நான் கற்ற பாடம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

மெட்றாஸுக்கு வந்ததில் நானும் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். மௌனத்தால் கிடைக்கிற சாந்த ஸெளக்யம் சாச்வதமாக நிலைத்து நிற்பது;அதாவது எத்தனை கஷ்டத்துக்கு நடுவிலும் கஷ்டம் தெரியாமல் ஆனந்தமாக இருக்கும்படிப் பண்ணுவது என்று சொல்கிறார்கள். கஷ்டமே இல்லாமலிருக்க வேண்டுமென்றால் முடியாது. கஷ்டம் இருக்கத்தான் வேண்டும். அப்போதுதான் கர்மா கழியும். ஆனாலும் அது கஷ்டமாகத் தெரியக்கூடாது. ஒரே ஒரு ‘அயிட்டத்’ திலாவது இதை நான் தெரிந்து கொண்டதற்கு மெட்றாஸ் வாஸம் ஸஹாயம் பண்ணியிருக்கிறது. இங்கே பூஜை பார்க்க வேண்டும் என்பதற்காக நீங்களெல்லாம் பக்தியோடு கும்பலில் தெரிந்து கஷ்டப்பட்டுக்கொண்டு மணிக் கணக்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். பூஜை பார்க்கிறபோது இத்தனை கஷ்டமும் மறந்து உத்ஸாஹம் உண்டாகி பாராயணம், பஜனை என்று ஆனந்தமாக ஆரம்பித்து விடுகிறீர்கள். மற்றவர்களுக்கும் இது நல்லதுதானே என்ற நல்லெண்ணத்தில்தான் இப்படிச் செய்கிறீர்கள். ஆனால் இதனாலேயே ரொம்பவும் சப்தமும், distraction -ம் (கவனச்சிதறலும்) ஏற்பட்டு விடுகிறது என்று சில பேருக்குத் தோன்றவே, “Silence Please!” என்று அட்டைகள் எழுதி மாட்ட ஆரம்பித்தார்கள். நான் அவற்றைக் கழற்றிவிடச் சொன்னேன் ஏன்?’ இப்போதுதான் நமக்கு ஒரு பாடம் படித்துப் பாஸ் பண்ண ஸந்தர்ப்பம் வந்திருக்கிறது. இதை நழுவவிடக் கூடாது’ என்று நினைத்துத்தான் கழற்றச் சொன்னேன். ஈஸ்வராநுக்ரஹத்தில், இப்போது எத்தனை சப்தமிருந்தாலும் நான் பாட்டுக்குப் பூஜையைப் பண்ணிக் கொண்டிருக்கப் பழகி விட்டேன்.

அதனால் இன்று மௌனத்தைப் பற்றிப் பேசினது எனக்கு ஸெளகர்யமாகப் பூஜையின்போது நீங்கள் பேசாமலிருக்கும்படிப் பண்ண வேண்டும் என்ற உத்தேசத்திலல்ல. உங்களுக்கே அதன் பிரயோஜனம் ஏற்பவேண்டுமென்றுதான் சொன்னேன். இத்தனை நாள் உங்கள் இஷ்டப்படி பாடி, பேசி, பஜனை செய்தாகிவிட்டபடியால், இப்போது உங்களைப் பூஜையின்போது மௌனமாக மானஸிகமாகப் பிரார்த்தனை பண்ணிக் கொள்ளச் செய்வதில் நியாயமிருக்கிறதென்று தோன்றிற்று. சும்மாயிருக்கும் ஸுகத்தின் லேசமாவது உங்களுக்கெல்லாம் தெரிய வேண்டும் என்ற ஆசையில் சொன்னேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is மௌனப் பிராத்தனை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  மிதத்துக்காகவே மிகைகள்
Next