மரக்கறி உணவின் சிறப்புகள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

மநுஷ்யனின் மூக்குக்கு ஒத்துக்கொள்ளாதது மட்டுந்தானென்றில்லை. அவனுடைய வயிற்றுக்கு, ஜீர்ணக் கருவிகளுக்கு (digestive organs) க்கூட மாம்ஸ போஜனம் ஒத்துக்கொள்ளாததுதான் என்று இப்போது [1957 நவம்பரில் சென்னையில்] நடந்த World Vegetarian Congress-ல் பேசிய பலர் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். ‘கான்ஸ்டிட்யூஷனை’, தேஹ வாகை வைத்து மாம்ஸத்தைத் தின்றால்தான் ஜீவிக்க முடியும் என்றிருக்கிற புலி, சிங்கம் மாதிரியான மிருகங்களின் இரைப்பை, குடல் முதலிய உறுப்புகளோடு மநுஷ்யனின் ஜீர்ண இந்திரியங்களை ஒப்பிட்டு, மநுஷ்ய தேஹவாகு மாம்ஸ போஜனத்துக்கு ஏற்பட்டதே இல்லை என்று இவர்கள் நிறையக் காரணம் காட்டியிருக்கிறார்கள்.

கான்ஸ்டிட்யூஷனலாக மாம்ஸம் சாப்பிடக் கூடாத மிருகங்களும் உண்டு. அவற்றுக்கு நமக்குள்ள ‘புத்திசாலித்தனம்’ இல்லாததால் அவை மாம்ஸத்தின் கிட்டேயே போவதில்லை. ஆடும், மாடும், மானும், குதிரையும், யானையும் தப்பித் தவறியாவது மாம்ஸம் தின்னுமா? ஆனால் மிருகங்களுக்கு இல்லாத ஆறாவது அறிவும் இருக்கிற மநுஷ்யன் எதை விலக்கி எதைக் கொள்ள வேண்டும் என்ற வியவஸ்தயைப் புரிந்து கொள்ளாமல் மாம்ஸமானாலும் ஸரி, மற்ற ஆஹாரமானாலும் ஸரி, இரண்டையும் தின்னுவது என்று வைத்துக் கொண்டிருக்கிறான். மிருகங்களில் பூர்ணமாக மாம்ஸத்தைத் தள்ளியவையாகச் சிலது இருப்பதுபோலவே, மாம்ஸத்தைத் தவிர வேறே எதுவுமே தின்னாதவையாகச் சிலது இருக்கின்றன. நாய், பூனை, காக்காய், குருவி மாதிரிச் சிலதான் இரண்டு தினுஸையும் தின்பவை. மநுஷ்யன் இவற்றின் லெவலில்தான் இருப்பதா?

இதிலே பகவானும் கொஞ்சம் வேடிக்கை பார்க்கத்தான் செய்கிறான். ‘மநுஷ்யக் குடலுக்கு மாம்ஸம் எடுத்ததில்லை’ என்று இப்போது வெஜிடேரியன் ஸயன்ஸ் நிபுணர்கள் சொன்னாலும், மாம்ஸம் இவனுக்கு அடியோடு ஜெரிக்காமலே இருக்கும்படி பகவான் பண்ணவில்லையே! அப்படி இருந்தால் மாம்ஸ போஜனம் பண்ணவே மாட்டானல்லவா? இப்போது கல்லைத் தின்கிறானா? இரும்பைத் தின்கிறானா? இப்படியே மாம்ஸத்தையும் தள்ளியிருப்பானல்லவா? இவனுக்குக் கொஞ்சம் சிரமப்பட்டாவது ஜெரிக்கும்படியாகவும் பண்ணி, அதே ஸமயத்தில் அஹிம்ஸா ரீதியிலும், தன்னுடைய ஸத்வகுண அபிவிருத்தியையும் உத்தேசித்து எந்த ஆஹாரம் நல்லது என்று ஆராய்கிற அறிவையும் கொடுத்து, ஒன்றோடொன்று மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறான். இதிலே நாக்குதான் ஜயித்து, புத்தி தோற்றது என்று மநுஷ்யன் பண்ணிக் கொண்டால் இவனைவிட அசடு இல்லை.

மாம்ஸம் தின்றால்தான் பலம் என்கிற ‘பாயின்ட்டு’க்கு வருகிறேன். இப்போது ரொம்பவும் பலத்தைக் குறிப்பிட வேண்டுமானால் என்ன சொல்கிறோம்? ‘சிங்க பலம்’, ‘புலி பலம்’ என்றா சொல்கிறோம்? ‘யானை பலம்’ என்றுதான் சொல்கிறோம். மற்றப் பிராணிகளுக்கு இல்லாத பலம் யானைக்கே இருக்கிறது. இந்த சக்தி மாம்ஸம் சாப்பிட்டா அதற்கு வந்திருக்கிறது? யானை அப்படிப்பட்ட பதார்த்தத்தைத் திரும்பிக்கூடப் பார்க்காதே! ‘சுஷ்கைஸ் த்ருணைர் வநகஜா பலிநோ பவந்தி ‘ என்று பர்த்ருஹரி வசனம் இருக்கிறது. ‘சுஷ்கம்’ என்றால் ஈரம் வற்றிப்போனது. இஞ்சிக்கு ஈரம் போய் ‘சுஷ்க’மானதைதான் ‘சுக்கு’ என்கிறோம். ‘சுஷ்கம்’ தமிழில் ‘சுக்கம்’ ஆகும். நெஞ்சில் ஈரம் இல்லாமல் பணத்தைக் கெட்டியாய் வைத்துக் கொள்பவனை ‘ஆசாமி ரொம்ப சுஷ்கம்’ என்கிறோம். இங்கே ‘சுஷ்கை: த்ருணை:’ என்றது காய்ந்த புல்லை. புல்லையும் தேங்காய் மட்டையையும் தின்றுவிட்டே யானை ஸகல மிருகங்களையும்விட பலமுள்ளதாயிருப்பதை இங்கே சொல்லியிருக்கிறது. இதிலே விசேஷம், இத்தனை பலம் இருந்தும் அது புலி, சிங்கம் மாதிரிப் பாய்ந்து ஹிம்ஸை பண்ணாமல் சாந்தமாயிருக்கிறது. அதற்குத் தேஹபலத்தோடு புத்தி பலம், ஞாபக சக்தி எல்லாமும் நிறைய இருக்கிறது. மநுஷ்யனுக்கு அடங்கி ஒத்துழைக்கிற பவ்ய குணமும் இருக்கிறது. மலையாளம், பர்மா முதலான இடங்களில் பெரிய பெரிய மரங்களைத் தூக்கிக் கொண்டுபோய் வேலை செய்வதெல்லாம் யானைதான். ஆனதால் வெஜிடேரியன் ஆஹாரத்தினாலேயே நல்ல பலமும், அதுமட்டுமின்றி புத்தி, பணிவு, ஸஹாய குணம் முதலான ஸத்வ அம்சங்களும் பெறலாமென்று தெரிகிறது.

ஸர்ப்பா: பிபந்தி பவநம் ந ச துர்பலாஸ்தே

சுஷ்கைஸ்-த்ருணைர் வநகஜா பலிநோ பவந்தி |

கந்தை: பலைர் முநிவரா: க்ஷபயந்தி காலம்

ஸந்தோஷ ஏவ புருஷஸ்ய பரம் நிதாநம் ||

“வெறும் காற்றையே உட்கொள்கிற பாம்பு அதனால் துர்ப்பலமாக இல்லை. வற்றின புல்லைத் தின்கிற காட்டு யானை மிகவும் பலமுள்ளதாயிருக்கிறது. கிழங்கையும் பழத்தையுமே சாப்பிட்ட முனிவர்கள் மரணத்தை ஜயித்து சிரஞ்ஜீவிகளாயிருக்கிறார்கள். ஆகையால் மனஸின் நிறைந்த திருப்திதான் ஒரு ஜீவனுடைய ஆயுராரோக்யாதிகளுக்கு மூலதனம்; சாப்பாடு இல்லை” என்று அர்த்தம். ‘சாப்பாடு இல்லை’ என்று ஸ்லோகத்தில் நேராகச் சொல்லாமல் தொக்கி நிற்கிறது.

எனக்கு அப்போது இளவயஸு. ப்ரொஃபஸர் ராமமூர்த்தி என்று ஒருத்தர் இருந்தார். ராமமூர்த்தி ஸாண்டோ என்றே சொல்வார்கள். தெலுங்கர். ஸர்க்கஸ் கம்பெனி நடத்திவந்தார். நடத்தினது மட்டுமில்லை, அவரே ஸாண்டோவானதால் ஆச்சரியமான feats பண்ணிக் காட்டுவார். ஒன்று சொல்கிறேன்: தன் இடுப்பைச் சுற்றிப் பக்கத்துக்கு ஒன்றாக ஒரு Ford காரைக் கயிற்றால் கட்டிக் கொண்டு, இரண்டின் என்ஜினையும் ஸ்டார்ட் பண்ணிவிடுவார். அப்படியே இரண்டுமாக அவரை நசுக்கித் தொகையல் பண்ணிவிடுமோ என்று ஜனங்கள் பிரமித்துப் பார்ப்பார்களாம். மநுஷ்யரானால் கொஞ்சங் கூட அலட்டிக் கொள்ளாமல், அந்த இரண்டு காரையும் இரண்டு உள்ளங்கையாலேயே மறித்துக் கொண்டு அவை ஓட முடியாதபடி நிறுத்தி வைத்திருப்பாராம். அவருடைய கம்பெனி கும்பகோணத்தில் ‘காம்ப்’ பண்ணியிருந்தபோது நான் வந்து ஸர்க்கஸ் பார்க்கவேண்டுமென்று ரொம்பவும் கேட்டுக் கொண்டார். மடத்தில் அப்படி ஸம்பிரதாயமில்லையென்று சொன்னதும், மடத்துக்குப் பின்னாடி விஸ்தாரமாக பூமி உண்டு, அங்கே தன் கோஷ்டியில் சில பேரோடு வந்து சில ‘ஸர்க்கஸ் அயிட்டங்’களைப் பண்ணிக் காட்டினார். இப்படியும் ஒரு தேஹ பலமுண்டா என்று ஆச்சரியமாயிருந்தது. அவர் கதை எதற்குச் சொல்கிறேனென்றால் இப்படிப்பட்ட பலிஷ்டர் சுத்த வெஜிடேரியனாக இருந்தவர் என்பதற்காகத்தான். மஹா பலிஷ்டரான ஆஞ்ஜநேயரே சாகபோஜனியான வானரம்தானே?

ஏதோ டி.பி. மாதிரிச் சில உடம்பு [வியாதி]களுக்கு மாம்ஸாதிகளை டாக்டர்கள் ப்ரிஸ்க்ரைப் பண்ணினாலும் வயிற்று வியாதிகள், ப்ரஷர், ஹ்ருதய ரோகங்கள் என்றெல்லாம் ஏற்பட்டால் மாம்ஸத்தில் fat ஜாஸ்தி, அது கூடாது என்று நிறுத்தித்தான் விடுகிறார்கள். நான்வெஜிடேரியன்களுக்கு எந்த உடம்பு வந்தாலுமே சீக்கரத்தில் குணமாவதில்லை என்றுகூடச் சொல்வதுண்டு.

சாக போஜனத்துக்குப் பலம் இல்லாமலில்லை என்பதற்கு இன்னொன்றும் சொல்கிறேன். சிங்கம், புலி மாதிரி ரொம்பவும் பலமுள்ள எந்த ‘கார்னிவோரஸ் அனிம’லை [மாம்ஸம் சாப்பிடுகிற மிருகத்தை] எடுத்துக் கொண்டாலும் அது ஆஹாரமாகச் சாப்பிடுகிற பிராணி எப்படியிருக்கிறது என்று பாருங்கள். இது [சாப்பிடப்படும் பிராணி] சாக பக்ஷிணியாகத்தானிருக்கும். மாம்ஸ பக்ஷிணிகளான சிங்கமும் புலியும் சாக பக்ஷிணிகளான ஆடு, மாடு, மான் போன்றவற்றைத்தான் தின்னும்; இன்னொரு மாம்ஸ பக்ஷிணியைத் தின்னாது. சிங்கமும் புலியும் ஒன்றை யன்று அடித்துக்கொண்டு சாகலாம்; ஆனாலும் இவற்றில் ஒன்றின் மாம்ஸத்தை இன்னொன்று தின்னாது. இதிலிருந்து மாம்ஸ பக்ஷிணிகளின் பலத்துக்கும் (அவை தின்கிற சாக பக்ஷிணிகளின் த்வாரா) காரணமாயிருப்பது புல்லும், தான்யமும், மட்டையுந்தான் என்று தெரிகிறதல்லவா?

வெஜிடேரியனுக்கு ஆதரவாக இத்தனை சொன்னாலும் லோக ரீதியில் நாக்கு ருசி, தேஹபுஷ்டி என்று எதையோ நினைத்து நீண்டகாலமாக நான்-வெஜிடேரியனிஸமும் இருந்துதான் வந்திருக்கிறது. ஆதியில் இதையெல்லாம்விடப் பெரிய காரணம் ஒன்று இருந்ததாகப் படிப்பாளிகள் சொல்கிறார்கள். ‘அப்போதெல்லாம் ஓரிடத்தில் நிலையாக இல்லாமல் ஜன ஸமூஹங்கள் கூட்டங் கூட்டமாக இடத்தை விட்டு இடம் மாறிக் கொண்டேயிருந்தார்கள். ஆறு மாஸம், ஒரு வருஷம் என்று ஒரே இடத்தில் இருந்தால்தானே சாகுபடி செய்து அறுவடை பண்ணிச் சாப்பிட முடியும்? அந்தக் காலத்தில் ‘அக்ரிகல்ச்ச’ரே (வ்யவஸாயமே) தெரியவும் தெரியாது. அதனால் வில்லையும் அம்பையும் வைத்துக் கொண்டு வேட்டையாடி மாம்ஸ போஜனம் செய்ய வேண்டியதாகவே இருந்தது. பாரம்பரியமாக அது மநுஷ்யனின் இயற்கையில் ஊறிப்போய்த்தான் பிற்காலத்தில் ஓரிடத்தில் ‘ஸெட்டில்’ ஆகி, ‘அக்ரிகல்ச்சர்’ தெரிய ஆரம்பித்த பின்பும், கூடவே மாம்ஸ போஜனமும் தங்கி விட்டது’ என்கிறார்கள். இது ஸரியோ, தப்போ, அவ்வளவு எனக்கு ஆராய்ச்சி தெரியாது. ஆனாலும் லோகம் பூராவும் மாம்ஸ போஜனம் விடாமல் இருந்து தான் வருகிறது. இதைத்தான் ஒப்புக்கொண்டு, – மனஸுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் யதார்த்த நிலைமையென்றிருக்கிறதே அதை ஒப்புக்கொண்டு – அதிலிருந்துதான் லக்ஷ்யமான ஆதர்ச நிலைமைக்குப் போக வேண்டுமென்று நம் சாஸ்த்ரகாரர்கள் வர்ணாச்ரம விபாகத்திலே இன்னின்னார் மாம்ஸ போஜனம் பண்ணலாம், இன்னின்னார் பண்ணக்கூடாது என்று வைத்தார்கள். சிலர் பண்ணலாம் என்று வைத்ததால் அப்படியேதான் அவர்கள் சாச்வதமாக பண்ணிக் கொண்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டதாக அர்த்தமில்லை. இவர்களும் போகப்போக, வயஸு ஏற ஏற இதை விட்டு விட்டு ஸாத்விகமான சைவ ஆஹாரத்தை மேற்கொள்ள வேண்டுமென்பதற்கு வழி வகுத்திருக்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is மரக்கறியில் ஹிம்ஸை இல்லையா?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  பூர்வ வழக்கும் கலிகால நடப்பும்
Next