எந்த சக்தியையும், திரவியத்தையும் விரயமாகச் செலவழிக்காமலும், அதே ஸமயம் ஒரேயடியாகப் பூட்டி வைத்துக்கொண்டு விடாமலும், தானும் ஸமூஹமும் பயனடையும்படி அளவறிந்து செலவழிக்கவும், காத்து வைத்துக் கொள்ளவும் வேண்டும். பயன்களில் பெரியதான ஈச்வர ஸாக்ஷாத்காரத்துக்குங்கூட அளவறிந்த இந்தப் போக்கு வழி செய்யும். ஸமநிலைக்கு வரவேண்டும். லெவலுக்கு வரவேண்டும். Water finds its level.ஜீவத்மா லெவலுக்கும வந்தால்தான் பரமாத்ம ஸமுத்திரத்தில் கலக்க முடியும். இதற்கு எதிலும் அளவு, மிதம் வேண்டும்.
அளவறிந்து எதையும் செய்பவரால்தான் பரம ஸத்யத்தை அறிய முடியும் என்பதைத்தான் திருமூலர்,
கணக்கறிந்தார்க்கன்றிக் காணவொண்ணாதது
கணக்கறிந்தார்க்கன்றிக் கைகூடாக் காட்சி (1.316)
என்று சொல்லியிருக்கிறார். அவர் பண்ணின நூலுக்குத் ‘திருமந்திரம்’ என்று பெயர். அதனால் இந்த வார்த்தைகள் மந்திரம் மாதிரியானவையாகும்.
அதிகமாகப் போகாமல் எல்லாவற்றிலும் கணக்காய் இருக்க வேண்டும். பேச்சு, எண்ணம், செய்கை, உணவு, உடை, செலவு எதிலானாலும் வாழ்க்கைக்கு எவ்வளவுதான் அத்யாவசியமோ அதோடு கணக்காய் நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்போது பண்ணுகிறமாதிரி விரயம் செய்யக்கூடாது. கணக்காயிருப்பதுதான் இஹம் பரம் இரண்டுக்கும் நன்மை செய்வது. மனநெறி இல்லாவிட்டால் பரம் எப்படி லபிக்கும்? அந்த மனநெறி, mental discipline வருவதற்கு வாழ்க்கையம்சங்கள் எல்லாவற்றிலும் கணக்காயிருந்து கட்டுப்படுத்திக் கொள்வதே உதவும்.
இப்போதைய நிலையில் ஸமயாநுஷ்டானங்களில் இரண்டு எக்ஸ்ட்ரீம்களிலும் போவதாலேயே இப்படிப்பட்ட அளவு, ‘கணக்காயிருக்கிற’ தன்மை உண்டாகிறது என்று சொன்னேன். ஆரம்ப நிலையில் நம்முடைய மதாநுஷ்டானம், ‘கணக்கு’ இரண்டுமே பக்வமாகாதவையாகத்தான் இருக்கும். ஆனால் நாளாவட்டத்தில் இவை ஒன்றுக்கொன்று போஷித்துக்கொண்டு, ஒன்றை மற்றது பக்வப்படுத்திக்கொண்டு போகும். அப்படிப் பக்வ ஸ்திதிக்குப் போகப்போக கணக்கறிந்து செய்வதே மனஸின் ஸமநிலை என்கிற உயர்ந்த பிரசாந்த ஸ்திதிக்கு கொண்டு விடும். பூர்ண பக்வநிலையிலோ தன்னியல்பாக நாம் செய்கிறதெல்லாமே அளவறிந்து, கணக்காக அமைந்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.