சாதுர்மாஸ்யம் என்று நாலு மாஸங்கள். அந்த நாலு மாஸத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் ‘ஸௌரமானம்’, ‘சாந்த்ரமானம்’ என்ற இரண்டுவிதப் பஞ்சாங்கங்களைப் பற்றியும் சொல்ல வேண்டும். ஸூர்ய கதியைப் பொருத்தது, ஸௌரமான மாஸம். தமிழ் நாட்டில் அநுஷ்டிக்கப்படுவது இதுதான். இதன்படி, ஸூர்யன் மேஷம், ரிஷபம் முதலான பன்னிரெண்டு ராசிகளில் என்றைக்கு பிரவேசிக்கிறானோ அன்றைக்கு சித்திரை, வைகாசி முதலான பன்னிரெண்டு மாஸங்கள் பிறக்கும். மறுபடியும் ஸூர்யன் மேஷப் பிரவேசம் பண்ணுவதே அடுத்த வருஷப் பிறப்பு. தேசத்தின் மற்ற பெரும்பாலான பகுதிகளில் சந்திரனின் கதியைப் பொருத்த ‘சாந்த்ரமான’ மாஸம் பின்பற்றபடுகிறது. அமாவாஸ்யை ஆனவுடன் வரும் பிரதமையிலிருந்து அடுத்த அமாவாஸ்யை வரையிலான காலம் ஒரு சாந்த்ரமான மாஸம். இதன்படி நம்முடைய (தமிழ்நாட்டினரின்) பங்குனி அமாவாஸ்யை ஆகி மறுநாள் பிரதமையன்று அவர்களுக்கு புதுவருஷத்தின் சித்திரை பிறந்துவிடும். ‘யுகாதி’ என்று அன்று தெலுங்கர், கன்னடஸ்தர் ஆகியோர் கொண்டாடுவார்கள். மலையாளத்தில் தமிழ் வழக்குத்தான். நம்முடையதான ஸூர்யனின் மேஷ ராசிப் பிரவேசத்தைத்தான் அவர்களும் ‘விஷூ’ என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் அந்த மாதத்துக்குச் சித்திரை என்று அவர்கள் பேர் சொல்லாமல் ‘மேடம்’ என்றே சொல்வார்கள். இப்படியே வைகாசியை ‘எடவம்’ (ரிஷபம்) , ஆனியை ‘மிதுனம்’ என்றெல்லாம் அந்தந்த ராசிப் பெயராலேயே சொல்வார்கள். நாம் சித்திரை, வைகாசி என்றெல்லாம் சொல்வது, நம்முடையது ஸௌரமான மாஸமானாலும் எதனாலோ பேர் மட்டும் சாந்திரமானக்காரர்களுடையதையே நாமும் எடுத்துக் கொண்டிருப்பதால்தான். அந்தப் பேர் — சித்திரை, வைகாசி முதலியன — அந்தந்த மாஸங்களில் பெளர்ணமியன்று சந்திரன் பெரும்பாலும் எந்த நக்ஷத்ரத்தில் உதிக்கிறதோ அதை வைத்தேயாகும்*. மலையாளத்தில்தான் சௌரமானத்திற்கு ஏற்க, ஒவ்வொரு மாஸமும் ஸூர்யன் எந்த ராசியில் ப்ரவேசிக்கிறானோ, அந்தப் பெயரையே மாஸப் பெயராக வைத்திருக்கிறது. ஆனால் அங்கே மேடம் (நம்முடைய சித்திரை) வருஷப் பிறப்பு இல்லை. ‘சிங்கம்’ என்கிற (நம் ஆவணி) மாஸம்தான் வருஷப் பிறப்பு.
நமக்குச் சித்திரை அமாவாஸ்யை ஆனவுடனேயே சாந்திரமானப்படி வைகாசி பிறந்துவிடும். இப்படியே நம் ஒவ்வொரு அமாவாஸ்யையும் ஆனவுடன் வரும் பிரதமையில் சாந்திரமானத்தின் அடுத்த மாஸம் பிறந்துவிடும். அந்தக் கணக்கின்படி ஒரு வளர்பிறையும், ஒரு தேய்பிறையும் சேர்ந்தால் ஒரு மாஸம். இது வாஸ்தவத்தில் முப்பது நாட்களுக்குக் கொஞ்சம் குறைச்சல். அதனால் சாந்திரமானப்படி பன்னிரண்டு மாஸமும் சேர்ந்து 360 நாள் வராது. ஆனால் நியாயமாக 3651/4 நாள் சேர்ந்ததுதானே ஒரு வருஷம்? — அதாவது பூமி ஸூர்யனைச் சுற்றி வருவதற்கான காலம்? இந்த வித்யாஸத்தை ஸரிகட்டுவதற்காக மூன்று வருஷத்துக்கு ஒரு தரம் சாந்திரமானத்தில் ‘மலமாஸம்’ அல்லது ‘அதிக மாஸம்’ என்பதாக, பன்னிரண்டுடன் பதின்மூன்றாக இன்னொரு மாஸத்தைச் சேர்த்துக் கொள்வார்கள். அதில் சுப கார்யம் பண்ண மாட்டார்கள்.
‘சாதுர்மாஸ்ய’த்தைப் பற்றிச் சொல்வதற்காக இந்த [ஸௌரமான, சாந்த்ரமான]ப் பேச்சு வந்தது. நம்முடைய ஆனி அமாவாஸ்யை ஆனவுடன் சாந்திரமானப்படியான ஆஷாட மாஸம் (ஆடி மாஸம்) பிறந்துவிடுகிறது. இந்த ஆஷாட மாஸ சுக்ல பக்ஷ ஏகாதசியன்று க்ஷீராப்திநாதனான பகவான் தூங்க ஆரம்பிக்கிறார். அதைத் தொடர்ந்து வருகிற ச்ராவண (ஆவணி) , பாத்ரபத (புரட்டாசி) , ஆச்வின (ஐப்பசி) மாஸங்களிலும் தூங்கியபடியே இருந்துவிட்டு, கார்த்திகை சுக்லபக்ஷ ஏகாதசியன்று விழித்துக் கொள்கிறார். ஆஷாட ஏகாதசியிலிருந்து கார்த்திக ஏகாதசி வரையிலான இந்த ‘பீரியட்டி’ல் அடங்குகிற நாலு மாஸ காலத்துக்கே சாதுர்மாஸ்யம் என்று பெயர். (ஆஷாட பௌர்ணமாஸ்யைக்குத்தான் வியாஸ பூர்ணிமை என்றும் குரு பூர்ணிமை என்றும் பெயர். பொதுவாக, இந்த வியாஸ பூர்ணிமையிலிருந்தான் சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பிப்பதாக அபிப்ராயமிருக்கிறது. ஸரியாகச் சொன்னால் பூர்ணிமைக்கு முந்திவரும் த்வாதசியன்றே அது ஆரம்பித்து விடுகிறது.)
இந்த சாதுர்மாஸ்ய காலத்தில்தான் அநேகமாக முக்யமான பண்டிகைகள் எல்லாம் வருகின்றன. கோகுலாஷ்டமி, பிள்ளையார் சதுர்த்தி, நவராத்ரி, தீபாவளி, மஹாஷஷ்டி, கார்த்திகை எல்லாம் இந்த ‘பீரியட்’டில் வருபவைதான். ஆனாலும் தக்ஷிணாயனத்தைச் சேர்ந்த இந்த நாலு மாஸத்தில் கல்யாணம், உபநயனம், கும்பாபிஷேகம் முதலான சுபகார்யங்களைப் பண்ணினால் பலனில்லை. எல்லா ஜனங்களுக்குமான பண்டிகைகள் சாதுர்மாஸ்யத்தில் வந்தாலும் தனி மநுஷ்யர்கள் அல்லது ஆலயம் போலக் குறிப்பிட்ட ஒரு இடம் ஆகியவற்றுக்கான விழாக்களுக்கு இந்தக் காலம் ஏற்றதில்லை. இக்காலத்தில் அவரவர்களும் நியமமாகப் பூஜை முதலானவற்றைச் செய்து கொண்டு சாதுர்மாஸ்ய வ்ரதம் அநுஷ்டிக்க வேண்டும். இதிலே ஆஹார நியமம் முக்கியம்.
மற்ற காலங்களில் சுத்தமானதாக ஒத்துக் கொள்ளப்படும் ஆஹார பதார்த்தங்களிலும் இந்த நாலு மாஸங்களில் ஒவ்வொரு மாஸமும் ஒவ்வொரு வகையானது தள்ளப்பட்டிருக்கிறது. இதை ஆஷாட த்வாதசியிலிருந்து கார்த்திகை த்வாதசி வரையிலான நாலு மாஸமாக வைத்துக் கொள்வது ஒரு வழக்கம். இன்னொரு வழக்கப்படி ஆஷாடத்தை அடுத்து வரும் ச்ராவண மாஸத்தில் ஆரம்பித்து கார்த்திகை முடிய இருக்கும் நாலு மாஸத்தில் அநுஷ்டிப்பதாக இருக்கிறது. ச்ராவண மாஸம் பூராவும் காய்கறிகளே சாப்பிடக்கூடாது. குழம்பில்கூடத் ‘தான்’ (காய்கறி) போடக்கூடாது. அப்பளாம், வடாம், சுண்டல் மாதிரியானவற்றைத் ‘தொட்டுக்கொண்டே’ அந்த மாஸத்தைத் தள்ள வேண்டும். குழம்பேகூட புளியும் காய், மிளகாயும் காய் என்பதால் அவை இல்லாமல் மோரையும் இஞ்சியையும் போட்டே செய்ய வேண்டும். பாத்ரபத மாஸம் பூராவும் தயிரும் மோரும் சேர்த்துக் கொள்ளக்கூடாது. ஆச்வின மாஸம் முழுதும் பால் தள்ளுபடி. கார்த்திகை மாஸத்தில் நெய்யும், உளுந்து, துவரை, கடலை முதலான எந்தப் பருப்பு தினுஸும் சாப்பிடக் கூடாது. சாதம் அல்லது சப்பாத்தியுடன் வெறுமனே கறிகாய்களை மட்டும் வேக வைத்துச் சாப்பிடலாம்.
மாத்வர்கள்தான் தற்போது ஓரளவு இந்த சாதுர்மாஸ்ய ஆஹார நியமத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தினப்படி அகத்துச் சமையல் இதன்படி செய்யாவிட்டாலும் சாதுர்மாஸ்யத்தில் சிராத்தம் வந்தால் அந்த சிராத்த போஜனத்தில் அவர்கள் சாதுர்மாஸ்ய நியாயப்படி தள்ள வேண்டியதைத் தள்ளிவிடுகிறார்கள். மற்றவர்கள் எதையும் கவனிப்பதில்லை. ஆசார ஸம்பிரதாயத்தில் வந்துள்ள ஸந்நியாஸிகள் மட்டும் நியமத்தை அநுஸரிக்கிறோம். ஆனால் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்வதும் வர வர சாஸ்த்ரப் பிரகாரம் இல்லாமல் எப்படியோ போய்க் கொண்டிருக்கிறது.
* “தெய்வத்தின் குரல்” இரண்டாம் பகுதியில் “சிக்ஷை: வேதத்தின் மூக்கு” என்று உரையில் ‘மாதப் பெயர்கள்‘ என்ற உட்பிரிவு பார்க்க