ராஜபோகம் என்றே சொல்வது வழக்கம். ராஜாக்கள் மது, மாம்ஸாதிகள் உள்பட ஓரளவுக்குச் சாப்பிடுவதற்கு அதிகாரம் பெற்றவர்கள். ஆனால் அவர்களும் ஏகாதசி உபவாஸத்தை நியமத்தோடு அநுஷ்டித்திருக்கிறார்கள். ஏகாதசி என்றவுடனே நாம் நினைக்கிற அம்பரீஷன், ருக்மாங்கதன் இரண்டு பேருமே க்ஷத்ரிய ராஜாக்கள்தான்.
கார்த்தாலே எழுந்தவுடன் குளிர்ந்த வேளையில், குளிர்ந்த மனஸோடு நினைத்து நமஸ்காரம் பண்ண வேண்டிய பரம பாகவதர்களைப் பற்றி ஒரு ச்லோகம் உண்டு.
ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக
வ்யாஸ (அ)ம்பரீஷ சுக சௌநக பீஷ்ம தால்ப்யான் |
ருக்மாங்கத (அ)ர்ஜுந வஸிஷ்ட விபீஷணாதீன்
புண்யான் இமான் பரம பாகவதான் ஸ்மராமி ||
இதிலே அம்பரீஷனும், ருக்மாங்கதனும் இடம் பெற்றதற்குக் காரணமே அவர்களுடைய ஏகாதசி அநுஷ்டானந்தான்.
ருக்மாங்கதன் தன் ராஜ்யத்தில் அத்தனை பேரையும் ஏகாதசி விரதம் இருக்கும்படியாகப் பண்ணினான். அதனால் ப்ரஜைகள் எல்லோரும் பக்தி ஞானங்களில் முன்னேறியதோடு நல்ல ஆயுர்-ஆரோக்யங்களுடனும் இருந்தார்கள் என்று நாரத புராணத்தில் இருக்கிறது.
ரொம்பவும் உச்சத்திலுள்ள ராஜாக்கள் மட்டுமில்லை. கைசிகன் என்று தீண்டாதார் வகுப்பைச் சேர்ந்த பக்தர். இவரும் ஏகாதசி உபவாஸ நியமத்தால் உயர்வு பெற்றிருக்கிறார். ‘கைசிக ஏகாதசி’ என்றே ஒரு ஏகாதசிக்கு வைஷ்ணவர்கள் பெயர் சொல்வார்கள்.