ஸாரமான பலன்கள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இத்தனை நேரம் தொண தொணவென்று நான் சொன்னதன் ஸாரம் என்னவென்றால்: ஸ்வயம்பாகம் என்ற ஒரு சின்ன நியமத்தால் அநேக நன்மைகள் உண்டாகின்றன. ஒன்று – சித்த சுத்தி. இரண்டு தேஹ ஆரோக்கியம். மூன்று – செலவு மட்டுப்படுவது. நாலு – ஜாதிச்சண்டைக்கு இடமில்லாமல் பண்ணுவது. ஐந்து — ஐம்பது வயஸுக்கு மேல் கல்யாணம் கூடாது என்பது போன்ற சாஸ்திர விதிகளை அநுஸரிக்க முடிவது. ஆறு — நம்முடைய மஹா பெரிய தர்மத்துக்கே மூலமான வேத வித்யை வளர எட்டு — லோகத்தில் மற்றவர்களுக்கும் ஸாத்விக ஆஹார ஐடியலைக் காட்டிக் கொடுப்பது. லோகத்தில் சாந்தத்தைப் பரப்புவதற்குச் செய்கிற காரியத்தைவிடப் பெரிய நன்மையில்லை. இத்தனை பலன்கள்! எல்லாவற்றுக்கும் மேலே, ‘இந்தக் குழந்தை சாஸ்திரப்படி பண்ணுகிறான். நாக்கைக் கட்டுகிறான்’ என்று பகவானே கிருபை செய்வது. இப்படி ஈஸ்வராநுக்ரஹம் பெற்று, ஸகல ஜனங்களும் சிரேயஸ் பெறுவதற்காக அவரவரும் ஸ்வயம்பாக நியமம் வைத்துக் கொள்ள வேண்டியது. இதற்கு ஒரு ஆரம்பமாக இப்போதிலிருந்தே ஆஃபீஸோ ஸ்கூலோ அதில் அன்றைக்கு, வாரத்தில் ஞாயிறு ஒரு நாளாவது ஸகலமான பேரும் ஸ்வயம்பாக வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

இத்தனை நான் சொன்னதிலிருந்து ஸ்வயம்பாகம் நல்லதுதான் என்று உங்களில் கொஞ்சம் பேருக்காவது நம்பிக்கை வந்திருக்கலாம். ஒன்றில் நம்பிக்கை வந்து, அது ஸாத்யமாகவும் இருந்துவிட்டால், அதைப் பண்ணிக் காட்ட வேண்டும். அதுதான் பெருமை.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is நிவேதனம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  புலன் நுகர்ச்சிகளுள் உணவின் முக்யம்
Next