அளவு முக்கியம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

பரம ஸாத்விக உணவானாலுங்கூட அளவு முக்கியம். ஒரு நாளைக்கு ஒரு சாப்பாடு, ஒரு பலகாரம் என்றிருப்பது நல்லது. இல்லாவிட்டால் இரண்டு சாப்பாடு, ஒரு டிஃபன் என்று இப்போது பெரும்பாலோர் வைத்துக் கொண்டிருக்கிற மாதிரியே இருந்தாலும் ஒவ்வொரு வேளையும் மிதமாகச் சாப்பிட வேண்டும். வைத்ய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் இரண்டின் பிரகாரமும் அரை வயிற்றுக்குத்தான் சாப்பிடணும்; கால் வயிற்றுக்குத் தீர்த்தம் குடிக்கணும்; மற்ற கால் வயிறு வாயுவுக்கு விட்டுவிடணும். தினசரி இரண்டு சாப்பாடு, ஒரு சிற்றுண்டி என்று வைத்துக் கொண்டாலும், சனிக்கிழமை, குருவாரம், ஸோமவாரம், (மாதா, பிதா இல்லாதவரானால்) அமாவாஸ்யை, இன்னம் அவரவர் குல தெய்வத்தைப் பொருத்து ஷஷ்டி, கிருத்திகை, சதுர்த்தி, பிரதோஷம் ஆகிய தினங்களில் ஒரு வேளை சாப்பாடு ஒரு வேளை பலகாரம் என்று வைத்துக் கொள்ள வேண்டும். ஞாயிற்றுக் கிழமையில் அஸ்தமனத்துக்கு அப்புறம் சாப்பிடக் கூடாது. அதனால் மத்யானம் சாப்பிட்டுவிட்டு, அஸ்தமனத்துக்கு முந்தியே பலஹாரம் பண்ணிவிட வேண்டும். பதினைந்து நாளுக்கு ஒருமுறை ‘லங்கனம்’, அதாவது முழுப் பட்டினி போடணும். அதுதான் ஏகாதசி உபவாஸம். அதைப் பற்றி அப்புறம் சொல்கிறேன்1. மற்ற நாட்களிலும் மித போஜனமே பண்ண வேண்டும்.

பசி என்கிறது ஒரு வியாதி மாதிரி. வியாதிக்கு மருந்து ‘டோஸேஜ்’ பிரகாரம்தானே சாப்பிடுவோம்? கொஞ்சங்கூட அதிகம் சாப்பிடமாட்டோமல்லவா? அதே மாதிரி பசி என்கிற வியாதிக்குச் சிகித்ஸையாக மருந்து மாதிரி உணவு உட்கொள்ள வேண்டும். இப்படித்தான் ஆசார்யாள் உபதேசம் பண்ணியிருக்கிறார்2. க்ஷுத் வ்யாதிச்ச சிகித்ஸ்யதாம் – அதாவது, பசி நோய்க்கு மருந்தே சாப்பாடு என்று ஆக்கிக்கொள்ளு. நாக்குக்காகத் தின்னாதே! ருசிருசியான அன்னமாகத் தேடாதே – ஸ்வாத் – வன்னம் ந து யாச்யதாம் ! விதி வசமாக எது கிடைக்கிறதோ அதிலே த்ருப்தியாயிரு – விதிவசாத் ப்ராப்தேந ஸந்துஷ்யதாம் என்று நல்வழி காட்டுகிறார்.

ருசிக்காகச் சாப்பிடும்போதுதான் அமித போஜனம் ஆகிறது. பசி என்று ஒன்றை வைத்து விட்டான்; அதைத் தீர்த்துத் தொலைத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது என்பதற்காகவே சாப்பிடும்போது அளவு மீற மாட்டோம். அஜீர்ணம், மனஸுக்கு அசுத்தி இரண்டையும் வரவழைத்துக் கொள்ளாமலிருப்போம்.


1. “உபவாஸம்” என்ற உரை பார்க்க.

2. “ஸாதன பஞ்சகம்” என்றும் “ஸோபான பஞ்சகம்” என்றும் வழங்கும் உபதேசப் பாடலில்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is சாந்த லக்ஷ்யம் கெடலாகாது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  காலத்தைப் பொறுத்து நியமம்
Next