பூர்வ வழக்கும் கலி கால நடப்பும் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

‘ஆதியில் பிராம்மணர்கள் நான்-வெஜிடேரியன் களாகத்தான் இருந்தார்கள்; ரிஷிகள் அந்நிய பதார்த்தம் சாப்பிட்டிருக்கிறார்கள்’ என்றெல்லாம் சொல்லக் கேட்கிறோம். இப்படிச் சொல்கிறவர்கள் சாஸ்திரங்களைப் பார்த்து அந்நிய பதார்த்தம் என்று எந்தெந்தப் பெயர்களைச் சொல்கிறார்களோ அதெல்லாமே அநேக காய்கறிகள், மூலிகைகள், தான்யங்கள் ஆகியவற்றின் பெயர்தான் என்று நம்மில் சாஸ்திராபிமானமுள்ள ஆசார சீலர்கள் காட்டுகிறார்கள். ‘கல்யாண்’, ‘கல்யாண் கல்பதரு’ என்று கோரக்பூரிலிருந்து பத்திரிகை போடுகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த விஷயமாக நிறைய எழுதி, எந்தக் காலத்திலும் எவருக்கும் நம் சாஸ்திரங்கள் மாம்ஸ போஜனத்தை அங்கீகரிக்கவேயில்லையென்று வாதம் பண்ணி வருகிறார்கள். அச்வமேதத்தில் ஒரு குதிரையை அங்க அங்கமாக ஆஹுதி பண்ணியதாக நாம் நினைப்பது கூட வாஸ்தவத்தில் அந்தந்தப் பெயருள்ள மூலிகையின் இன்னின்ன பாகத்தைப் போடுவதுதான் என்று எழுதியிருக்கிறார்கள்.

அப்படியே ஆதியில் ஸர்வஜனங்களும் நான்-வெஜிடேரியன்களாக இருந்ததாக வைத்துக்கொண்டாலும் கூட, சாஸ்திரத்திலேயே பூர்வயுகங்களிலிருந்த சில வழக்கங்கள், மநுஷ்யர்கள் அல்பசக்தர்களாகிவிட்ட இந்தக் கலிக்கு வர்ஜம் [தள்ளுபடி] என்று வைத்து, கலியில் வர்ணத்தில் பிராமணர்கள் சாக போஜனம்தான் பண்ண வேண்டும் ஆச்ரமத்தில் ஸந்நியாஸிகள் சாப்பாட்டிலே மாத்திர மில்லாமல் ஸகல விஷயங்களிலும் பூர்ண அஹிம்ஸை அநுஷ்டிக்க வேண்டும் என்று வைத்திருப்பதைத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உபநிஷத் பாஷ்யத்தில் ஓரிடத்தில் ஆசார்யாள் சொல்லியிருக்கிறதிலிருந்து பூர்வ யுக புருஷர்களுக்கும் நமக்கும் சக்தியிலே ரொம்ப வித்யாஸமுண்டு என்று தெரிகிறது. பிருஹதாரண்யக [உபநிஷ] த்திலே, “அஹம் ப்ரஹாமாஸ்மி – நானே பிரம்மம்தான் – என்று தேவர்களில் பலபேர் கண்டு கொண்டு அப்படியே ஆனார்கள். ரிஷிகளிலேயும் அப்படி ஆனவர்கள் உண்டு. உதாரணமாக வாமதேவர், ‘நானே மநுவாயிருந்தவன்; நானே ஸூர்யானாயிருந்தவன்’ என்று சொன்னதெல்லாம் இப்படிப்பட்ட ப்ரம்மாநுபவத்திலேதான். ஆதிகாலத்திலிருந்த அந்த தேவர்களும், ரிஷிகளும் மட்டுந்தானென்றில்லை; இப்போதும் இந்தக் காலத்தில் நம்மிலிருக்கிற மநுஷ்யர்களில் கூட ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ என்று ஒருவன் அறிந்து கொள்ள முடியும். இப்படிப்பட்டவனும் அவர்களைப் போலவே ஸர்வமும் ஆகிறான். இவனுடைய மஹிமையை குறைக்கத் தேவர்களாலும் முடியாது” என்ற அர்த்தத்தில் மந்திரங்கள் வருகின்றன*. ‘இப்போதும்’ என்று உபநிஷத் நாளில் சொன்னது ஆசார்யாள் இருந்த காலத்துக்கும் பொருந்துவதாக ஆசார்யாள் தம்முடைய பாஷ்யத்தில் காட்டி, எனவே வீர்யம் குறைந்த தற்கால ஜனங்களுக்குக்கூட ப்ரம்ம ஞானமும், அதனால் பெறுகிற மஹிமையும் ஸாத்தியந்தானென்று சொல்கிறார். அப்படிச் சொல்லும்போது, “நம் யுகத்தில் உள்ள மநுஷ்யர்கள் வீர்யத்தில் ரொம்பவும் குறைந்தவகளானதால் இவர்கள் ப்ரம்ம வித்தியோபாஸனையால் ஸர்வ பாவ ஸித்தி பெறுவதென்பது ஸாத்தியமில்லையென்று நினைத்துவிடப் போகிறார்களேயென்றுதான் இந்த மந்திரம் சொல்லப்பட்டிருக்கிறது. ப்ரம்ம ஞானத்தைப் பற்றிய வரையில் மஹாவீர்யவான்களான வாமதேவாதிகளுக்கும் ஹீனவீர்யர்களான இக்கால ஜனங்களுக்குமிடையில் வித்யாஸமே இல்லை” என்கிறார். இப்படியாக, ஆத்ம ஸாக்ஷாத்காரம் பெறுவதில் வித்யாஸமில்லையென்று அவர் சொல்லும் போதே பூர்வ யுகத்துக்காரர்களை “மஹாவீர்யர்கள்” என்றும் தன் காலத்தவர்களை “அல்ப வீர்யர்” “ஹீன வீர்யர்” என்றும் சொல்வதால், மற்ற சக்தி ஸாமர்த்தியங்களில் இப்போதிருப்பவர்கள் முன் காலத்தவரை விடக் குறைந்தவர்கள்தான் என்பதை ஆதரித்திருப்பதும் தெரிகிறது. அதனால்தான் அந்த யுகத்துகாரர்களுக்கு உண்டான சில பழக்கங்களை நாம் அநுஷ்டிக்கக் கூடாது என்பது. ஆரோக்கியசாலி ஒருத்தன் விருந்து சாப்பிடுகிறான் என்பதால் வியாதியஸ்தனும் சாப்பிட்டால் ஜீர்ணமாகுமா? பூர்வத்தில் ரிஷிகள் மாம்ஸ போஜனம் பண்ணினதாகவே வைத்துக் கொண்டலும் (நான் வெறும் assumption -க்குத்தான் இப்படிச் சொல்கிறேன்) அவர்களுக்கு மாம்ஸத்தால் கூட ராஜஸ, தாமஸ மனோவிகாரம் ஏற்பட முடியாதபடி அதை ஜீர்ணம் பண்ணிக் கொள்ளும் சக்தியும் (வயிற்றிலே ஜீர்ணம் பண்ணிக் கொள்வது மட்டுமில்லை; மனஸிலேயும் ஜெரித்துக் கொள்கிற சக்தி) இருந்தது; அப்படிப்பட்ட சக்தி இல்லாத நாம் அந்த மாதிரி பண்ணகூடாது என்று புரிந்து கொள்ள வேண்டும். அந்த யுகத்தில் ஆயிரும் வருஷம், பதினாயிரம் வருஷம் இருந்தார்கள்; லோகாந்தரங்களுக்கு சரீரத்தோடேயே போய்விட்டு வந்தார்கள்; மனோ சக்தியாலேயே என்னவோ ஆச்சர்யங்கள் பண்ணினார்கள் என்று படிக்கிறோமே! அதெல்லாம் செய்ய நமக்கும் சக்தி இருந்தால் அவர்கள் மாதிரியே நாமும் போஜனம் முதலானதுகளையும் வைத்துக் கொள்ளலாம்.

ஒரு த்ருஷ்டாந்தம் சொல்வதுண்டு. ஒரு காடு இருந்ததாம். அதன் பக்கத்தில் ஒரு பெரிய நதி, ஒரு சின்ன குட்டை இரண்டும் இருந்தனவாம். காட்டிலே தீப்பிடித்துக் கொண்டதாம். அப்போது பலமான காற்று சேர்ந்து கொள்ளவே எரிகிற சருகுகள், விறகுத் துண்டுகள், மண் எல்லாம் அடித்துக் கொண்டு வந்து குட்டையிலும் விழுந்ததாம்; நதியிலும் விழுந்ததாம். குட்டையை மண்ணும் செத்தையும் பாதி அடைத்தது என்றால் பாக்கி பாதி அப்படியே அந்த உஷ்ணத்தில் வற்றி, மொத்தத்தில் குட்டை இருந்த இடம் தெரியாமல் ஆகிவிட்டது. மஹா நதியில் விழுந்த குப்பைக் கூளங்களை, அவை பற்றி எரிந்து கொண்டிருந்தாலும் அதன் பிரவாஹமே அணைத்து அடித்துக் கொண்டுபோய் ஸமுத்ரத்தில் விட்டு இருந்த இடம் தெரியாமல் பண்ணிவிட்டது. குப்பை குட்டையை இல்லாமல் பண்ணிற்று; நதியோ குப்பையை இல்லாமல் பண்ணிவிட்டது. இந்த மாதிரியான தோஷமாகத் தெரிகிற சில பழக்க வழக்கங்கள் பூர்வ காலத்தில் வீர்யத்தோடிருந்தவர்களைச் சேர்ந்தபோது அந்த தோஷம் அவர்கள் சக்தியில் அடிபட்டுப் போயிற்று; பலஹீனர்களான நாம் அந்த வழக்கங்களை கைக்கொண்டாலோ தோஷம் நம்மை அடித்துப் போட்டுவிடும். அவர்களுடைய சக்தி நமக்கு இல்லாததால், கலியுகத்தில் எப்படி இருக்கணுமென்று அவர்கள் சட்டம் போட்டுக் கொடுத்திருக்கிறார்களோ அதற்கு அடங்கித்தான் நாம் நடக்கணும். ‘அல்டிமேட்’டாக அஹிம்ஸா போஜனத்துக்குப் போகத்தான் எல்லாரும் முயற்சி செய்யணும் என்பதே நமக்கான தர்மம்.


* ப்ருஹதாரண்யகோபநிஷத் 1.4.10

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is மரக்கறி உணவின் சிறப்புக்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  படிப்படியாக முன்னேற
Next