள் பெருமையும் இந்நாள் சிறுமையும் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

நம்முடைய முன்னோர்கள் எப்படி ஆரோக்யமாகவும், தேஜஸோடும், புத்திப் பிரகாசத்துடனும், மந்திர சக்தியுடனும், ஆத்ம சாந்தியுடனும் எல்லாரும் கொண்டாடும் படியாக இருந்திருக்கிறார்கள்; இப்போதுள்ள நாமோ எத்தனை வியாதி வக்கையோடு, ஒரு பவிஷுமில்லாமல், புத்தி மங்கி, மந்திர சக்தி என்கிறவரை போகாமல் ஸாதாரண புருஷ சக்திகூட இல்லாமல் எப்போதும் அசாந்தியோடு இருந்து வருகிறோம் என்பதைப் பார்த்து, அவர்கள் பின்பற்றி வந்த சாஸ்த்ராசரணைகள் கஷ்டமாயிருக்கிறதென்று நாம் விட்டு விட்டதுதான் நமக்கு அதைவிட எவ்வளவோ பெரிய நித்ய கஷ்டத்தைத் தந்திருக்கிறதென்று புரிந்து கொண்டு, அவற்றை இப்போதிலிருந்தாவது அநுஸரிக்க ஆரம்பிக்க வேண்டும். முதலில் கொஞ்சம் சிரமமாயிருந்தாலும் பழக்கிக்கொண்டு ஆசாரமாக வாழ ஆரம்பித்து விட்டால், கொஞ்ச நாளிலேயே நம் சாஸ்திரங்கள் க்ஷேமத்துக்கும் ஸெளக்யத்துக்கும் ஏற்பட்டனவேயன்றிக் கஷ்டம் உண்டு பண்ணுவதற்கல்லவென்று தெரிய ஆரம்பித்துவிடும். விடிய ஐந்து நாழிகைக்கு முன்னாலே எழுந்து, ஸ்நானம் பண்ணி அருணோதய காலத்தில் அர்க்யம் கொடுத்து, ஸூர்யோதயம் வரை காயத்ரீ ஜபம் செய்து, அதன்பின் ஒளபாஸனம், பூஜை, மாத்யான்ஹிகம், வைச்வதேவம், அதிதி ஸத்காரம் பண்ணி ஸாத்விகமான ஆஹாரத்தைச் சாப்பிட்டு, இப்படியே ஸாயங்காலமும் ஸ்நானம் செய்து ஸந்தியா வந்தன அர்க்யம் ஸூரியன் மேலைவாயில் விழும் போது கொடுத்து அப்புறம் நக்ஷத்ரம் தெரிகிறவரை காயத்ரீ பண்ணி, அக்னி ஹோத்ரம், தேவாலய தர்சனம் அல்லது ஸத்கதா சிரவணம் எல்லாம் செய்தால் எப்படி வாழ்க்கையிலேயே ஒரு நிறைவு இருக்கிறது; இப்போது அழுக்குப் பிடித்து அழுமூஞ்சியாயிருப்பது போய் எத்தனை சுசி ருசியுடன் ப்ரஸன்னமாயிருக்க முடிகிறது — என்று தெரியும். வேண்டாத காரியங்களைப் பண்ணி அலுத்து அப்படியும் அதில் குறையே இருப்பதால் நிம்மதியாகத் தூங்கக்கூட இல்லாமல் துஸ்-ஸ்வப்னம் கண்டுகொண்டு, ஏழு எட்டு மணிவரை எழுந்திருக்க முடியாமல் படுத்துக் கொண்டிருப்பது என்றில்லாமல் வேண்டிய கர்மாக்களையே பண்ணுவதால் தெளிவோடும் திருப்தியோடும் ஸுகமாக நித்ரை செய்து, மறுநாள் பஞ்ச பஞ்ச உஷத்காலத்திலேயே பளிச்சென்று எழுந்திருந்து அன்றைய ‘ரொடீனை’ச் சுருசுருப்பாகக் கவனிக்க முடிகிறது என்று தெரியும்.* ஆத்மாவும் நிறைந்து, ஆரோக்ய த்ருடகாத்ரமும் பெற்று சாந்தியாக ஸந்துஷ்டியாக நம் பூர்விகர்கள் வாழ்ந்து இந்த ஆசார அநுஷ்டான பலத்தால்தான்.

அவருவரும் எத்தனைக்கெத்தனை தீட்டுக் கலக்காமல் personal purity-ஐக் காத்துக்கொண்டு அதனாலேயே ஸொஸைட்டியையும் ‘ப்யூராக’ இருக்கப் பண்ணினார்களோ அத்தனைக்கத்தனை நாம் விழுப்பும் தீட்டுமாயிருந்து கொண்டு, நமக்குத்தான் ஸமூஹ உணர்ச்சியும் ஸஹோதரத்வமும் இருக்கின்றன என்று சொல்லிக் கொண்டே நாளுக்கு நாள் நம்மையும் அசுசியாக்கிக் கொண்டு ஸமூஹத்தையும் கெடுத்துக் கொண்டு வருகிறோம். லான்டரித் துணியை நாள் கணக்கில் தோய்க்காமல் போட்டுக்கொண்டு, ரயில், பஸ் என்று போவதில் ஒருவிதமான தீட்டு பாக்கியில்லாமல் சேர்த்துக்கொண்டு, க்ரமமாய் ஸ்நானம் கிடையாது என்று ஆக்கிக்கொண்டு, நினைத்த ஹோட்டலில் கண்ட ஆஹாரத்தைத் தின்று கொண்டு, தர்ம விருத்தமான ஸினிமாவிலும் நாவலிலும் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறோம். இப்படியிருப்பதில் நம்மைப் பற்றி நாமே, ‘மாடர்னாக இருக்கிறோம். மூட சாஸ்திரங்களை விட்டுவிட்டு புத்திமான்களாக முன்னேற்றம் கண்டு வருகிறோம்’ என்று பெருமைப்பட்டுக் கொண்டாலும், கொஞ்சம் யோசித்தால் நமக்கு யதார்த்தம் புரியாமல் போகாது. யதார்த்தம் என்ன? தேஹ ஆரோக்யம், திரவிய ஸுபிக்ஷம், திருப்தி, மேதை, காந்தி, கௌரவம், தெய்விகமான அநுபவம் எல்லாவற்றிலுமே நாம் நம் பூர்விகர்களைவிட ரொம்பவும் கீழே போய்க் கொண்டிருக்கிறோமென்பதுதான். பாழுங் கிணற்றில் நன்றாக விழுமுன் இப்போதாவது நாம் கண் விழித்து நம்முடைய சாஸ்திர வழியிலே போக ஆரம்பிக்க வேண்டும். நாம் சிரமப்பட்டு புதுசாகப் பண்ணிக்கணும் என்றில்லாமல் பூர்விர்களே நமக்கு ரெடி-மேடாக, கல்லையும் கான்க்ரீட்டையும் விட உறுதியான, குண்டு குழி விழாத பாதையாகப் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். “நாமாகப் புதுசாகப் பண்ணுகிறோம்” என்ற பெருமைக்காக அழிவுப் பாதையில் போகாமல், இந்த ஆசாரப் பாதையில் போய் நம்மை ரக்ஷித்துக் கொள்வோம். நம் ‘கைங்கரியம்’ நம்மோடு நிற்கவில்லை. நாம் கெட்டதோடு வரப்போகிற ஸந்ததிகளையும் கெடுத்து வைத்திருக்கிறோம். நாம் தந்த துணிச்சலில் அவர்கள் நாம் எப்படி பூர்விகர்களை உதாஸீனம் செய்தோமோ அதைவிட உக்ரமாக நம்மையும் தூக்கியெறிந்துவிட்டு, நம்மைவிடவும் ஸ்வயேச்சைப்படி வெறியாட்டம் நடத்த வழிகோலிவிட்டோம். கண் கெட்டபின் ஸூர்ய நமஸ்காரம் என்கிற நிலைக்குக் கிட்டதட்டப் போயாச்சு; இன்னும் போயோயாகிவிடவில்லை என்பதால் – ச்வாஸம் வாங்கும்போதுகூட ‘ஆக்ஸிஜன்’ கொடுத்துப் பிழைத்த கேஸ்கள் இருக்கின்றவே; அப்படி ஆக்ஸிஜன் கொடுத்துப் பார்க்க நாம் ஆரம்பிக்க வேண்டும். இத்தனை கேவல ஸ்திதியை, கஷ்ட தசையை அடைந்ததிலிருந்தே, விடுபட்டாக வேண்டுமென்ற நல்லறிவு பெற்று, அதற்காக ஊக்கமாக முயற்சி தொடங்க வேண்டும். மற்ற தேசங்கள் திண்டாடுவதைவிட, அவர்களைப் பார்த்து அவர்களைப் போலவே பண்ணி நாமும் திண்டாடுவது அவர்களைவிட நமக்குத்தான் பெரிய அவமானம். ஏனென்றால் அவர்களுடைய முன்னோர்கள் நம்முடைய பூர்விகர்கள் நமக்குக் கொடுத்திருப்பதுபோல் இப்படிப்பட்ட ஆசாரங்களைக் கொடுத்திருக்கவில்லை. ஆசாரங்களைப் புஸ்தகத்தில் எழுதிக் கொடுத்திருப்பது பெரிசில்லை; அதை அவர்களே எத்தனையோ ஆயிரம் தலைமுறை வாழ்ந்துகாட்டி, இது நடைமுறை ஸாத்யந்தான் என்று நன்றாக நிரூபித்துவிட்டுப் போயிருக்கிறார்களே, அதுதான் பெரிசு.


*“தெய்வத்தின் குரல்” இரண்டாம் பகுதயில் “கிருஹஸ்தாச்ரமம்” என்ற உரையில் “அந்தணனின் அன்றாடம்” என்ற உட்பிரிவும் பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஆசாரம் குறித்த நூல்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  உயிருதாரணத்தால் உண்டான சாஸ்திரம்
Next