பதார்த்த சுத்தம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஆஹாரத்தை தயாரிப்பவர்களின் சுத்தத்தைப் பற்றித்தான் இத்தனையும் சொன்னேன். இதற்குமுன் ஆஹாரம் எதனால் ஆக்கப்படுகிறதோ, அந்தப் பதார்த்த சுத்தம் ரொம்ப அவசியமாயிற்றே! இன்ன பதார்த்தங்களைத்தான் சாப்பிடலாம், இன்னது கூடாது என்ற பொது விதி; அதற்கப்புறம், பித்ரு தினத்தில் இன்னின்ன தான் சமைக்கலாம் சாப்பிடலாம், விரத தினத்தில் இப்படியிப்படி உபவாஸமிருக்க வேண்டும், இது தவிர இன்ன மாஸத்தில் இது சாப்பிடக்கூடாது என்றெல்லாம் வேறு விதிகள் இருக்கின்றன. இந்த பதார்த்த சுத்தி க்ளப்பிலும் மெஸ்ஸிலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாததாகவேயிருக்கும்.

வீட்டிலே நாம் பதார்த்த சுத்தியை அமல் பண்ணுவது அவ்வளவு கஷ்டமில்லை. நம் நாக்கை கட்டி விட்டால் ஈஸியாக இதைப் பண்ணிவிடலாம். அப்படியொன்றும் நம் சாஸ்திரத்தில் ஒன்றையுமே தின்காமல் காயக் காயக் கிடக்கும்படியாகவும் நிர்ப்பந்தப்படுத்தி விடவில்லை. ஒரு வேளைச் சாப்பாடு, ஒரு வேளை பலகாரம் என்றால்கூட ருசியாகப் பல வகைகள் இருக்கின்றன. தள்ளுபடியில்லாத கறிகாய்களே எத்தனையோ இருக்கின்றன. தேஹ புஷ்டி, ஸத்வபுத்தி இரண்டும் தருபவையாக இவை இருக்கின்றன. ஸாம்பார், ரஸம், கறி, கூட்டு, பச்சடி, துகையல் என்று எத்தனையோ வகைகள் சாஸ்திர ஸம்மதமாகவே இருக்கின்றன. இட்லி, தோசை, பொங்கல், அடை, உப்புமா, ஸேவை என்று பலகார தினுஸுகளும் ஏராளமாக இருக்கின்றன. இது ஒவ்வொன்றிலும் எத்தனையோ ‘வெரெய்டி’. இட்லியில் குடலை இட்லி, ரவா இட்லி என்றெல்லாம் தினுஸுகள் இருக்கின்றன, பஜ்ஜி, வடை, வடாம், அப்பளாம் மாதிரியானவை வேறு. பக்ஷணங்களோ கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு பக்ஷணம். வெறும் சீடை, வெல்லச் சீடை, முறுக்கு, என்று கோகுலாஷ்டமிக்கு. பிள்ளையார் சதுர்த்தியா?- அதிலே பிள்ளையார் அளவுக்கு முக்யம் மோதகம்! ஸங்க்ராந்திக்குச் சர்க்கரைப் பொங்கலை வைத்தே ‘பொங்கல்’ என்றே பேர். தீபாவளிக்கு எத்தனை ‘ஸ்வீட்’ உண்டோ, உப்பு தினுஸு உண்டோ தின்றுதான் ஆகவேண்டுமென்று நரகாஸுரன் கிருஷ்ணபரமாத்மாவிடம் வரமே வாங்கிக் கொடுத்திருக்கிறான்! நவராத்திரி என்றால் சுண்டல். அம்பாளுக்குப் பௌர்ணமி பூஜையா? சர்க்கரைப் பொங்கல், வடை, சித்ரானங்கள். ஸுப்ரமண்யருக்குத் தேனும் தினைமாவும். தினைப்பாயஸங்கூட உண்டு. ராம நவமிக்குப் பாயஸம், பானகம், வடைப்பருப்பு. வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, ஷஷ்டி மாதிரி உபவாஸமிருக்கிற வ்ரத தினங்களை விட சுசி ருசியாக, தினுஸு தினுஸாகச் சாப்பிடுகிற பண்டிகைகள் தான் ஏராளமாக இருக்கின்றன. சாஸ்திரம் சொல்கிறபடி உஷத் காலத்திலிருந்து மாத்யான்ஹிகம் வரையில் நன்றாகக் கர்மாக்களை உழைத்துச் செய்துவிட்டு அப்புறம் இப்படிப் புஷ்டியாகச் சாப்பிடுவதால் அது நன்றாக உடம்பில் ஒட்டவும் ஒட்டும். சாஸ்திரோக்தமாக மூன்று மணிக்கு மேலே சிராத்தம் முடிந்தால்கூட அப்புறம் ஆரோக்யமாகவும், ருசியாகவும் மிளகு சேர்த்த அநேக வியஞ்ஜனாதிகளோடு, எள்ளுருண்டை அதிரஸம் என்று நல்ல போஜனம் இருக்கிறது. மற்ற தினங்களில் மத்யான்னம் வரையில் ஒட்ட ஒட்டக் கிடக்கணும் என்றில்லை. மோர், பால், பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதை ரொடீனுக்குக் கொண்டு வந்து விட்டால் பகலில் மட்டும் ஒரு போஜனம், ராத்ரியில் பலகாரம் என்று ஸுலபமாகப் பழக்கிக்கொண்டு விடலாம். சும்மா சும்மா சாப்பிடுவது உடம்புக்கும் நல்லதில்லை, ஆத்மாவுக்கும் நல்லதில்லை. பஞ்ச கோசங்களில் அன்னமயம்தான் முதல். அதிலிருந்து பேரின்பம் என்கிற ஐந்தாவதான ஆனந்தமய கோசத்துக்குப் போக வேண்டுமே தவிர அதோடேயே நின்று விடக் கூடாது.*1 அதுவும் ஒரு கோசமாக இருப்பதால் அதை அடியோடு அலக்ஷ்யம் பண்ணி நிந்திக்கவும் கூடாது. “அன்னத்தை நிந்திக்கப் படாது; நிறைய அன்னத்தை விருத்தி பண்ணு” என்றெல்லாம் உபநிஷத்தே சொல்கிறது. அதற்காகக் கண்ட வேளைகளில், கண்டதை, கண்ட பேர் கையிலிருந்து வாங்கித் திண்ணவேண்டுமென்று அர்த்தமில்லை. வசனமே இருக்கிறது, ஒரு வேளை சாப்பிடுபவன் யோகி, இரண்டு வேளை சாப்பிடுபவன் போகி, மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி என்று. இப்போது இத்தனை வேளைதான் என்று கணக்கேயில்லாமல் ஹோட்டலைக் கண்ட இடத்தில் காஃபி, டிபன் என்று போகிறதற்கு ஏற்க எல்லாருக்கும் இத்தனைதான் வியாதி என்று கணக்கில்லாமல் ஆயிருக்கிறது!

குடியரசு யுகம் என்பதற்கு ஸரியாக எல்லாவற்றிலுமே ‘க்வாலிடி’யைவிட ‘க்வான்டிடி’தான் முக்யமென்றாகியிருப்பது ஆஹார விஷயத்திலும் நடந்திருக்கிறது! எங்கே பார்த்தாலும் ஹோட்டல் வைத்து எதையாவது தின்னச் சபலம் ஏற்படுத்தியிருக்கிறதே தவிர, அந்த வஸ்துவின் தரத்தைப் பற்றிக் கவலையேயில்லை.

இந்தத் தரம் ‘க்வாலிடி’, ருசியில் மட்டுமில்லை. பதார்த்தம், சமைத்துப் போடுகிறவர்கள் என்ற இரண்டின் ஸாத்விகம்தான் ஆஹாரத்தின் ‘க்வாலிடி’யை நிர்ணயிப்பவை. இதில் சமைத்துப் போடுகிறவர்களைச் சொல்லும்போது தாயாரும், பத்தினியும் பண்ணினதானால் பரவாயில்லை என்று வழக்கிலிருப்பதைச் சொல்லிவிட்டு, உடனே அவர்களும் நல்ல தெய்வ நினைப்போடு பண்ணிப் போடா விட்டால் பிரயோஜனமில்லை என்று Veto [எதிர்வோட்டு] மாதிரியும் ஒன்று போட்டு விட்டேன்! சாப்பிடுகிற நாம் வேண்டுமானால் “கோவிந்தா கோவிந்தா” என்று சாப்பிடலாம். சமைத்துப் பரிமாறுகிற பெண்டுகள் தெய்வ நினைப்போடுதான் அப்படிப் பண்ணும்படியாக நாம் எப்படிக் ‘கம்பெல்’ செய்ய முடியும்? இப்படித்தான் சொல்லிக் கொண்டுபோய் உங்களையெல்லாம் ‘அப்போ ஸ்வாமிகள் என்னதான் பண்ணணும் என்கிறார்? பட்டினி கிடக்கச் சொல்கிறாரா?” என்று நினைக்கும்படிப் பண்ணினேன்.

“க்ளப்பும் கூடாது, அகத்து மநுஷ்யர்களும் கூடாது என்றால்?” என்பதுதானே ‘கொஸ்ச்சின் மார்க்’ (கேள்விக் குறி) ?

இதற்கு பதில் சொல்வதுதான் என் முக்கிய உத்தேசம். ‘ஸ்வயம் பாகம்’- அவனவனும் தன் ஆஹாரத்தைத் தானே சமைத்துக்கொள்ளணும் – என்பது தான் பதில். இதைப் பற்றி அப்புறம் சொல்கிறேன். இப்போது, ஏற்கனவே இதுவரை தொட்டும் தொடாமலும் விட்ட முதல் அம்சமான பதார்த்த சுத்தத்தை இன்னும் கொஞ்சம் சொல்லி விடுகிறேன். ஆஹாரத்தில் எது ஸாத்விகம், எது ராஜஸம், எது தாமஸம் என்று கீதையில் பதார்த்தத்தை வைத்து பகவான் சொல்லியிருப்பதைச் சொல்கிறேன்.

ஆயுஸ்-ஸத்வ-பலாரோக்ய-ஸுக-ப்ரீதி-விவர்தநா: |

ரஸ்யாஸ்-ஸ்நிக்தாஸ்-ஸ்திரா-ஹ்ருத்யா ஆஹாராஸ்-ஸாத்விக ப்ரியா: || (17.8)

ஸாத்விகர்களுக்குப் பிரியமான ஸத்வ ஆஹாரம் ஆயுஸ், புத்தி, பலம், ஆரோக்யம், ஸெளக்யம், ஸந்தோஷம் இவற்றையும் விருத்தி பண்ணுவதாக இருக்கும். அதிலே நல்ல ரஸமும், பசையும் இருக்கும். வறட்டு வறட்டு என்றில்லாமல் மிருதுவாக இருக்கும் என்று அர்த்தம். அதற்காக ஒரே கொள கொளா என்று நீர்த்து ஓடாமல் ஸ்திரமாயும் இருக்கும். பார்க்கிறதற்கும் சாப்பிடுகிறதற்கும் ரம்யமாயிருக்கும்.

ராஜஸ உணவு எப்படியிருக்கும்?

கட்-வம்ல-லவணாத்யுஷ்ண-தீக்ஷ்ண-ரூக்ஷ-விதாஹிந: |

ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து:க-சோகாமய ப்ரதா: || (17.9)

துக்கத்தையும் சோகத்தையும் வியாதியையும் ராஜஸ ஆஹாரம் உண்டாக்கிவிடும். அது எப்படியிருக்குமென்றால் கசப்பாக (கடு) , புளிப்பாக (அம்ல) , உப்பாக (லவண) , உறைப்பாக (தீக்ஷ்ண) , துவர்ப்பாக (ரூக்ஷ) இருக்கும். ருசியிலே இப்படி இருப்பது மாத்ரமில்லாமல் ‘அத்யுஷ்ண’ என்று பகவான் சொல்லியிருக்கும்படி (ரொம்பக் கொதிக்கக் கொதிக்கச்) சாப்பிட்டாலும் ராஜஸ குணந்தான் வளரும். வயிற்றிலே எரிச்சல் எடுத்து ‘அல்ஸர்’ என்கிறார்களே, இதையும் ராஜஸ ஆஹாரம் உண்டாக்குகிறது என்பதால் “விதாஹிந:” என்கிறார்.

‘அறுசுவை என்று சொல்வதில் தித்திப்பு நீங்கலாகப் பாக்கி ஐந்தையும் பகவான் இங்கே ராஜஸம் என்று சொல்லி விட்டாரே! உப்பு, புளி, மிளகாய் இல்லாமலே சாப்பிட முடியுமா? துவர்ப்பு உடம்புக்கு நல்லது கசப்பு ஞான விருத்தி என்றும் சொல்வதுண்டே!’ என்றால் இந்த ஐந்திலே எதையும் அதியாகச் சேர்த்துக் கொள்ளாமல் மிதமாகப் பிரயோஜனப்படுத்த வேண்டுமென்றே பகவான் சொல்வதாக வைத்துக் கொள்ளணும். ரொம்பவும் ஞான வைராக்யமாகப் போகும்போது உப்பு, புளி, மிளகாயை அடியோடு தள்ளி விடுவதுதான் நல்லதென்றாலும், கீதை ஸாமான்ய மநுஷ்யனையும் அவன் இருக்கிற இடத்திலிருந்தே கொஞ்சங் கொஞ்சமாக உசத்திக்கொண்டு போவதால், உப்பு, புளிப்பு, உறைப்பு, துவர்ப்பு, கசப்பு முதலானதுகளை அளவாக, மிதமாகச் சேர்த்துக் கொள்வது என்று வைத்துக் கொள்ளணும். எந்த ‘எக்ஸ்டரீ’முக்கும் – போகாமல் மத்தியில், மிதமாக போவதைத்தான் பகவான் எல்லா விஷயத்திலுமே விதித்து இதே கீதையில் பேசியிருக்கிறார். ஒரேயடியாகத் தின்னக்கூடாது. முழுப்பட்டினியும் போடக் கூடாது; ஒரே தூக்கமாய்த் தூங்கப்படாது, கொட்டு கொட்டென்று ராப்பூரா முழித்துக் கொண்டும் இருக்கப்படாது; எல்லாக் காரியத்திலேயும் மிதமாயிருக்கணும்; அப்படிப் பட்டவன்தான் யோகியாக முடியும் என்று அங்கே சொல்கிறார்*2. அதையே இங்கேயும் ‘அப்ளை’ பண்ணி, (ஆஹாரத்தின்) அளவில் மிதமாயிருக்கணும் என்ற மாதிரியே, அதன் ருசியிலும் மிதமான உறைப்பு, புளிப்பு முதலானவை உள்ளதாக போஜனம் செய்ய வேண்டும் என்று வைத்துக் கொள்ளணும்.

ராஜஸ ஆஹாரத்திலே தித்திப்பைச் சொல்லவில்லை. ஸாத்விகத்திலும் தித்திப்பு என்று நேராகச் சொல்லாவிட்டாலும் ரஸம் நிறைந்தது (ரஸ்யா:) என்றதால் தித்திப்புத்தான் நாக்கில் வைத்தவுடன் உமிழ்நீர் சுரக்கப் பண்ணுவதால், அதையே குறிப்பதாகக் கொள்ளலாம். அதற்காக தித்திப்பு மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் ஸாத்விகம் என்று நினைத்துவிடக் கூடாது. ஏனென்றால், ஸாத்விக ஆஹாரத்தின் மற்ற லக்ஷணங்களைச் சொல்கிறபோது அது ஆயுஸ், ஆரோக்யம், பலம் எல்லாம் தருவது என்கிறார். வெறும் தித்திப்பு மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலோ ‘டயாபெடிஸ்’, எலும்புருக்கி முதலான வியாதிகள் வருவது பிரத்யக்ஷமாயிருக்கிறது. அதோடு கூட எல்லாவற்றிலும் மிதம் வேண்டும் என்பதே கீதையின் உபதேசமாயிருப்பதாலும் தித்திப்பு மட்டுமே சாப்பிட வேண்டும் என்று அது சொல்லியிருக்க முடியாது. அப்படியானால் ராஜஸ ஆஹாரத்திலே தித்திப்பு நீங்கலாக ஏன் மற்ற ஐந்தை மாத்திரம் சொன்னாரென்றால், ஒன்று [ஒரு காரணம்] தோன்றுகிறது. பண்டிகை நாட்களில்தான் பாயஸம், மற்ற தித்திப்பு பக்ஷ்யம் சாப்பிடுகிறோமே தவிர, பெரும்பாலான ஏனைய நாட்களில் தித்திப்பு நீங்கலாக மற்ற ஐந்தையும்தானே நாம் போஜனத்தில் சேர்த்துக் கொள்கிறோம்? அதனால் இந்த ஐந்தை மட்டும் அவர் குறிப்பிட்டிருக்கலாம். அதோடு, உப்பு, உறைப்பு புளிப்பு பிடித்தவர்கள் அப்படிப்பட்ட ஆஹார தினுஸுகளை மிதமிஞ்சிச் சாப்பிடுவதுபோல் தித்திப்பை புஜிக்க முடியாமல், தானே அது திகட்டிப் போய் விடுகிறது.

கொஞ்சமாக சாப்பிட்டாலே புஷ்டியும் சித்த சுத்தியும் தருகிற பால், மோர், வெண்ணெய், பழங்கள் முதலியவையும் ஸாத்விகமானவையே.

எந்தப் பதார்த்தமானாலும் அதி உஷ்ணமாகச் சாப்பிட்டால் ராஜஸம் என்கிறார். உடம்பிலே படபடப்பு, நரம்பு ஆடிப்போவது, அதேபோல உணர்ச்சியும் ஜாஸ்தியாவது இதற்கெல்லாம் ரொம்பவும் சூடான ஆஹாரம் காரணமாகிறது.

அதி உஷ்ணம் ராஜஸத்தை அதிகரிக்கிறதென்றால் ஆறிக் குளிர்ந்தது தாமஸத்தை வளர்க்கிறது என்கிறார். தாமஸ ஆஹாரத்துக்கு அவர் தருகிற லக்ஷணங்கள்:

யாத-யாமம் கத-ரஸம் பூதி பர்யுஷிதம் ச யத் |

உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜனம் தாமஸ ப்ரியம் || (17.10)

யாமம் என்றால் ஜாமம், அதாவது மூன்று மணி. சமைத்து மூன்று மணிக்கு மேல் ஆன ஆஹாரம் “யாத யாமம்”- காலம் கடந்தது. அது தாமஸம். ஜலம் விடாததானால் இது ‘டேஸ்ட்’ போய் ‘கத-ரஸ’மாகிவிடும். காய்ந்துபோன பழங்களும் ‘கத-ரஸ’த்தைச் சேர்ந்ததுதான். ஜலம் விட்டதனால், பழையது மாதிரி, இட்லி மாவு மாதிரி இது புளித்துப் போயிருக்கும். இதுதான் ‘பூதி’ என்று ச்லோகத்தில் சொல்லியிருப்பது. ஊசிப்போன வியஞ்ஜனம், அழுகிப்போன பழம் எல்லாம் ‘பூதி’. தீய்ந்து போனது, சிக்குப் பிடித்தது ஆகியனவெல்லாம் ‘பர்யுஷிதம்’. நம்மை விட வயஸிலும் வர்ண-ஆசிரமங்களிலும் குறைவாக இருப்பவர்கள் சாப்பிட்டபின் மீந்தது ‘உச்சிஷ்டம்’. இந்த நாளில் ஃபாஷன் என்று எச்சில் பண்ணிச் சாப்பிடுவதும் ‘உச்சிஷ்டம்’தான். இதெல்லாம் தாமஸப் போக்கை உண்டாக்குவதே.

உச்சிஷ்டமபி சாமேத்யம். ‘அமேத்யம்’ என்றால் மலம் என்றே அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம். நேர் அர்த்தம் யஜ்ஞத்துக்கு, அதாவது ஈஸ்வர ஆராதனத்தில் நிவேதனமாக வைப்பதற்கு லாயக்கில்லாதது என்று அர்த்தம். பழையதை, கள்ளை – ஏன் ஸோடா, ஐஸ்க்ரீம், பிஸ்கெட், ஓவல்டின் முதலானதுகளைகூட – நைவேத்யமாக வைப்போமா? எதுவோ ஒன்று இதெல்லாம் பகவானுக்கு அர்ப்பணிக்கத் தகுந்ததல்ல என்று நம் மனஸில் தடுக்குகிறதே! அப்படிப்பட்ட எல்லாம் அமேத்யம்தான். புளியும் காரமும் சேர்ந்த புளியஞ்சாதம் முதலான ராஜஸ ஆஹார தினுஸுகளைகூட மனஸ் உறுத்தாமல் நைவேத்யம் பண்ணுகிறோம் என்பதை இங்கே நினைத்துப் பார்க்கத் தோன்றுகின்றது. தாமஸம் அதற்கும் ஒரு படி கீழே.


1. *அன்னமயம், ப்ராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்த மயம் என்பவை தைத்திரீயோபநிஷத்து கூறும் ஐந்து கோசங்களாகும்.

2. * கீதை அத் 6, ச்லோ. 16-17. மேலே மேற்கோள் காட்டிள்ள ‘கட்-வம்ல’ ச்லோகத்தில் உஷ்ணமான உணவுக்கு மட்டுமே ‘அதி’ சேர்த்து, அத்யுஷ்ணம் ஸாத்விகமாகாது எனக் கண்ணன் கூறும் போதிலும் அதற்கு ஆதி சங்கரர் பாஷ்யம் செய்கையில், ச்லோகம் கூறும் மற்ற சுவைகளும் ‘அதி’யாக ஆகாத உணவினை உட்கொள்ள வேண்டுமென்பதே உட்பொருள் எனக் கூறியுள்ளார். இதுவேதான் இங்கு நமது ஸ்ரீபெரியவர்கள் கூறுவதும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is சமைப்பவர், பரிமாறுபவர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  நியமத்தில் வேறுபாடுகள்
Next