சாந்த லக்ஷ்யம் கெடலாகாது : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

பதார்த்த சுத்தியின் முக்யம் தெரிவதற்காக நிறையச் சொல்லிக்கொண்டு போனேன். மரக்கறி உணவின் விசேஷம் அது நமக்கு ஸத்வகுணம் அபிவிருத்தியாக உதவுவதோடு இன்னொரு ஜீவனுக்கு ஹிம்ஸை ஏற்படாமலும் செய்கிறது. லோகத்தில் இந்த லக்ஷ்யம் பரவப் பரவக் கொலை குறையும். சாந்த குணம் விருத்தியாகும். கொலைக் கேஸ்கள் வருகின்றனவே, இவற்றில் அபூர்வமாக எவனோ ஒருத்தன்தான் சாகபோஜனம் பண்ணுபவனாக இருப்பான்.

ஆக, லோகத்தில் சாந்தம் பரவ வேண்டுமென்றால் நாம் சாந்தர்களாக வேண்டும். இதற்கு நம் வாழ்க்கை முறைகள் நம்மை ஸத்வ குணமுள்ளவர்களாகப் பண்ண வேண்டும். சாப்பாட்டை வைத்துத்தான் ஜீவனம் என்றிருப்பதால் இப்படிப்பட்ட பழக்கங்களில் ஆஹார விஷயத்துக்கு ரொம்பவும் முக்கியத்வம் இருக்கிறது என்று புரிந்து கொண்டு பார்த்தால், உடம்பை மட்டுமின்றி உள்ளத்தையும் வளர்ப்பதாக உணவை அமைத்துக் கொள்ள நம் சாஸ்திரங்கள் போஜன விதிகளை ஏற்படுத்தித் தரும்போது அதிலே பிரயோஜனமாகும் பதார்த்தங்கள், அதோடு ஸம்பந்தப்பட்ட மநுஷ்யர்கள் என்ற இரண்டுக்கும் சொல்லி இருக்கும் லக்ஷணங்களின்படி, பதார்த்தம் இல்லாமல் மரக்கறி உணவாக இருக்க வேண்டுமென்று முடிவாகிறது. தங்களுடைய அஹிம்ஸா அநுஷ்டானத்தினாலேயே அநேக மஹான்கள் தாங்களிருக்கிற சுற்றுப்புறம் முழுதையும் அன்பு மயமாக்கியிருக்கிறார்கள்; அவர்களுடைய ஆச்ரமத்திலே பார்த்தால் ‘பெண் சிங்கம் யானைகுட்டிக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும்; கன்று குட்டிக்குப் புலி வழிகாட்டி அழைத்துக் கொண்டு போகும். எலிக் குஞ்சை பூனை ரக்ஷித்துக் கொண்டிருக்கும். பாம்புக்குட்டி மேலே வெயில் படாமல் மயில் தோகையை விரித்துக் குடை பிடித்துக் கொண்டிருக்கும்’ என்றெல்லாம் காவ்ய, நாடகங்களில் படிக்கிறோம். இப்படிப் பிறத்தியாரின் பரஸ்பர விரோதத்தையும் போக்கடிக்கிற அளவுக்கு சாந்தத்தைப் பரப்பின பாரம்பர்யத்தை நாம் பாழாக்கி விடாமல் காப்பாற்றிக் கொடுக்க வேண்டுமானால் மரக்கறி உணவில் நம் பற்றை வளர்த்துக் கொண்டால்தான் முடியும். மரக்கறி உணவிலுங்கூட காரம், புளிப்பு முதலியன ராஜஸம்தான்; பழையது போன்றவை தாமஸம். இப்படியே பூண்டு, வெங்காயம், முள்ளங்கி, முருங்கை போல் பல ஸத்வத்துக்கு விரோதமானவை.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is தாம்பூல தாரணம் -  -
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  அளவு முக்கியம்
Next