ஸிக்கியரின் குருபக்தி : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஆசார்யன் கிடைத்துவிட்டால் போதும், ஸ்வாமிகூட வேண்டாம்; ஸ்வாமிகூட ஆசார்யனுக்கு ஸமதையில்லை என்று பக்தி பண்ணினவர்கள் எல்லா ஸம்பிரதாயத்திலும் உண்டு. குரு என்றால் கூடவே இருந்தாக வேண்டிய ‘சிஷ்யன்’-‘சிக்ஷை’ என்பதை வைத்துத்தான் ‘சிக்கிய’ மதம் என்பது ஏற்பட்டிருக்கிறது.

அதில் குரு கோவிந்த ஸிங் என்பவர் ‘கல்ஸா’ என்கிற அவர்களுடைய ஸ்தாபனத்தை ஏற்படுத்தும்போது, நரபலி வேண்டும் என்று கேட்டாராம். உடனேயே ஒருத்தர் எழுந்திருந்து தன் தலையையே கொடுப்பதற்காக அவரோடு போனாராம். அவரை அழைத்துக் கொண்டு போன கோவிந்த ஸிங் கொஞ்ச நாழிக்கு அப்புறம் ரத்தம் சொட்டும் கத்தியோடு திரும்பி வந்து இன்னொரு பலி வேண்டும் என்றாராம். உடனே இன்னொருத்தர் எழுந்திருந்து அவரோடு போனாராம். மறுபடியும் அவர் ரத்தம் சொட்டுகிற கத்தியோடு திரும்பி வந்தாராம். இப்படியே ஐந்து தடவை அவர் பலி கேட்க ஐந்து பேர் ஸந்தோஷமாக குரு வார்த்தைக்காகப் பிராணத் தியாகம் பண்ணுவதும் பெரிசில்லை. என்று அவர் பின்னோடு போனார்களாம். அப்புறம் அவர் அந்த ஐந்து பேரையுமே ஸபைக்கு அழைத்துக் கொண்டு வந்து, தம்மைச் சேர்ந்தவர்களின் பக்தி விஸ்வாஸத்தை சோதனை பண்ணுவதற்காகவே இப்படி விளையாட்டாக பலி கேட்டதாகவும் வாஸ்தவத்தில் எவரையும் கொல்லாமல் ஏதோ ஆட்டு ரத்தத்தைத்தான் காட்டியதாகவும் சொல்லி, உயிரைத் திருணமாக நினைத்து பலியாவதற்கு வந்த அந்த ஐந்து பேரையும் கல்ஸாவில் முக்கியஸ்தர்களாக நியமித்தாரம்.

இப்படி எல்லா மதங்களிலும் அவற்றில் தோன்றிய மஹான்களை தெய்வமாக விச்வாஸித்த சிஷ்யர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த குருபக்தியாலேயே அவர்களும் குருவைப் போன்ற யோக்யதை ஸம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்; இப்படி ஒரு Spiritual Status (ஆத்மிக அந்தஸ்து) வந்துவிட்டும் தங்களை மேலே கொண்டுவந்த மஹானையே உயர்த்திச் சொல்லிப் பணிந்து வந்திருக்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ராமாநுஜ ஸம்ப்ரதாயத்தில்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ''அனைவருக்கும் உரிய அஸ்வமேதம்''
Next