மிதத்துக்காகவே மிகைகள்* : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

“விதவிதமாகப் பண்ணி மூக்கைப் பிடிக்கத் தின்னு” என்று ஒரு சாஸ்திரம்! பூஜா கல்பங்கள் என்று வழிபாட்டு முறைகளைக் கூறும் புஸ்தகங்கள் இப்படிச் சொல்வதாகத்தான் அர்த்தம்! அவற்றில் நைவேத்யம் பண்ணும்போது, “நைவேத்யம் ஷட்ரஸோபேதம்” என்று போட்டிருக்கும். “ஷட்ரஸோபேதம்” என்றால் அறுசுவையுடன் கூடிய போஜன தினுஸுகள். அத்தனை வித அன்னங்களையும், வியஞ்ஜனங்களையும், பக்ஷ்யங்களையும் ஸ்வாமிக்குக் காட்ட வேண்டும். அவனுக்கு வெறுமனே காட்டுவதுதான். “நிவேதயாமி” என்றாலே, “தெரிவிக்கிறேன்”, அதாவது “இந்த ஆஹாரமெல்லாம் உனக்கு முன்னால் வைத்திருப்பதை உனக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுதான் அர்த்தமே தவிர, “உன்னைச் சாப்பிடப் பண்ணுகிறேன்” என்று அர்த்தமில்லை. எங்கேயோ நாமதேவர் மாதிரி ஒருத்தரால்தான் அவனைச் சாப்பிடப் பண்ண முடியும்; நாமெல்லாம் அவனுக்குக் காட்டிவிட்டு, தெரிவிக்கிறதோடு ஸரி. அவன் பார்வை பட்டதாலேயே அந்த நைவேத்யம் பிரஸாதமாகிவிடுகிறது. அதை நாம்தான் சாப்பிடுகிறோம். ஆனதால் சுசி ருசியாய் பல தினுஸு பண்ணி நாம் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று சாஸ்திரமே சொல்வதாக ஆகிறது!

இன்னொரு பக்கம் சாஸ்திரத்திலேயே அநேக உபவாஸங்கள், பழம் மட்டுந்தான் சாப்பிடலாம், ஜலங்கூடக் கூடாது என்றெல்லாம் கண்டிப்பு.

ஒரு பக்கம் வேத கோஷம், ராமாயண நவாஹம், பாகவத ஸப்தாஹம், ஹரிகதை, பஜனை, ஜால்ரா, சிப்ளா மிருதங்கம், “கதயந்தச்ச மாம் நித்யம்” என்று பகவானே சொன்னபடி1 அவன் கதைகளையே ஓயாமல் பேசுவது பாடுவது, இன்னும் மிஞ்சினால் ஆனந்தக் கூத்தே ஆடுவது என்று அமர்ககளம் மேளதாளம், சேகண்டி, அதிர்வேட்டு.

இன்னொரு பக்கம் லோகமே போனாலும் போகட்டுமென்று மௌனமாக மூக்கைப் பிடித்தக் கொண்டு உட்கார்ந்து விடுவது.

ஒரு பக்கம் பலி, கிலி; யஜ்ஞத்தில் பசுவைக் கொடுப்பது.

இன்னொரு பக்கம் ரொம்பப் பிஞ்சாகப் புடலங்காயைப் பறித்துவிட்டால்கூடப் பாபமென்று பிராயசித்தம்.

ஒரு பக்கம் முனி, காட்டேரி என்று ஏகப்பட்டவை. அப்புறம் லௌம்யமாக தேவதா ரூபங்கள். பலவிதமான கலர். நாலு கை, எட்டு கை, பத்துக் கை, பதினெட்டுக் என்று அநேக மூர்த்திகள். மூஞ்சூரிலிருந்து யானை, சிங்கம் வரை வாஹனங்கள்.

இன்னொரு பக்கம் நிர்குணம், நாமம் ரூபம் இல்லை, பகவானுமில்லை, பக்தனுமில்லை என்று வேதாந்தம்.

ஒரே சாஸ்திரங்களே இப்படி ஒன்றுக்கொன்று வித்யாஸமாகச் சொன்னால் என்ன அர்த்தம்?

நமக்குத் தெரிந்த இடத்தில் ஆரம்பித்துத் தெரியாததற்குப் போகவேண்டுமென்று அர்த்தம். அப்படிக் கொண்டு போவதற்காகவே நமக்குத் தெரிந்தது, தெரியாதது என்று ரொம்ப வித்யாஸமுள்ளதாயிருக்கிற இரண்டையும் சொல்கிறது.

நமக்கு என்ன தெரிகிறது? த்வைத ப்ரபஞ்சந்தான். ஏகப்பட்ட ரூப வித்யாஸங்கள், குண வித்யாஸங்கள், மற்ற வித்யாஸங்கள் கொண்டதான த்வைதந்தான் நாம் இருக்கிற நிலை. பலவித ருசிகள், பலவிதக் காட்சிகள், பலவிதக் கேள்விகள், கோபம், தாபம், பிரேமை, சாந்தி, உக்ரம், ஸெளம்யம் என்று பலவித உணர்ச்சி வேகங்கள், குண வித்யாஸங்கள், நாமம் ரூபம் இவைதான் நாம் இருக்கிற நிலையில் தெரிவது.

‘நாம் இருக்கவேண்டிய நிலை என்ன? இப்போது நமக்குத் தெரியாததாக இனிமேல் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?’ என்றால் அதுதான் இந்த த்வைதத் தோற்றத்துக்கெல்லாம் ஆதாரமாயிருக்கிற ஒன்றே ஒன்று – ‘அத்வைதம்’என்று என்னமோ ஒன்று சொல்கிறார்களே அது. அங்கே ருசியில்லை, சப்தமில்லை, ரூபமில்லை, நாமமில்லை, குணமில்லை. ஆனால் இதற்கெல்லாம் காரணமானது இருக்கிறது.

தெரிந்ததையே தெய்வ ஸம்பந்தமுள்ளதாக்கித் தரவேண்டுமென்றுதான் ‘நைவேத்யம் ஷட்ரஸோபதேசம்’, ஹரிகதையும் பஜனை சத்தமும், உக்ர-ஸெளம்ய தேவதைகள், அவற்றுக்கு அநுகுணமான ஹிம்ஸை-அஹிம்ஸைக் கார்யங்கள்.

ஆனால் தெரிந்ததோடு மட்டும் நிற்கப்படாது, தெரியாததையும் கொஞ்சங் கொஞ்சமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றுதான் பட்டினி – ருசி இல்லாத ஸமாசாரம்; மௌனம் – சத்தமில்லை; நிர்குணப் பிரம்மம் – நாம ரூபமில்லாத ஸமாசாரம்.

இப்படி இரண்டு எக்ஸ்ட்ரீம்களைச் சொல்லிவிட்டால் மட்டும் ஸரிப்பட்டு வராது. இரண்டையும் link பண்ணுவதற்கு (இணைப்பதற்கு) ஒன்று செய்யவேண்டும். நாம் வாழ்கிற முறையில் எல்லா aspect-ம் இந்த link -ஐ reflect பண்ணும்படியாக (இந்த இணைப்பைப் பிரதிபலிக்கும்படியாக) வாழவேண்டும்.

இந்த ‘லிங்க்’ என்ன? அதுதான் மிதமாக இருப்பது. மாடரேஷன் என்கிறார்களே, அது. ‘மிதவாதி’கள்என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். “உடனே பூர்ண ஸ்வராஜ்யம் வேண்டுமென்று அவஸரப்படக்கூடாது. அதே ஸமயத்தில் வெள்ளைக்கார ராஜாங்கத்துக்கு இத்தனை ஆதிக்யமும் இருக்கவிடக் கூடாது” என்பது அவர்கள் கட்சி. அவர்கள் சொன்னதில் உள்ள நியாயம் இப்போது ஸ்வதந்திரம் வந்துவிட்டு நமக்கே தெரிகிறது!

எதிலும் மிகையாகப் போகாமல் நடுநிலைமையில் இருப்பதுதான் மிதம். ‘மிதம்’ என்றால் ‘அளக்கப்பட்ட’, ‘அளவறிந்த’என்று அர்த்தம். Measured behaviour என்று சொல்லும்போதும் எதிலும் தீவிரமாகப் பறக்காமல், நிதானமாக, கவனமாகச் செய்வதைத்தானே என்பது measured குறிக்கிறது? Measured -தான் மிதம். ‘ஜ்யாமெட்ரி’ என்கிறோமே அது ‘ஜ்யா-மிதி’ என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தைதான். ‘ஜ்யா’ என்றால் பூமி. ‘மிதி’ என்பது ‘மிதம்’ தான் – அதாவது அளக்கிற விதிமுறை. யஜஞ்த்தில் வேதிகை நிர்மாணம் முலானதுகளுக்கு பூமியை அளப்பதிலிருந்தே ‘ஜ்யாமெட்ரி’ உண்டாயிற்று. ‘க்ஷேத்ரம்’ என்றாலும் பூமிதான். அதனால்தான் இதற்கு ‘க்ஷேத்ர கணிதம்’என்று பெயர் இருக்கிறது.

செய்கிற காரியம், பேசுகிற பேச்சு ஸம்பாதிப்பது, செலவழிப்பது, புத்தியை ஓடவிட்டு நினைப்பது, அலைவது, சாப்பிடுவது, ட்ரெஸ் பண்ணிக் கொள்வது, பொழுது போக்கு எல்லாவற்றிலுமே, ஒவ்வொன்றிலுமே ‘ஓவராக’ப் போய்விடாமல், மனஸ் எதற்கும் வசப்பட்டு விடாதபடி, அளவறிந்து measured -ஆக வைத்துக் கொள்வதுதான் மிதம். எல்லாவற்றிலும் இப்படிப் பண்ணுகிற பழக்கம் வந்துவிட்டால் சித்தம் ஸமநிலையில் பரம சாந்தமாக ஆவவதற்கு உதவும்.

பழக்கம் எப்படி வரும்?ஈஸ்வர க்ருபையில்தான் வரும். ‘அந்த க்ருபை எப்படி வரும்? ‘ என்றால், அதற்காகத் தான், அதை வருவித்துக் கொள்வதற்காகத்தான், இரண்டு ‘எக்ஸ்ட்ரீம்’களாக அநுஷ்டானங்களை சாஸ்த்ரங்கள் ஏற்படுத்திக் கொடுப்பது. நமக்குத் தெரிந்த நிலையில் ஒரு எக்ஸ்ட்ரீமாக பண்டிகை போஜனம், பாட்டு, கூத்து ஆகியவற்றையும், தினுசு தினுசுகளில் அபிருசி கண்ட நம் மனஸுக்கு ஏற்றபடி அநேக தெய்வங்கள் ஆகியவற்றையும் ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே, அதே ஸமயத்தில் இன்னொரு எக்ஸ்ட்ரீமான, உண்ணாத உறங்காத பேசா நிலையையும், நிர்குண ஏக பரமாத்மாவையும் ஞாபகப்படுத்திக்கொண்டேயிருப்பது. இப்படி இரண்டு எக்ஸ்ட்ரீம்களையும் மாறி மாறி அப்யாஸம் செய்கிறதாலேயே, தராசின் இரண்டு தட்டுகளிலும் ‘வெயிட்’ களைப் போடுவதால் அது ஸம நிலைக்கு வருகிற மாதிரி மனஸு ஸமத்துக்கு வந்து, அதோடு வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் மாடரேஷன் வந்துவிடும்.

ஒரு கயிற்றை ‘தொய்யாமல் நில்லு’ என்று வெறுமனே விட்டால் அது நிற்குமா? அதை இரண்டு பக்கம் இரண்டு கழியை நட்டு இரண்டு கோடிக்குமாக இழுத்துக் கட்டினால்தானே ஸம நிலையில் தொய்யாமல் நிற்கும்? அப்படித்தான் தானாக ஸம நிலைக்கு வராத நம் வாழ்க்கை முறையை அப்படி வரப் பண்ணவே இரண்டு கோடியாக இரண்டு வித எக்ஸ்ட்ரீம்களில் அநுஷ்டானங்களைக் கொடுத்துக் கட்டிப் போட்டிருக்கிறது. நேராக மாடரேஷனுக்குப் போகத் தெரியாததால், எக்ஸ்ட்ரீம்களை ஸமயாநுஷ்டானத்தில் கொடுத்து, அதன் வழியாக, நாம் வாழ்கின்ற முறை மாடரேஷனில் போகும்படிப் பண்ணியிருக்கிறது.

இதர மதங்களில் அஹிம்ஸை, அரூப த்யானம் என்று ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரீமை மட்டும் வைக்கிறபோது ஜனங்களால் அந்த பிகு தாங்காமல் fail ஆகிறார்கள். அப்படியில்லாமல் மாறுபட்ட இரண்டு எக்ஸ்ட்ரீம்களை நம் மதம் மாற்றிச் சொல்வதால், cha ஸீரீமீ-ல் ஆசை கொண்ட ஜீவ மனஸ் இஷ்டத்தோடு இப்படி மாற்றி மாற்றிப் பண்ணுகிறது.

ஸமயாநுஷ்டானம் என்று இப்படி ஒவ்வொரு ஸமயத்தில் பண்ணுவதாக மட்டுமில்லாமல், ஸதா கால வாழ்க்கைப்போக்காகவும் நெறியாகவும் பின்பற்ற வேண்டிய அஹிம்ஸை, பிக்ஷுத்வம் முதலானவற்றிலும் நம் மதம் மற்றவற்றைப்போல் ஒரே கண்டிப்பாக எல்லாருக்கும் லக்யத்தை விதிக்காமல் பிரித்துக் கொடுத்திருப்பதைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறேன். இதனாலெல்லாந்தான் நம் மதம், இத்தனை ஆசார சாஸ்த்ரமிருந்த போதிலும், மற்ற எல்லா மதங்களையும்விட flexible -ஆக (நெகிழ்ந்து கொடுப்பதாக) ஆகி, இதற்கு ஒரு சிரஞ்ஜீவித்வம் ஏற்பட்டிருக்கிறது.

ஸமயாநுஷ்டானங்களில் இப்போது நாம் இருக்கிற தசையில் நம் மதம் காட்டும் இரண்டு எக்ஸ்ட்ரீம்களில் பண்டிகைச் சாப்பாடு, பஜனைக் கூத்து, உருவ வழிபாடு இவற்றில் கிடைக்கிற ஆனந்தம் பட்டினியிலும், மௌனத்திலும், ஆத்ம த்யானத்திலும் கிடைப்பதில்லை. ஏதோ ஒரு பார்வையின் பேரிலும், ‘இது பெரியவர்கள் காட்டும் வழியாச்சே’ என்ற நம்பிக்கையின் பேரிலுந்தான் இப்போது நமக்குத் தெரியாதவையாக இருப்பவற்றுக்கான அநுஷ்டானத்தைப் பண்ண முடிகிறது. ஆனாலும் விடாமல் போனால் வாழ்க்கையில் மாடரேஷன் வரும்.

இப்படி மாடரேஷனில் நன்றாக் பழக்கப்பட்டு முதிர்ந்த நிலைமை, கனிந்த நிலைமை உண்டாகிறபோது, இப்போது எது நமக்குத் தெரியாததாக இருக்கிறதோ, இன்னொரு ‘எக்ஸ்ட்ரீம்’ஆகத் தோன்றுகிறதோ, எதை நாம் ஏதோ ஒரு பாவனையின் பேரில்தான் கொஞ்சம் ஊகித்துப் பார்க்க மாத்திரமே முடிகிறதோ, அது – அதாவது பரமாத்வோடு ஏகமாக ஒன்றியிருக்கிற நிலை – எக்ஸ்ட்ரீமாக இல்லாமல், ஸஹஜமான எக்ஸ்பீரியன்ஸாக ஆகிவிடும்.

அளவறிந்து, எதிலும் ஓவராகப் போகாமல், மிதமாக மத்யமாகப் போகிறதைத்தான் பகவான் கீதையில் உபதேசித்திருக்கிறார்:

நாத்யச்நதஸ்து யோகோ (அ)ஸ்தி ந சைகாந்த-மநச்நத: |

ந சாதிஸ்வப்ந-சீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந || (6-16)

யுக்தாஹார-விஹாரஸ்ய யுக்த-சேஷ்டஸ்ய கர்மஸு |

யுக்த-ஸ்வப்நாவாபோதஸ்ய யோகோ பவதி து:கஹா || (6-17)

“பெருந்தீனி தின்கின்றவனுக்கும் யோகம் ஸித்திக்காது; ஒரே பட்டினி கிடக்கிறவனுக்கும் ஸித்திக்காது. எப்போது பார்த்தாலும் தூங்குகிறவனுக்கும் யோகம் வராது; தூக்கமேயில்லாதவனுக்கும் வராது. சாப்பாடு ஸஞ்சாரம், மற்ற காரியம் எல்லாவற்றிலுமே மிதமாக இருக்கிறவனுக்குத்தான் யோகம் ஸித்திக்கும்; ஸம்ஸார துக்கத்தைப் போக்கும்” என்கிறார். மிதமாக இருப்பதற்கு இங்கே பகவான் சொல்லும் வார்த்தை ‘யுக்தம்’ என்பதாகும். ‘எப்படி யுக்தமோ அப்படிப் பண்ணுங்கள்’ என்று நாம் கூடப் பேச்சில் சொல்கிறோம். ‘யுக்தம்’, ‘யோகம்’ என்ற இரண்டு வார்த்தையும் ‘யுஜ்’ என்னும் ஒரே தாதுவிலிருந்து வந்தவைதான். ‘யுஜ்’ என்றால் இணைப்பது. ஜீவாத்மாவைப் பரமாத்மாவோடு இணைப்பது யோகம். அப்படி இணைக்க வழியாக உள்ள மிதமான போக்கே ‘யுக்தம்’.

எக்ஸ்ட்ரீமுக்குப் போவதுதான் மனஸின் நேச்சர். ‘மிதமாயிரு’ என்றால் அதனால் முடிவதில்லை. இதற்காகத் தான் சாஸ்திரங்கள், “இரண்டு எக்ஸ்ட்ரீம்களுக்கு மாறி மாறிப் போ”என்கிறது. “மிதமாகச் சாப்பிடு என்றால் நாக்கு கேட்கமாட்டேன் என்கிறதா? ஸரி, இதோ பண்டிகைகளைக் கொடுக்கிறோம்; இந்த நாட்களில் ஷட்ரஸோபேதமாகச் சாப்பிடு” என்கிறது. ஆனால் இதோடு விடாமல், ஈடுகட்டுகிறதற்கு வ்ரத உபவாஸ தினங்களையும் விதிக்கிறது. இப்படியே சில நாட்களில் “வாய் கொண்ட மட்டும் கத்து, ஆடு, பாடு” என்று விட்டுவிட்டு வேறே சில நாட்களில் “வாயைத் திறக்கவே திறக்காதே” என்று மௌனத்தை அநுஷ்டிக்கச் சொல்கிறது. இந்த எல்லாவற்றையுமே தெய்வ ஸம்பந்தப்படுத்திக் கொடுக்கிறது. பித்ரு கார்யம், பஞ்சாயதனம், வைச்வதேவ பலி, அது இது என்று பலதுகளுக்கு (பலவற்றுக்கு) வழிபாட்டைச் சொல்லும்போதே, ‘காம்பன்ஸேட்’ பண்ண “ப்ரஹ்மைவாஹமஸ்மி”2 என்று மூக்கைப் பிடித்துக் கொள்ளவும் சொல்கிறது.

வாழ்க்கையம்சங்களில் தானாக மிதமாக இருக்க முடியாத மநுஷ்ய ஸ்வபாவததுக்கு இப்படி ஸமயாநுஷ்டானத்தில் இரண்டு எக்ஸ்ட்ரீம்களையும் அப்யாஸம் பண்ணுவதே மிதப்படுத்துவதற்கு வழியாக ஆகிறது. உபவாஸத்தால் விருந்தை ‘பாலன்ஸ்’ பண்ணுவது, மௌனத்தால் உத்ஸாஹக் கூத்தை ‘பாலன்ஸ்’ பண்ணுவது என்றிப்படி சாஸ்திரப் பிரகாரம் ஒரு எக்ஸ்ட்ரீமால் இன்னொன்றை ‘பாலன்ஸ்’ பண்ணுகிற பழக்கத்தால், வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் தராசு ஸமமாக நிற்கிற மிதமான நிலைமை, ‘யுக்த’மான நிலைமை கைவரும். இரண்டு விதத்தில் மிகையாக மாறி மாறிப் பண்ணுவதாலேயே மிதம் வந்துவிடும்!


* இவ்வுரையை தெய்வத்தின் குரல் முதற்பகுதியில் சமூக விஷயங்கள் என்றி பிரிவிலுள்ள கணக்காயிருக்கணும் என்ற உரையுடன் இணைத்துக் கொள்ளலாம்.

1 கீதை 10.9

2 நான் பிரம்மாகவே இருக்கிறேன் என்ற அத்வைத வாக்கியம். ஸந்தியாவந்தனத்தில் இந்த அநுஸந்தானமும் அங்கமாகும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is நான் கற்ற பாடம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  அளவறிந்து செய்தல்
Next