நியமத்தில் வேறுபாடுகள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

பொதுவாக இப்படிச் சொன்னாலும், பழையது, நீராஹாரம் முதலானவை தாமஸமாகச் சொல்லப்பட்டாலும், உழைக்கிற குடியான ஜனங்களுக்கு விலக்கு இல்லை. வியாதியஸ்தர்களுக்கும் சில நிஷேத வஸ்துக்களை [தள்ளும்படியான வஸ்துக்களை] ப் பரவாயில்லையென்று அநுமதித்திருக்கிறது. உடம்பு ஸரியானவிட்டு இதற்காகப் பஞ்சகவ்யம் சாப்பிட்டு ப்ராயசித்தம் செய்து கொள்ளும் படியும் சொல்லியிருக்கிறது. எட்டு வயஸுக்குக் கீழேயும் எண்பது மேலேயும் போனவர்களுக்கு ரொம்பவும் ஆஹாரக் கட்டுப்பாடு வேண்டுமென்பதில்லை என்றே கூட சாஸ்திரம் சொல்வதுண்டு. நியாயமாகப் பார்த்தால் எண்பது வயஸுக்கு மேலே ஜீர்ண சக்தியும் குறைந்து, இச்சைகளும் குறைந்து அவர்கள் தாங்களாகவே ரொம்ப நியமமாக இருக்கத்தான் பிரியப்பட வேண்டும். அப்படியில்லாதபோது ‘நப்பாசையும் நாக்கு ருசியும் போகாத இப்படிப்பட்டவர்கள் எப்படியும் ஜன்மாவைக் கழித்துக்கொள்ளப் போவதில்லை; அதனால் இந்தக் கிழ ஜீவன்களை கடைசிக் காலத்தில் ஏன் கட்டுப்படுத்திக் கஷ்டம் கொடுக்க வேண்டும்?’ என்றே ‘ஸிம்பதி’யில் விட்டு விட்டதாகத் தோன்றுகிறது.

எல்லாருக்கும் எல்லா நியமமும் என்று வைக்காமல் நீக்குப் போககோடு வர்ணாச்ரமங்களையொட்டி வெவ்வேறு விதமாகவும், வெவ்வேறு டிகிரியிலும் வைத்துதிருப்பதுதான் நம் மதம் உலகத்திலேயே மிகவும் பழங்காலத்திலிருந்து இன்றுவரை அமரமாக இருந்து வருவதற்கு காரணம். ஆஹாரத்திலும் இதைப் பொருத்து பிராம்மணனுக்குச் சொன்ன அளவு கட்டுப்பாடு மற்றவர்களுக்குச் சொல்லவில்லை. மது, மாம்ஸாதிகள், பழையது எல்லாங்கூட க்ஷத்ரியர், நாலாம் வர்ணத்தவர் ஆகியவர்களுக்கு அளவோடு அநுமதிக்கப்பட்டிருக்கிறது. அளவோடு நிறுத்திக்கொள்ள வேண்டியது முக்யம்.

உடம்பால் கடுமையாக உழைக்கிறவனுக்கு ஆசாரக் கட்டுப்பாடுகளையும் கடுமையாக வைத்துக் கஷ்டப்படுத்தாமல் கொஞ்சம் ஸ்வதந்திரமாக விட்டு, பிராம்மணன் மாத்திரம் ஆசாரக் கட்டுப்பாட்டில் கடுமையாக இருந்துகொண்டு ஸெளக்யங்களைத் தியாகம் பண்ணி, ‘ஐடியல்’ நிலையைக் காட்ட வேண்டுமென்று சாஸ்திரங்கள் வைத்திருக்கின்றன.

சிலர் மாத்திரம் பூரணமாக ‘வெஜிடேரியனிஸம்’ முதலான நியமங்களைப் பின்பற்றுவதாலேயே, நம் நாட்டில் மற்றவர்களும் அவர்களைப் பார்த்துப் பித்ரு தினம், விரத தினம் முதலான நாட்களிலாவது மாம்ஸம் சேர்ப்பதில்லை, மதுபானம் பண்ணுவதில்லை என்றெல்லாம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அநேக ஜாதிக்காரர்கள் அறுபது, எழுபது வயஸு ஆன பிற்பாடு சுத்த சைவமாகிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is பதார்த்த சுத்தம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  யதார்த்தத்துடன் லக்ஷ்யத்தின் இசைவு
Next