”அனைவருக்கும் உரிய அச்வமேதம்” : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இந்தக் காலத்தில் இருக்கிற நாமெல்லோரும் அச்வமேத யாகம் செய்ய முடியுமா?

‘இதென்ன கேள்வி? ஸ்வாமிகள் சரியாகத்தான் பேசுகிறாரா?’ என்று தோன்றும். ‘இந்தக் காலத்திலாவது? அச்வமேதமாவது? பழைய காலத்திலேயே க்ஷத்ரிய வர்ணத்தில் பிறந்த மஹாராஜாக்கள் இரண்டொருத்தர் தான் அச்வமேதம் செய்ய முடிந்திருக்கிறது. ஒரு ராஜ்யத்து அரசனாகப் பட்டாபிஷேகம் ஆனபின், சதுரங்க ஸேனா பலத்தோடுகூடச் சொந்தமாகவும் வீரதீர பராக்ரமங்கள் படைத்த ஒரு ராஜாதான் அச்வத்தை ஸகல தேசங்களுக்கும் ஓட்டி, அந்தத் தேசங்களையெல்லாம் ஜயித்து, திக்விஜயம் பண்ணிச் சக்ரவர்த்தி என்ற பிருதத்தை அடைந்து அச்வமேதம் பண்ணமுடியும். இப்போது நம்மில் யார் அப்படிச் செய்ய முடியும்?’ என்று தோன்றும் நம்மில் யாரவது அச்வமேதம் செய்ய முடியுமா என்று கேட்காமல் (இப்படிக் கேட்டாலே அஸம்பாவிதம்தான்!) நாம் எல்லோரும் அச்வமேத யாகம் செய்ய முடியுமா என்று கேட்கிறேனே என்று ஒரே குழப்பமாகத் தோன்றும்.

முடியுமா, முடியாதா என்பது ஓரு பக்கம் இருக்கட்டும். எதற்காக அச்வமேதம் செய்ய வேண்டும்? நம் பதவியையும் பவிஷையும் அது காட்டுகிறதே என்பதற்கா? அச்வமேதம் செய்தல் இந்திரலோகம் கிடைக்கும் என்பதற்கா? இதற்காகவெல்லாம் என்றால் அச்வமேதம் செய்யவே வேண்டாம். பதவி, பவிஷு, தேவலோக ஸெளக்கியம் எல்லாமே அஹங்காரத்தை வளர்த்துக் கொள்கிற காரியங்கள்தாம்! நம்மிடம் கொஞ்சநஞ்ச ஞானம்கூடச் சேரவொட்டாமல் இடைஞ்சல் செய்கிறவைதாம். பின் எதற்காக அச்வமேதம் என்றால்:

ஹயமேத ஸமர்ச்சிதா

என்று அம்பாளுக்கு லலிதா த்ரிசதியில் ஒரு நாமா சொல்லியிருக்கிறது.

‘த்ரிசதி’ என்பது முந்நூறு பெயர்கள் கொண்ட நாமாவளி. அர்ச்சனையில் பிரயோஜனமாவது ‘ருத்ர த்ரிசதி’ என்பது வேதத்திலிருந்தே எடுத்தது. ‘லலிதா த்ரிசதி’ வேதத்தில் இல்லாவிட்டாலுங்கூட அதற்கு ஸமதையான கௌரவம் பெற்றிருக்கிறது. ஹயக்ரீவரிடமிருந்து ‘லலிதா ஸஹஸ்ரநாம’ உபதேசம் பெற்றுங்கூட மனசாந்தி அடையாத அகஸ்தியர் இந்த த்ரிசதியைக் கேட்டுத்தான் தெளிவை அடைந்தார். ஆசார்யாளே பாஷ்யம் பண்ணியிருக்கிற பெருமையும் இந்த த்ரிசதிக்கு இருக்கிறது. லலிதா த்ரிசதி, லலிதா ஸஹஸ்ர நாமம் இரண்டுமே ரொம்ப மந்த்ரவத்தானபடியால் இவற்றை உரிய நியமங்களோடு ரஹஸ்யமாகவே ரக்ஷிக்க வேண்டும்.

ஹயக்ரீவர் உபதேசித்த இந்த த்ரிசதியில் ”ஹயமேத ஸமர்ச்சிதா” என்று ஒரு நாமா இருக்கிறது. ஹயம் ஹயம் என்றால் அச்வம், குதிரை என்று அர்த்தம். கழுத்துக்கு மேலே குதிரை முகம் படைத்த மஹாவிஷ்ணுவின் அவதாரமாக இருப்பவரே ஹய-க்ரீவர். ஹயமேதம் என்றாலும் அச்வமேதம் என்றாலும் ஒரே அர்த்தந்தான். ”ஸமர்ச்சிதா” என்றால் நன்றாக, பூர்ணமாக ஆராதிக்கப்படுபவள் என்று அர்த்தம். ”ஹயமேத ஸமர்ச்சிதா”- அச்வமேத யாகத்தால் நன்கு ஆராதிக்கப்படுபவள்.

அதாவது ஒருத்தன் அச்வமேதம் செய்தால், அதுவே அவன் அம்பாளுக்குச் செய்கிற விசேஷமான ஆராதனையாகி விடுகிறது. வெறும் யஜ்ஞ‌ம் என்றால் அதற்கென புத்ர ப்ராப்தி, தன லாபம், பதவி, ஸ்வர்க வாஸம் மாதிரியான பலன்கள்தான் உண்டு. இந்தப் பலன்களோடு, இவற்றைவிட முக்யமாக, அநேகக் கட்டுப்பாடுகளோடும், ஐகாக்ரியத்தோடும் ( one- pointed concentration ) ஒரு யாகத்தைச் செய்வதால் ”சித்த சுத்தி’ ‘என்கிற மஹா பெரிய பலனும் ஏற்படுகிறது. ஒரு யாகம் அம்பாள் ஆராதனையாகிறபோதோ அதற்குச் சின்னச் சின்னப் பலன்களாக இல்லாமல் ஸகல புருஷார்த்தங்களையும் கொடுக்கக்கூடிய சக்தி உண்டாகிறது. ஸாக்ஷாத் பரதேவதை ப்ரீதி அடைந்தால் எதைத்தான் தரமாட்டாள்? பதவி, பவிஷு, இந்திர லோகம் எல்லாவற்றுக்கும் மேலாக பரம ஞானத்தை, ஸம்ஸார நிவிருத்தியை, மோக்ஷ ஸாம்ராஜ்ய லக்ஷ்மியையே அம்பாள் மனசு குளிர்ந்தால் அநுக்கிரஹித்துவிடுவாள். ஆனதால், அச்வமேதம் பண்ணிவிட்டால், அதனால் அம்பாளை ஆராதித்ததாகி விடுமாதலால், இம்மை மறுமைக்கு வேண்டியதில் பாக்கியில்லாமல் ஸகல சிரேயஸ்களையும் பெற்று விடலாம். எதற்காக அச்வமேதம் செய்ய வேண்டும் என்று முதலில் ஒரு கேள்வி போட்டேனே, அதற்கு இது பதில்.

ஆனால் ஒரு ஸஹஸ்ரநாமம், த்ரிசதி மாதரியானவற்றுக்கு நியமங்கள் இருக்கின்றன என்றால் அச்வமேதம் செய்வதற்கோ ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், ஆயிரம் தினுசான நியமங்கள், கெடுபிடிகள் சொல்லியிருக்கிறது. இந்தக் காலத்தில் இதெல்லாம் ஸாத்யமே இல்லை.

ஸரி, அப்படியானல் நாம் அச்வமேதம் செய்வதற்கே இல்லை என்று விட்டுவிட வேண்டியது தானா?

இல்லை நம் அனைவருக்கும் ஸாத்யமான ஓர் அச்வமேதத்தை சாஸ்திரங்களிலேயே சொல்லியிருக்கிறது. ஜீவகாருண்யத்தின்மேல் செய்யவேண்டிய அநேக பரோபகாரங்களைச் சொல்லிக்கொண்டே போய், அவற்றுக்கெல்லாம் சிகரம் மாதிரி ஒன்றைச் சொல்லி அதுவே அச்வமேதத்தின் பலனை அளிக்கக் கூடியது என்கிறது.


Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஸிக்கியரின் குருபக்தி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ''என் கடன் பணி செய்து கிடப்பதே''
Next