மாத்வர்களின் தீவிர அநுஷ்டானம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

தர்ம சாஸ்த்ரமே விதித்த வ்ரதமாக ஏகாதசி இருப்பதால் மாத்வர், வைஷ்ணவர், ஸ்மார்த்தர் ஆகிய எல்லாருமே அதை அநுஷ்டித்தாலும் ரொம்பவும் தீவிரமாகக் கடைப்பிடிப்பது மாத்வர்தான்.

ஸாதாரணமாக வேத மந்திரங்களையே நேராகப் பிரயோஜனப்படுத்திச் செய்கிற கர்மாக்களுக்குத்தான் மதாநுஷ்டானங்களில் ப்ராதான்யம் [முதலிடம்] கொடுப்பது வழக்கம். நம் மதத்துக்கு மூல நூல் வேதம்தானே? அதோடு பித்ரு கர்மா, தேவ கர்மா என்ற இரண்டுக்குள் பித்ரு கர்மாவுக்குப் ப்ராதான்யம் கொடுத்து விட்டு அப்புறம்தான் தேவ கர்மாவைச் செய்ய வேண்டும். சிராத்தம் என்பது வேத மந்திரங்களாலேயே ஆகிற கர்மா. அதோடு அது பித்ரு கர்மாவும் ஆகும். ஏகாதசி உபவாஸத்தில் வேத மந்திரங்களுக்கு இடமில்லை. நாமஜபம், பஜனை ஆகியன பௌராணிகமும் தாந்த்ரிகமுமே ஆனவை. பூஜை பண்ணுவதில் மட்டுமே வேத மந்த்ரங்கள் கொஞ்சம் சேரும். ஏகாதசியை ஒரு உபவாஸமாக தர்ம சாஸ்த்ரம் சொன்னாலும் ச்ராத்தத்தைப் போல ஸ்மார்த்த கர்மாவாக விதிக்கவில்லை. அதோடு ஏகாதசி என்பது பித்ரு ஆராதனைக்கு அப்புறமே வருகிற தேவ ஆராதனைதான்.

ச்ராத்தம் என்பது ரொம்பவும் வைதிகமான ஸ்மார்த்த கர்மா. அதிலே பித்ரு சேஷமாக போஜனம் பண்ண வேண்டியதும் ஒரு அங்கம். ச்ராத்தம் பண்ணி விட்டுப் பித்ரு சேஷம் சாப்பிடாவிட்டால் தப்பு.

ஏகாதசியில் ச்ராத்தம் வந்தால் என்ன செய்வது? ‘ச்ராத்தம் பண்ணிப் பித்ரு சேஷம் சாப்பிடத்தான் வேண்டும். ஏனென்றால் ஏகாதசி எவ்வளவு முக்கியமான தாயிருந்தாலும், அதைவிட வைதிகமான ச்ராத்தத்துக்குத் தான் இன்னமும் அதிக முக்யத்வம் தரவேண்டும்’ என்று ஸ்மார்த்தர்களும், வைஷ்ணவர்களும் நினைக்கிறோம். அன்று ஏகாதசி உபவாஸ நியமத்தை விடுவதால் தோஷமில்லை; வேதக் கட்டளைப்படி பண்ணுவதால் நமக்குத் தப்பு வராது என்று நினைத்து ச்ராத்தம் பண்ணி போஜனம் செய்கிறோம்.

ஆனால் மாத்வர்கள் ஏகாதசியன்று ச்ராத்தம் செய்வதில்லை. இந்த வ்ரதாநுஷ்டானந்தான் முக்கியமென்று நினைத்து உபவாஸமிருக்கிறார்கள். ஆனால் அதற்காக சிராத்தத்தை விட்டுவிடுவதில்லை. ஏகாதசியன்று வருகிற சிராத்தத்தை மறுநாள் த்வாதசியன்று செய்கிறார்கள். அதிலும் த்வாதசி ப்ராணை காலம்பறவே [இளங் காலையிலேயே] பண்ணிவிட வேண்டுமென்கிற புராண விதிக்காக, மத்யான்ன காலத்துக்கு அப்புறமே பண்ண வேண்டிய சிராத்தத்தை அன்று ரொம்ப முன்னதாகவே பண்ணி விடுகிறார்கள்.

தீட்டுக் காலத்தில்கூட ஏகாதசி உபவாஸமிருக்க வேண்டும் என்பதில் எல்லா ஸம்பிரதாயக்காரர்களும் ஒத்துப் போகிறார்கள். மற்ற எந்த உபவாஸத்துக்கும் இம்மாதிரி ஸுதக ஆசௌச* காலங்களில் பலனில்லாததால், அவற்றை அப்போது அநுஷ்டிக்க வேண்டியதில்லை என்றே விதி இருக்கிறது. ஏகாதசிக்கு மட்டும் விலக்கு.


* பிரஸவத் தீட்டு ஸுதகம், மரணத் தீட்டு ஆசௌசம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is உபாவாஸமும் உழைப்பும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  எல்லாம் வகுப்பாரும் ஏற்றம் பெற்றது
Next