“என் கடன் பணி செய்து கிடப்பதே” : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இப்போது நான் ”ஜீவகாருண்யம்”, ”பரோபகாரம்” என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். யோசித்துப் பார்த்தால் இந்த இரண்டு வார்த்தையுமே தப்புத்தான் ஏனென்றால்:

காருண்யம் – கருணை காட்டுவது – என்றால் இப்படிக் கருணை காட்டுகிறவர் ஓரு படி உயர நிற்கிற மாதிரியும், கருணைக்குப் பாத்திரமாகிறவர் ஒரு படி கீழே நிற்கிற மாதிரியும் தொக்கி நிற்கிறது. ”நாம் உசந்த ஸ்தானத்தில் இருக்கிறோம், நம் உதவியைப் பெறுகிறவர் நம்மைவிடத் தாழ்த்தியாக இருக்கிறார், நாம் ‘கருணை’ காட்டுகிறோம்” என்று நினைக்கிறபோதே நாம் செய்கிற உபகாரம் அசுத்தமாகிவிடுகிறது. உபகாரம் செய்வதன் பயனாக நமக்கு எளிமை, அடக்கம், அஹங்கார நீக்கம் ஆகியன உண்டாக வேண்டும். மாறாக நாம் உபகாரம் பண்ணும்போது, போனால் போகிறது என்றும் யாருக்கோ கருணை காட்டுகிற மாதிரி நினைத்தோமானால், இது ஆணவ அஹங்காரங்களுக்கு இடமாகிவிடுகிறது. உபகாரத்தால் நம் ஆதமாவை உயர்த்திக் கொள்வதற்கு நேர்மாறாக ஆத்மஹானியே உண்டாகிவிடும்.

கருணை, காருண்யம் என்கிற வார்த்தையைச் சொல்வதைவிட அன்பு என்று சொல்லிவிட்டால் இந்த ஏற்றத் தாழ்வு தொனிக்காமல் இருக்கும். அன்பு என்பது நம்மவர்களிடமே நாம் ஸ்வபாவமாகச் செய்கிற காரியம். இதிலே போனால் போகிறதென்று யாரோ அந்நியருக்கு இரக்கம் காட்டுகிற மாதிரியான அஹங்கார எண்ணம் இல்லை.

ஆனாலுங்கூட நடைமுறை உலகில் இப்படி நம்மவர், அசலார் என்கிற பேதமேயில்லாமல் ஸகலரையும் ஒரே போல் பாவித்து, தாரதம்மியம் இல்லாமல் ஸவாபாவிகமான அன்பைச் செலுத்துவது என்றால் அது ஆரம்ப காலத்தில் ஸாத்யம் இல்லாமல்தான் இருக்கிறது. இந்தப் பொது இயற்கையை ஓப்புக் கொள்கிறது போலத் தான் திருவள்ளுவர்கூட அன்பு, அருள் (அருள் என்பதைக் கருணை என்று வைத்துக்கொள்ளலாம்) என்று பிரித்து distinction சொல்லியிருக்கிறார். அவர் என்ன சொல்கிறார்? அருள் என்னும் அன்பீன் குழவி என்கிறார். அன்பு ஈன்ற குழந்தையே அருள் என்று அர்த்தம்.

இப்போது நமக்கு வேண்டியவர்கள் என்று சிலரை மட்டும் நினைத்துக் கொண்டு அன்பு செல்லுத்துகிறோம் அல்லவா? இந்த ‘வேண்டியவர்’களை நம் ஊரார், தேசத்தார், உலகத்தார் என்று மேலே விஸ்தரித்துக் கொண்டே போனால், அன்பிலிருந்தே படிப்படியாக அருள் பிறக்கிறது. அப்புறம் இப்படி அருள் பண்ணுகிறவனைப் பொருத்த மட்டும் அது ‘அருள்’ ‘கருணை’ என்றெல்லாம் உயர்வு விஷயமாக இல்லாமல், ஸ்வபாவமான, ஹைஜமான அன்பாகவே ஆகிவிடுகிறது. ஆனாலும் இந்த அன்பைப் பெறுகிறவர்களோ அது ஸாதாரனமாக நண்பர்களிடையே பந்துக்களிடையே இருக்கிற அன்புமாதிரி இல்லாமல், நல்ல கனிவு பெற்று தெய்விகமான சக்தி பெற்றிருப்பதாக உணர்கிறார்கள். இந்த பக்குவமான, திவ்யசக்தி வாய்ந்த அன்பை ‘அருள், அருள்’ என்கிறார்கள்.

‘எல்லா உயிர்களும் ஒன்றே; எல்லாவற்றிலும் ஈஸ்வரன் இருக்கிறான்’என்று ஒருத்தன் உணர்கிறபோது தான் அவனுக்கு அருள் உண்டாகிறது. இவன் தன் மநுஷ்யர்களுடன் ஸமமான நிலையில் இருந்துகொண்டு பிரியம் காட்டுவதைவிட இன்னும் ஒருபடி கிழே இறங்கி தன்னைக் குறைத்துக்கொண்டு, மற்றவனை ஈஸ்வரனாக நினைத்துதான் ஸேவை செய்கிறான். ‘நைச்சியம்’ என்று இதை வைஷ்ணவர்கள் விசேஷித்துச் சொல்வார்கள். தன்னைத் தாழ்ந்தவானக, நீசனாக நினைத்து இன்னொருத்தனுக்கு ஸேவை செய்வதுதான் ‘நைச்சியம்’. இப்படி இவன் தன்னைக் குறைத்துக் கொள்கிறபோதுதான் இவனுடைய அன்பு வெறும் பேச்சாக, எண்ணமாக மட்டுமில்லாமல் அதற்குக் காரிய ரூபத்திலேயே தெய்விகமான சக்தி உண்டாகி, அது ‘அருளாக’ ஆகிவிடுகிறது! கொஞ்சங்கூட மமதையே இல்லாமல் ”நாம் பெரியவர், உபகாரம் பண்ணுகிறோம்” என்ற அகந்தையே இல்லாமல் இவன் ஸமஸ்தப் பிராணிகளிடம் ஈஸ்வர ஆராதனையாக அன்பைச் செலுத்துகிறபோது, அதுவே இவனை ஸகல பிராணிகளுக்கும் மேலே உயர்த்தி விடுகிறது. இவனுடைய அன்பு வெறும் பேச்சாகவும் எண்ணமாகவும் மட்டுமில்லாமல், காரியத்திலேயே ஈஸ்வராநுக்ரஹத்தை வாங்கித் தரக்கூடிய அருட் சக்தியைப் பெற்றுவிடுகிறது.

இவனுடைய ஜீவகாருண்யத்தால் இப்படி இவனே உயர்வதுதான் பெரிய பிரயோஜனமாகிறது. ஒருத்தன் உபகாரம் என்று நினைத்து இன்னொருத்தனுக்குச் செய்வது அவனுக்கு அபகாரமாக ஆனாலும் ஆகலாம்; அல்லது இவனுடைய உபகாரத்தை அவன் விரும்பாமலும் இருக்கலாம். அதாவது பிறத்தியானைப் பொருத்தமட்டில் இவனுடைய ஸேவை வீணாகவே போனாலும் போகலாம். ஆனால் இவனையே பொருத்தமட்டில் இவனுடைய அஹங்காரத்தைக் கரைத்து, இவனை (ஆத்மிகத்தில்) உயர்த்திவிடுகிறது.

இதனால்தான் ‘ஜீவகாருண்யம்’ என்கிற மாதிரியே ‘பரோபகாரம்’ என்ற வார்த்தையும் ஒரு தினுஸில் தப்புதான் என்றேன். பரனுக்கு (பிறத்தியானுக்கு) இவனுடைய ஸேவை உபகாரமாக இல்லாவிட்டாலும்கூட, ஸ்வயமாக இவனுக்கே சித்த பரிசுத்தியை உண்டாக்குவதால், இதை ‘ஸ்வய உபகாரம்’ என்றுதான் சொல்லவேண்டும்.

இது வேடிக்கையாக இருக்கிறது. அதாவது நாம் கருணை பண்ணுகிறோம், அருள் காட்டுகிறோம் என்ற எண்ணமே இல்லாதபோதுதான், இவனுக்கு தெய்விகமான ‘அருளுடைமை’யே உண்டாகிறது. இப்படியே இவன் ஸ்வய நலனைக் கொஞசம்கூட நினைக்காமல் பரோபகார ஸேவை செய்வதுதான் உண்மையில் ஆத்ம லாபம் என்கிற பெரிய ‘ஸ்வயோபகாரமாக’இருக்கிறது.

நல்ல அத்வைத திருஷ்டி வந்துவிட்டால் ஸ்வயம், பரம் என்கிற பேதமே இல்லாமல், எல்லாம் ஈஸ்வர ஸ்வரூபமாகப் பார்த்து, பல தினுஸில் கஷ்டப்படுகிறவர்களுக்கும் ஒருத்தன் தன்னுடைய இயற்கையான தர்மமாகவே ஆனந்தமாகப் பணி செய்து கொண்டிருப்பான். இப்போதும் ‘பர உபகாரம்’ என்ற phrase தப்பாகி விடுகிறது! தனக்குப் பரமாகத்தான் இவனுக்கு எதுவுமில்லையே! ”என்கடன் பணிசெய்து கிடப்பதே” என்று அப்பர் ஸ்வாமிகள் சொன்னது இந்த நிலையில்தான்.

”நம் கடன் பணிசெய்து கிடப்பதே” என்பதுதான் நம் வாழ்க்கையின் குறிக்கோளாக, Motto – வாக் இருக்க வேண்டும்.

கடன் என்றால், ‘கடனே என்று செய்தேன்’, ‘கடனிழவே என்று செய்தேன்’ என்றெல்லாம் சொல்லுகிறோமே, அந்த மாதிரி வேண்டா வெறுப்பாகச் செய்வது என்று அர்த்தமில்லை. கடன் என்றால் கடமை, Duty .அதை அன்போடு, ஆர்வத்தோடு ஹ்ருதய பூர்வமாகச் செய்ய வேண்டும்.

லோகத்தில் இத்தனை ஜீவராசிகள், பசு பக்ஷிகள், தாவர வர்க்கங்கள் இருக்கிறோமே, இதில் ஒன்றுக்கொன்று வாழ்வுக்கு அவசியமானவைகளைப் பரஸ்பரம் கொடுத்துக் கொண்டுதான் ஜீவிக்கிறோம். இதிலே மநுஷ்யர்களான நாம், நம் போன்ற ஸஹ மநஷ்யர்களிடமிருந்தும், மிருகங்கள், பக்ஷிகள், தாவரங்கள், இன்னும் inanimate என்கிற ஜடவஸ்துக்களிடமிருந்துங்கூட எத்தனையோ உதவி பெறுவதால்தான் ஜீவ யாத்திரையை நடத்திக்கொள்ள முடிகிறது. இதனால்தான் ஜடம் என்று நினைக்கிற பூமி, ஜலம், அக்னி இவற்றுக்குக்கூட நாம் செய்கிற பிரதியாக வைதிக மதத்தில் பலவிதமான சடங்குகள் இருக்கின்றன.

தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது, உணர்ச்சிகள் இருக்கின்றன என்று ஜகதீஷ்சந்திர போஸ்தான் கண்டு பிடித்தார் என்றில்லை. வனஸ்பதி, அச்வத்தம் என்கிற மாதிரியாக அதுகளையும் உயிரும் உணர்ச்சியும் கொண்டதாகப் பார்த்து மந்திரபூர்வமாக அவற்றுக்கும் நம் ப்ரத்யுபகாரமாக பூஜைகளைப் பண்ண சாஸ்த்திரம் இருக்கிறது. ‘தூர்வா ஸூக்தம்’, ‘ம்ருத்திகா ஸூக்தம்’ என்றெல்லாம் அருகம்புல், மண் முதலானவற்றிலிருக்கிற தெய்வ சக்தியைக்கூட ஆராதிக்க வேத மந்திரங்கள் இருக்கின்றன. தினமும் செய்கிற ‘ப்ரஹ்ம யஜ்ஞ’த்தில் சேதன-அசேதனங்கள் அத்தனையிலும் இருக்கிற சைதன்ய சக்திக்கு நம் நன்றியறிதலாகத் தர்ப்பனம் சொல்லியிருக்கிறது.

ஒரு காக்கை இருக்கிறது. எங்கேயோ ஒரு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு நம் தோட்டத்திலே வந்து எச்சமிடுகிறது. அந்தப் பழத்தின் கொட்டை இங்கே நம் வீட்டுத் தோட்டத்தில் விழுந்து மரமாகிறது. அந்தக் காக்கை நமக்கு ஓர் உபகாரம் பண்ணிவிட்டது. நாய் காவல் காக்கிறது. குதிரையை வண்டியில் கட்டி ஸவாரி பண்ணுகிறோம். கோமாதா நமக்கு பௌதிகமாகவும் ஆத்மார்தமாகவும் பண்ணுகிற உபகாரம் கொஞ்சநஞ்சமில்லை. இப்படி எல்லாரிடமும் உபகாரம் பெற்றுவிட்டு, மநுஷ்ய ஜன்மா எடுத்துள்ள நாம் பிரதி உபகாரம் பண்ணாமல் இருந்தால் பாபம் அல்லவா? ”நன்றி மறப்பது நன்றன்று”, ”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்றெல்லாம் மஹா பெரியவர், வள்ளுவர், இன்னும் மநு, வியாஸர் எல்லாரும் சொல்கிறார்களே!

மந்த்ரவத்தாகவும், கிராம ஜனங்களின் வழக்கத்தில் வந்துள்ளதுமான அநேக சடங்குகளைப் பண்ணினாலே அசேதனம் (inanimate) என்று நாம் நினைக்கிறவற்றின் அதிதேவதைகள் திருப்தி அடைந்து விடுகிறார்கள். இது தவிர தாவரங்களுக்கு ஜலம் கொட்ட வேண்டும். மிருகங்களிடம் அன்பு பாரட்ட வேண்டும். அவற்றிக்குக் கொடுமை செய்யவே கூடாது. ”வாயில்லா ஜீவன்” என்றே அவைகளை ரொம்பவும் பரிவொடு சொல்வது வழக்கம். முன்காலத்தில் ஊருக்குள் மட்டுமின்றி, வெளியே மாடுகள் மேய்ச்சலுக்குப் போகிற இடங்களில் கூட அவற்றுக்கெனவே குளம் வெட்டி வைப்பார்கள். ஒரு பசுவுக்கு கழுத்திலே அரிக்கிறது. நம்மைப்போல் அதற்குக் கையா இருக்கிறது, சொரிந்து கொள்ள?” எனக்கு அரிக்கிறது” என்று சொல்ல அதற்கு வாய் கூட இல்லையே!அதன் கஷ்டத்தை உணர்ந்து, பசு சொரிந்து கொள்வதற்கென்றே அங்கங்கே கற்களை நாட்டி வைத்தார்கள். ”ஆதீண்டு குற்றி நிறுவுதல்’ ‘என்று இதை ஒரு பெரிய தர்மமமாக நீதி நூல்களில் சொல்லியிருக்கிறது. கடைசியில் நம் மாதிரியான மநுஷ்யர்களிடத்தில் வந்தால், ஸ்ருஷ்டியில் பாக்கியுள்ள அத்தனை ஜீவ இனங்களுக்கும் எத்தனை கஷ்டம் இருக்குமோ அத்தனையும் சேர்த்து வைத்து ஒவ்வொரு மநுஷ்யனுக்கும் இருக்கிறது!இது இவனுடைய அலாதி புத்தியினால் இவனே ஸம்பாதித்துக் கொண்ட சொத்து!இவனைப்போல problem (பிரச்னை) வேறு எதற்கும் இல்லை. இதிலே முக்கால்வாசி இவனே கல்பித்துக்கொண்டதுதான்!இதைச் சரிப்படுத்துகிற மஹாபெரிய பரோபகாரத்தைத்தான் மஹான்கள் செய்கிறார்கள்.

இது தவிரவும் வைத்தியசாலைகள், சிறைச்சாலைகள், ஏழை விடுதிகள், அநாதாசிரமங்கள், விதவா இல்லங்கள், பிச்சைக்காரர் விடுதிகள் முதலியவற்றைப் போய்ப் பார்த்தால் தெரியும், மநுஷ்யர்கள் எத்தனை தினுஸான கஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள் என்பது. இவற்றை மஹான்கள்தான் என்றில்லை. ஸாதாரண ஜனங்களான நாமும் ஓரளவுக்குத் தீர்த்து வைக்கமுடியும். இம்மாதிரியான இடங்களைப் போய்ப் பார்த்தால் நம் போன்றவர்களின் உபகாரத்தைக்கூட ஈஸ்வரன் எத்தனை ரூபங்களில் வந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று தெரியும்.

நாம் செய்யவேண்டியது என்னவென்றால், ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், துக்கம் எங்கே உண்டோ, அங்கே நாம் வலுவில் போய், அந்த துக்க நிவிருத்திக்கு நம்மால் ஆகக்கூடியதையெல்லாம் பண்ண முயலுவதேயாகும். பணத்தாலோ, சரீரத்தாலோ, வாக்காலோ நம்மால் முடிந்த உதவியைப் பண்ண வேண்டியது நம் கடன், கடமை, Duty.

இதைத்தான் தர்மம், அறம் என்று சொல்வது. முதலிலேயே நான் சொன்னபடி, இதைச் செய்வதால் எதிராளிக்கு வாஸ்தவத்தில் எந்த அளவுக்கு துக்கநிவிருத்தி உண்டாகுமோ அதற்கு நாம் ‘காரன்டி’ சொல்லமுடியாது. அதற்கு நாம் ஜவாப்தாரியும் அல்ல. ஆனால் இப்படிச் செய்வதால் நமக்குச் சித்தசுத்தி நிச்சயமாக ஸித்திக்கிறது. அதாவது மனமாசு அகல்கிறது. திருவள்ளுவர்கூட தர்மத்துக்கு definition (லக்ஷணம்) சொல்லும்போது மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என்றுதான் சொல்கிறார்.


Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ''அனைவருக்கும் உரிய அஸ்வமேதம்''
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  அந்தரங்க சுத்தம் அவசியம்
Next