ஒரு வருஷத்துக்கு 365 நாளல்லவா? இதனால் இருபத்தநாலு பக்ஷத்துக்குமேல் சில நாட்கள் வருஷத்தில் எஞ்சி நிற்கும். இது காரணமாகச் சில வருஷங்களில் இருபத்தைந்து ஏகாதசிகள் வந்துவிடும். பாத்ம புராணத்தில் உத்தர காண்டத்தில் இந்த இருபத்தைந்துக்கும் தனித்தனிப் பெயர் சொல்லி, அதை அநுஷ்டிக்க வேண்டிய முறை, அதனால் பயனடைந்தவர்களின் கதை, ஆகியவற்றை விவரமாகச் சொல்லியிருக்கிறது.
தநுர்மாஸ (மார்கழி மாத) க்ருஷ்ணபக்ஷ ஏகாதசியன்று ஆரம்பித்திருக்கிறது. இதற்கு ‘உத்பத்தி ஏகாதசி’ என்று பெயர். அடுத்ததுதான் அந்த மாஸ சுக்லபக்ஷத்தில் வரும் பிரஸித்தமான வைகுண்ட ஏகாதசி. ‘மோக்ஷ ஏகாதசி’ என்று இதற்குப் பாத்ம புராணத்தில் பேர் கொடுத்திருக்கிறது. அம்ருதம் கடைந்தெடுத்தது அன்றுதான். க்ருஷ்ண பரமாத்மா கீதோபதேசம் என்று உபநிஷத்துக்களைக் கடைந்தெடுத்து ஞானாம்ருதமாகக் கொடுத்ததும் அன்றுதான் என்பதாலேயே அன்றைக்கு ‘கீதா ஜயந்தி’ என்று கொண்டாடுகிறார்கள். மூன்றாவது ஏகாதசி தை க்ருஷ்ண பக்ஷத்தில் வரும் ‘ஸபலா’. நாலாவது அம்மாஸ சுக்ல பக்ஷத்தில் வருகிற ‘புத்ரதா’. ஐந்தாவது மாசி க்ருஷ்ண பக்ஷத்தில் வரும் ‘ஷட்திலா’. ஆறாவது அம்மாஸம் சுக்லபக்ஷத்தில் வரும் ‘ஜயா’. இப்படியே வரிசையாக பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாஸங்களில் ‘விஜயா’, ‘ஆமலகீ’, ‘பாப மோசனிகா’, ‘காமதா’, ‘வரூதினீ’, ‘மோஹினி’, ‘அபரா’, ‘நிர்ஜலா’என்று எட்டு ஏகாதசிகள் வருகின்றன. பீமன் வருஷத்தில் ஒரே ஒரு தரம் சுத்தோபவாஸமிருந்தது ‘நிர்ஜலா’ என்ற இந்த ஆனி மாஸ சுக்லபக் ஏகாதசியன்றுதான். இதோடு பதினாலு ஏகாதசிகள் ஆகிவிட்டன. பதினைந்தாவதாக ஆடி க்ருஷ்ண பக்ஷத்தில், ‘யோகினி’ என்பது. அடுத்தது ஆடி சுக்ல பக்ஷத்தில் மஹாவிஷ்ணு சயனிக்க ஆரம்பிக்கிற சாதுர்மாஸ்ய ஆரம்பத்தில் வருகிற ஏகாதசி*. அதற்கு ‘சாயினி’ என்று பெயர். அப்புறம் ஆவணி, புரட்டாசி. ஐப்பசி மாஸங்களில் வரும் ‘சாமிகா’ ‘புத்ரதா’ (முன்னையே தையில் ஒரு ‘புத்ரதா’வந்து விட்டது. இங்கே மறுபடியும் அதே பெயர்தான் போட்டிருக்கிறது) , ‘அஜா’, ‘பத்மநாபா’, ‘இந்திரா’, ‘பாபாங்குசா’ என்ற ஆறு ஏகாதசிகளின் போதும், கார்த்திகையில் க்ருஷ்ண பக்ஷத்திலே வரும் ‘ரமா’என்ற ஏகாதசியின் போதும் பகவான் நித்திரை பண்ணிக் கொண்டேயிருக்கிறார். இருபத்து நாலாவதாக வருகிற கார்த்திகை சுக்லபக் ஏகாதசியன்று அவர் விழித்துக் கொள்கிறார். அதனால் அதற்தகு ‘ப்ரபோதினி’ என்றே பெயர் மறுநாளோடு சாதுர்மாஸ்யம் பூர்த்தி.
அதிகப்படியாக வரும் இருபத்தைந்தாவது ஏகாதசிக்கு ‘கமலா’ என்று பெயர்.
இப்படி நம் மதத்தில் சிறப்பித்துச் சொல்லியிருக்கும் ஏகாதசியில் எல்லாரும் வ்ரதாநுஷ்டானம் பண்ண வேண்டும். சாப்பிடாமல் இருப்பது வெறும் ‘அநாசக’ மாக இல்லாமல், பகவானோடு சேர்ந்து வாழும் ‘உப-வாஸ’மாக ஆகவேண்டும். இதற்கு ஏகாதசியன்று நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகவன் நாமத்தை ஜபமாகவோ, பஜனையாகவோ உச்சரிக்க வேண்டும்; எவ்வளவு அதிக நாழிகை பகவத் த்யானம் செய்ய முடியுமோ அவ்வளவு செய்யவேண்டும்; அன்றைக்கு ஸத்கதா ச்ரவணமோ, பாராயணமோ, இரண்டுமோ அவசியம் செய்யவேண்டும். பகவான் அல்லது பாகவதோத்தமர்களின் புண்ய சரித்ராம்ருதம் அன்று காது வழியாகக் கொஞ்சமாவது உள்ளே இறங்க வேண்டும். இப்படிச் செய்து நல்லாரோக்யத்திலிருந்து பக்தி, ஞான, வைராக்யங்கள் வரையில் எல்லா நன்மைகளையும் அடைய வேண்டும்.
*அதற்கு மறுநாளான த்வாசியன்றே சாதுர்மாஸ்ய விரதத் தொடக்கம்.