வேத வித்யாப்யாஸமே ஸ்வயம்பாகத்தால் வளரும். இதற்கும் அதற்கும் என்ன ஸம்பந்தம் என்று தோன்றலாம். சொல்கிறேன்: வடக்கே நான் போயிருக்கும் போது பார்த்திருக்கிறேன். ஒரிஸ்ஸா, பெங்கால், யு.பி. முதலிய இடங்களில் நம்மூர் மாதிரி வேத பாடசாலை என்றில்லாவிட்டாலும் ஸம்ஸ்க்ருத பாடசாலை என்று இருக்கும். நம்மூரில், தமிழ்நாட்டில் மொத்தம் ஏதாவது முப்பது நாற்பது பாடசாலைகள் நல்ல ‘ஸ்ட்ரெங்க்த்’தோடு இருக்குமா என்கிறதே ஸந்தேஹமாயிருக்க, அங்கேயெல்லாம் இப்படிப்பட்ட ஸம்ஸ்க்ருத பாட சாலைகள் நூற்றுக்கணக்கில் இருந்தன. பாடசாலை என்பதே அங்கே ‘டோல்’ என்பார்கள். இந்த விஷயத்தில் ரொம்ப backward -ஆக இருக்கும் என்று நாம் நினைக்கிற அஸ்ஸாமிலேயே சுமார் இருநூறு டோல் இருக்கிறதென்று கவர்னர்* இதிலே இன்னும் வேடிக்கை என்னவென்றால் நம் பாடசாலைகளுக்கு நிறைய மூலதனம் இருக்கிறாற்போலவும் வடக்கத்திப் பாடசாலைகளுக்குக் கிடையாது.
ஆசாரம், ஸம்பிரதாயம் என்பதிலெல்லாம் நாம்தான் ரொம்ப மேல் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்த போதிலும், நம் பக்கத்தில் நிறைய மூலதனமிருந்தும் வேதபாடசாலைகள் தினக்ரமேண க்ஷீணித்துப் போகிறதேன், வடக்கே இத்தனை ‘டோல்’கள் இப்படி நல்ல ‘ஸ்ட்ரெங்கத்’தோடு இருப்பதேன் என்று எனக்கு ரொம்ப நாள் புரியாமலிருந்தது. அப்புறம்தான் அவர்களையே கேட்டதில் புரிந்தது.
“மூலதனம் இல்லை என்கிறீர்கள். இத்தனை மாணவர்கள் எப்படியிருக்கிறார்கள்?” என்று கேட்டேன்.
“மாணவர்கள் இருப்பதற்கு மூலதனம் என்னத்துக்கு?” என்று எதிர்கேள்வி கேட்டார்கள்.
“ஃப்ரீயாக சாப்பாடாவது போட்டால்தானே வித்யார்த்திகள் சேர்வார்கள்?” என்றேன்.
“ஆமாம், சாப்பாடு போடவேண்டியதுதான். அதற்கு மூலதனம் வைப்பானேன்? கிரானாக்கார பனியாவோ, மார்வாரியோ இருக்கிறான். (கிரானா என்றால் பலசரக்குக் கடை.) ஸம்ஸ்க்ருதம் படிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு பசங்கள் போய்க் கேட்டால் அவன் ஆட்டமாவும் மக்கனும் கொடுத்து விடுகிறான். (மக்கன் என்றால் வெண்ணெய்.) அந்தந்த மாணவனே அந்த மாவைப் பிசைந்து தவ்வாவிலே போட்டு சுட்டு ரொட்டி பண்ணித் தின்று கொள்கிறான். அவ்வளவுதானே? ‘மக்கன்’ கிடைக்காவிட்டால் கூடச் சரி. அப்படியே நெய்யுமில்லாமல் சுக்கான் ரொட்டியாக வாட்டித் தின்று விடுவது எங்களுக்குப் பழக்கந்தான். தவ்வா கூட வேண்டுமென்பதில்லை. ரொட்டி மாவுருண்டையையே கொஞ்சம் தட்டி அப்படியே சுள்ளியிலே போட்டுவிட்டால் அது உப்பிக்கொண்டு வெந்துவிடும். அதைத் எடுத்துத் தின்பதும் வழக்கம்தான். கொஞ்சம் ஜாஸ்தி வசதியிருந்தால் பருப்பை வேகவைத்து ஒரு டாலும் பண்ணிக்கொண்டு விடுவோம். எத்தனையோ கிரானாக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கடைக்காரனும் ஒரு பையனுக்கு மாவு முதலானது கொடுக்க யோசிப்பதில்லை” என்று ரொம்பவும் ஸிம்பிளாகச் சொல்லி விட்டார்கள்.
இங்கே நம்மூரிலானால் பாடசாலை வைக்கிறோம் என்றாலே உக்ராணம், வெங்கலப் பானை, வாணலி, அண்டா, குண்டான், அரிசி மூட்டை, புளிப்பானை, அப்புறம் அஞ்சறைப் பெட்டி இத்யாதி வேண்டியிருக்கின்றன. நிர்வாஹம் பண்ண மணியக்காரன், காவலுக்கு ஆள் இதெல்லாம் வேறே. எத்தனைதான் மூலதனமிருந்தாலும் இப்போதிருக்கிற இன்ஃபளேஷனிலும் விலைவாசி நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருப்பதிலும், சாப்பாட்டுக் செலவுக்கே கட்ட மாட்டேனென்று ஆகிறது. அப்புறம்தானே வாத்தியார் சம்பளம், பசங்களுக்கு ‘ஸ்டைபென்ட் இதெல்லாம்? இந்தக் காரணத்தால்தான் பாடசாலைகளையே மூட வேண்டியிருக்கிறது.
அவர்கள் சொன்னதிலிருந்துதான், ‘ஓஹோ! தக்ஷிணத்தில் வேதவித்யை க்ஷீணித்துப் போகிறதற்கே நம்முடைய அஞ்சறைபெட்டிச் சமையல்தான் காரணமா? நாக்கு ருசிக்காகவா நம் மதத்தின் வேரான வேதத்தை அறுத்திருக்கிறோம்?’ என்று தெரிந்தது.
இத்தனை தினுஸு, காரமும் புளிப்புமாகச் சாப்பிட்டாலே பிரம்மசாரியாக இருக்கவேண்டியவனுக்கு நல்லதில்லை. “நீயே சமைத்துச் சாப்பிட்டுக்கொள்” என்று விட்டுவிட்டால் அவன் இந்த ‘அஞ்சறை பெட்டி ஆஃபீஸ்’ நடத்தவே மாட்டான். படிக்கணும், அநுஷ்டானம் பண்ணணும் என்பதால் அவனாகவே வடக்கே செய்கிற மாதிரி ஏதோ ஒரு தினுஸு, இரண்டு தினுஸு லேசான ஆஹாரமாக, ஸத்வப் பிரதானமானதாக, பண்ணிச் சாப்பிட்டுவிட்டுத் திருப்தியாயிருந்து விடுவான். பாடசாலைக்குப் பெரிய மூலதனம் வேண்டாம் என்றால், வேத வித்யையும் தன்னால் இப்போதிருப்பதைவிட நன்றாக வளரும்.
*1958 எப்ரலில் அப்போது கவர்னராயிருந்த அஸ்ஸாமியரான ஸ்ரீ விஷ்ணுராம் மேதி ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளை தரிசித்து உரையாடினார் சொன்னார்.