இதைப்பற்றிச் சொல்லும்போது ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேனென்று ஞாபகம் வருகிறது. ஆஹாரத்தோடு ஸம்பந்தப்பட்டவர்களைப்பற்றிச் சொல்லும்போது அதைச் சமைத்தவர்கள், பரிமாறுகிறவர்கள் ஆகிய இரண்டு பேரோடுகூட, கூடச் சாப்பிடுகிறவர்களையும் சொல்லியிருக்க வேண்டும்.
போஜனம் பண்ணும்போது நம்மோடு சாப்பிடுகிறவர்களுடைய குண தோஷங்களின் பரமாணுக்களும் நாம் சாப்பிடும் அன்னத்தில் ஓரளவுக்குச் சேர்கிறது. பரம சுத்தமாக இருக்கப்பட்டவர்களைப் பங்க்தி பாவனர்கள் என்று சொல்லியிருக்கிறது – அதாவது அவர்கள் உட்கார்ந்திருப்பதாலேயே அந்தப் பந்தி (பங்க்தி) யைச் சுத்தப்படுபடுத்தி விடுகிறார்களாம். அவர்களோடு நாம் போஜனம் பண்ணினால் அந்த ஆஹாரம் உள்ளே போய் நம் மனஸைத் தூயதாக்கும். இதே மாதிரி ‘பங்க்தி தூஷக’ர்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறது. ரொம்பவும் தோஷமுள்ள இவர்கள் உட்கார்ந்திருப்பதாலேயே பந்தி முழுதும் அசுத்தி ஆகிவிடுகிறதாம்.
இது மட்டுமில்லை. சைவ போஜனமே பண்ண வேண்டிய ஜாதிக்காரன் அசைவ போஜனம் அநுமதிக்கப்பட்ட ஜாதியாருடன் சேர்ந்து சாப்பிட்டால் என்ன ஆகும்? அந்நிய பதார்த்தத்தில் இவனுக்கு ஒரு ஆசை உண்டானாலும் உண்டாகக் கூடுமல்லவா? நியமம் தப்ப இடமுண்டாகிவிடும் அல்லவா? ‘ஸம பங்க்தி’யினால் ஸமத்வம் கொண்டு வருவதாகச் சொல்லிக்கொண்டு, கிழங்கையும், பழத்தையும் தின்றுகொண்டு கிடக்க வேண்டிய ஒரு ஸந்நியாசியை, முள்ளங்கி வெங்காய வாஸனை சபலப்படுத்துகிற பொதுப் பங்க்தியில் கொண்டு உட்கார்த்தி வைத்தால் அவனுடைய பெரிய லக்ஷ்யத்துக்கே அல்லவா ஹானி வந்துவிடும்? இம்மாதிரி ஒரு ஜாதிக்காரன், அல்லது ஆச்ரமக்காரனின் தர்மம் கெட்டுப் போவதால் பாதிக்கப்படுவது அவன் மட்டுமில்லை; இதனால் அவன் செய்கிற கார்யம் கெட்டு அவனால் ஸமூஹத்துக்கு கிடைக்கிற நன்மையே போய்விடுகிறது என்பதைச் சீர்திருத்தக்காரர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
ஸம பங்க்தி, ஹாஸ்டல்களின் காமன் மெஸ், கான்டீனில் ஒரே சமையற்கட்டிலேயே சைவ பதார்த்தம், அசைவ பதார்த்தம் இரண்டையும் சமைத்து அந்தப் பரமாணுக்கள் கலப்பது என்றெல்லாம் பண்ணியிருப்பது எல்லாரையும் பக்குவ ஸ்திதியில் ஒரேபோல் இறக்குகிற ஸமத்வத்தை சாதித்திருக்கிற அநேக சீர்திருத்தங்களில் ஒன்றாகத்தான் ஆகும்!
கேட்டால் இப்படியெல்லாம் சீர்திருத்தம் பண்ணினால்தான் ஒற்றுமை உண்டாகுமென்கிறார்கள். எனக்குச் சிரிப்புதான் வருகிறது – எல்லாரையும் சேர உட்கார வைத்து, நியமமில்லாத ஆஹாரதிகளைப் போட்டுவிட்டால், ஒற்றுமை உண்டாகிவிடும் என்பதைக் கேட்க! உலகத்தின் எல்லா தேசங்களையும் யுத்தத்தில் இழுத்துவிட்டு ஜன ஸமுதாயத்துக்கே பெரிய சேதம் விளைவித்த World War -க்குக் காரணமாயிருந்த ராஜாங்கங்களெல்லாம் யுத்தப் பிரகடனம் செய்ததற்கு முதல் நாள் வரையில் பரஸ்பரம் விருந்து கொடுத்துக் கொண்டு, இவருக்கு அவர் ‘டோஸ்ட்’, அவருக்கு இவர் ‘டோஸ்ட்’ என்று சேர்ந்து சாப்பிட்டுவிட்டுத்தான் மறுநாளே ஒருத்தர் தேசத்தை இன்னொருத்தர் நாசம் பண்ண ஆரம்பித்தார்கள் – ராணுவம், ஸிவிலியன் பாபுலேஷன் என்ற வியவஸ்தை இல்லாமலே! அப்படியும் ‘ஒற்றுமை’ ஸஹபோஜனத்தால் வந்துவிடும் என்று உபதேசம் செய்கிறார்கள்! ஏதோ தாற்காலிகமாக ஏற்படக்கூடிய அல்ப திருப்திக்காகவே இப்போது நடக்கும் இந்த தேக் கச்சேரிகளும், சிற்றுண்டி விருந்துகளும், கலப்பு போஜனங்களும் பிரயோஜனப்படுகின்றனவே தவிர இதனால் ஒற்றுமையோ, ஸெளஜன்யமோ உண்டாகி விடவில்லை என்பது இந்தப் புதுப் பழக்கங்கள் நம் தேசத்தில் ஏற்பட்டு பல வருஷங்களாகி, இன்னமும் தினந்தினம் ஸமூஹச் சண்டைகள் ஜாஸ்தியாகிக் கொண்டு தானிருக்கின்றன என்பதிலிருந்தே தெரிகிறது. பட்டம் பெறுவது மாதிரி ஸ்வய லாபத்தை உத்தேசித்து ஒரு ஏமாற்று வித்தையாகத்தான் இந்த விருந்து உபசாரங்கள் நடக்கின்றன. இதோடு போனால் கூடப் பரவாயில்லை. இந்த நவ நாகரிக விருந்துகள் தர்ம நூல்களிலிருந்தும் வெகுதூரம் எட்டிப் போய்க் கொண்டிருப்பதால் ஆத்மார்த்தமாகவும் பெரிய நஷ்டத்தை உண்டாக்குகின்றன.
சாச்வத ஒற்றுமைக்கு வழி, சேர்ந்து உண்டு காட்டுவதல்ல; சேர்ந்து தொண்டு காட்டுவதேயாகும். நான் பல ஸமயங்களில் சொன்னதுபோல ஜாதி என்கிற பேச்சுக்கே இடமில்லாமல், ஸகல ஜனங்களும் சேர்ந்து ஸகல ஜனங்களுக்குமான தொண்டுகளைச் செய்வதால் தான் ஒற்றுமை வளரும். இந்தப் பொது ஸேவை பரிசுத்தமாக நடக்க முடியாதபடி அதிலும் அரசியலைக் கொண்டுவந்து விட்டு விட்டு, ஆசார சாஸ்திரத்தைச் சேர்ந்த ஆஹாராதி விஷயங்களில் அரசியல் அபேத வாதங்களைக் கலந்து தர்மங்கள் கெடும்படிச் செய்து வருகிறார்கள்.
அவனவன் தானே சமைத்துக் கொள்வதோடு, சாப்பிடும்போதும் பிறரின் பரமாணு எதுவும் சேராமல் தனியாகவே சாப்பிடுவது ச்லாக்கியம். ஸ்வயம்பாகம் பண்ணிக் கொள்கிறவர்களே சாப்பிடும்போது ஒருத்தருக்கு மேல் சேர்ந்தால், ‘நீ என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாய்?’ என்று ஒருத்தரையருத்தர் கேட்டுக் கொண்டு நாக்குச் சபலத்துக்கு இடங்கொடுக்க வேண்டிவரும். ஆகையால் தனித்தனியாய்ப் பண்ணிக்கொள்வதைத் தனித்தனியாகவே சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஸமத்வமும் ஸோஷலிஸமும் வேறு துறைகளினால் ஏற்பட்டால் போதும்.
பொதுச் சமையல், ஸமபந்தி என்று ‘சீர்திருத்தம்’ பண்ணியதால் பிராணி ஹிம்ஸைதான் ஜாஸ்தியாயிருக்கிறது. தலைமுறை தத்வமாக மரக்கறி உணவையே கடைப்பிடித்த பலர் நான்-வெஜிடேரியன்கள் ஆகியிருக்கிறார்களென்றால் அதற்கு இந்த ‘சீர்திருத்தம்’ தான் காரணம்.
பஹுகாலமாக நான்-வெஜிடேரியன்களாகவே இருந்து வருகிற தேசங்களிலும் அங்கங்கே ஏதோ பத்து இருபது பேர் கஷ்டப்பட்டு வெஜிடேரியன்ஸாக இருந்து கொண்டு வெஜிடேரியனிஸத்தைப் பிரசாரப்படுத்தப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் புதிசாக எதை ஏற்படுத்த முயல்கிறார்களோ அது ஏற்கெனவே நம்மிலே எத்தனையோ கோடிப் பேருக்குப் பாரம்பர்யமாக வந்திருந்தும், நாம் இருக்கிறதையும் அழித்துவிட்டு, லோகத்துக்கே வழிகாட்டியாகச் செய்கிற லாபத்தை நஷ்டப்படுத்தி, ‘சீர்திருத்தம்’ செய்கிறோம்! மநுஷ்யர்களாகப் பிறந்தவர்கள் தங்களுடைய status (அந்தஸ்து) என்கிறதை அதற்கு ஸம்பந்தமேயில்லாமல் சாப்பாட்டில் கொண்டு வந்து அதற்காக ஏற்படுத்துகிற ஸமத்வத்துக்காகப் பசு பக்ஷிகளாகப் பிறந்த அநேக ஜந்துக்கள் உயிரையே இழக்கும்படிப் பண்ணி வருகிறார்கள். காந்தீயத்தில் இந்த ஸமத்வம், அந்த அஹிம்ஸை இரண்டுமே இருக்கின்றன என்கிறார்கள்!
தானே தன் சாப்பாட்டைத் தயாரித்துக் கொள்வதிலுள்ள அநேக நல்ல பலன்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். அதிலே எதிர்பார்க்க முடியாத இன்னொரு பிரயோஜனத்தைச் சொல்கிறேன்.