புலன் நுகர்ச்சிகளுள் உணவின் முக்யம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஆஹாரம் என்றால் நாக்கால் சாப்பிடுவது மட்டுமில்லை. பஞ்ச இந்திரியங்களுக்கும் ஒவ்வொரு ஆஹாரம் உண்டு. பல காட்சிகளைப் பார்க்கிறோம். இது கண்ணுக்கு ஆஹாரம். பலவிதமான பாட்டு, பேச்சுகளைக் கேட்கிறோம். இது காதுக்கு ஆஹாரம். இப்படியே நாம் அநுபோகம் பண்ணுகிறதெல்லாம் நமக்கு ஆஹாரம்தான். இதில் எல்லாமே சுத்தமானதாய் இருக்க வேண்டும். மனஸைக் கெடுக்கிற காட்சிகளைப் பார்க்கப்படாது; மனஸைக் கெடுக்கிற பேச்சுகளைக் கேழ்க்கக் கூடாது; அநுபவிக்கிறதெல்லாம் ஈஸ்வர ஸாக்ஷாத்காரத்துக்கு உதவுகிறவையாகவே இருக்க வேண்டும்.

இப்படி பொதுப்படையாகச் சொன்னாலும், இந்தப் பலவிதப் புலன்-நுகர்ச்சிக்கான ஆஹாரங்களிலும் வாயால் நுகர்கிற ஆஹாரந்தான் முக்யமாக இருப்பதால் அதைப்பற்றி இவ்வளவு ஆசார விதிகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதுதான் ஸ்தூலமாக நமக்கு உள்ளே போய், தேஹம் முழுக்க ரத்தமாக வியாபிக்கிறது; இதுவே சித்தத்தையும் பாதிக்கிறது. ஒரு பக்கம் ஆஹாரமில்லாவிட்டால் மநுஷ்யன் ஜீவிக்கவே முடியவில்லையென்றால் இன்னொரு பக்கமோ அது மித ஆஹாரமாக இல்லாவிட்டால் தேஹத்துக்கும் ச்ரமம், மனஸுக்கும் அசாந்தி என்றாகிறது. வயிற்றிலே திணித்துக்கொண்டே போவதால் சாப்பாட்டுப் பொருளுக்கும் நஷ்டம், கார்யம் செய்ய முடியாமலும் நஷ்டம், இவற்றைவிட த்யானத்தில் மனஸ் ஈடுபடாமல் போவது பெரிய நஷ்டம். ஆகையால் “சோற்றால் அடித்த பாண்டம்” என்றே மநுஷ்யனுக்குப் பேர் இருப்பதால் இந்தப் பாண்டமும், இதற்கு உள்ளேயிருக்கிற மனஸும் நல்லபடியாக வளர்வதற்காக ரிஷிகள் காட்டிக் கொடுத்திருக்கும் போஜன விதிகளை மேற்கொண்டு நடத்திக்காட்ட வேண்டும். இதன் முக்யத்வமும் அவசியமும் எல்லோருக்கும் புரிவதற்குப் பரமேஸ்வரனைப் பிரார்த்தனை பண்ணிக் கொள்கிறேன்.

“Give us this day our daily bread” – ” இன்றைக்கு எங்களுக்கு உன் அருளால் சோறு கிடைக்கட்டுமப்பா!” என்று கிறிஸ்துவ மதத்திலும் பிரார்த்திக்கச் சொல்லியிருக்கிறது. அதே சமயத்தில் “Man shall not live by bread alone” –  “சோற்றைத் தின்று மட்டும் மநுஷன் வாழவில்லை” என்றும் பைபிள் சொல்கிறது. பக்தி, ஞானம், உயர்ந்த குணங்கள், உத்தமப் பண்புகள் ஆகியவற்றால்தான் மநுஷன் மநுஷனாக வாழ்கிறான் என்பது அர்த்தம். இந்த குண விசேஷங்கள் விருத்தியாகவும் ஆஹார நியமமே உதவுகிறது என்று நம் சாஸ்திரங்கள் காட்டுகின்றன.

தேஹ புஷ்டியை மட்டுமின்றி, ஞான வைராக்யங்களையும் அநுக்ரஹிக்கும் அன்னத்தை ஸாக்ஷாத் அம்பாளிடமிருந்து ஆசார்யாள் யாசித்ததைச் சொல்லி உங்கள் எல்லாருக்காகவும் பிரார்த்திக்கிறேன்.

அன்னபூர்ணே! ஸதாபூர்ணே! சங்கர ப்ராண வல்லபே |

ஞாந வைராக்ய ஸித்த்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி ||

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஸாரமான பலன்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஏகாதசிக்கு இரட்டை போஜனமா?
Next