விருந்துபசாரம் எப்படி? : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

“அவனவனும் ஸ்வயம்பாகம் என்றால் அதிதி ஸத்காரம் (விருந்தோம்பல்) எப்படிப் பண்ணுவது? அதையும் பெரிய தர்மமாகச் சொல்லியிருக்கே!” என்றால் வருகிறவனுக்கும் அவனே சமைத்துக் கொள்வதற்கான பண்டங்களைச் கொடுத்துவிட்டாலே அது ஸத்காரம்தான். இப்போது துர்லபமாக எங்கேயோ இருக்கப்பட்ட ஸ்வயம்பாகிகள் இப்படித்தானே தாங்களே சமைத்துக் கொள்கிறார்கள்? இதையும் அதிதி பூஜையாகத்தான் சொல்லியிருக்கிறது. இப்படி யாத்ரிகர்களுக்குச் சமைத்த அன்னமாகப் போடாமல் மாவு, சர்க்கரை முதலான சரக்குகளை மட்டும் தருவதை வடக்கே ‘ஸதாவ்ருத்தி’ என்றே சொல்வார்கள். அவர்கள் சமைத்துப் போட்டாலும் ஏற்றுக் கொள்ளாமலே இப்படி ‘ஸதாவ்ருத்தி’தான் வாங்கிக் கொள்வார்கள். நம் மடத்திலுங்கூடச் சாப்பிடுவதில்லை. ஆட்டா மாவு, நெய் முதலியன கொடுத்தால் மட்டும் வாங்கிக் கொண்டுபோய்த் தாங்களே சமைத்துக் கொள்வது என்று அநேக தேசாந்தரிகள் இருக்கிறார்கள். ஆகையால் ஸ்வயம்பாகத்தால் விருந்தோம்பல் போய்விடுகிறதென்று நினைக்க வேண்டாம்.

அப்படி, ‘நம் கையால் கொடுத்து நேரே அவர்கள் குக்ஷியில் போகணும், அதுதான் உபசாரம்’ என்று ஸென்டிமென்ட் இருந்தால் பால் அல்லது மோரும், பழமும் கொடுக்கலாம். பழைய நாளில் திருடனுக்குக்கூட பால் சாதம் போட்டுவிட்டால் அப்புறம் அவன் திருடமாட்டான். நல்லெண்ணத்தை வளர்ப்பது பால். இப்போது பால் சாதமாக இல்லாமல் பாலோடு பழமாகக் கொடுக்கச் சொல்கிறேன்.

ஸ்கூலுக்குப் போகிறவர்கள், ஆஃபீஸ் போகிறவர்கள், ரிடையர் ஆனவர்கள் ஆகிய எல்லாருமே – புருஷர்களைச் சொல்கிறேன் – இப்படிக் கால்மணியில் தயாரிக்கும்படியான சமையல் தெரிந்துகொண்டு அவரவர் பண்ணிச் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is உணவு முறையில் உண்மைச் சீர்திருத்தம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  நிவேதனம்
Next