வாஸ்து சாஸ்திரம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஸங்கீதம் ஸாமவேதம் என்கிற மாதிரியே சிற்பம், கட்டிட நிர்மாணம் (sculpture,architecture) என்கிறவை, இவற்றை அங்கமாகக் கொண்ட வாஸ்து சாஸ்த்ரம் ஆகியவையெல்லாம் சேர்ந்து ஒரு உபவேதமென்றும், இது அதர்வ வேதத்துக்கு ஸம்பந்தமுடையதென்றும் சுக்லா என்கிறவர், பஞ்சாபைச் சேர்ந்தவர் (ஸ்ரீமடம் நடத்திய) இளையாத்தங்குடி ஸதஸில் சொன்னார். ப்ருகு மாதிரியான வேதரிஷிகளே வாஸ்து சாஸ்த்ரம் பண்ணாயிருப்பதை அவர் காரணம் காட்டி, மற்ற எந்த உபவேதத்துக்கும் இப்படி வேதரிஷிகளின் நூல் இல்லை என்று சொன்னார்*. வாஸ்து சாஸ்திரம் என்பதுதான் எப்படி நகர நிர்மாணமும், அதிலுள்ள ஆலயம், அரண்மனை, தனி மநுஷ்யனின் வீடு ஆகியவற்றின் நிர்மாணமும் அமைய வேண்டுமென்று சொல்வது. வீடு கட்டும்போது மனை மூஹுர்த்தம் என்று பண்ணும்போது வாஸ்து புருஷனுக்குத்தான் பூஜை பண்ணப்படுகிறது. ஒரு ஊர் அல்லது ஆலயம், அரண்மனை வீடு, மண்டபங்கள், சத்திரம், வித்யாசாலை எதுவானாலும் அதை வாஸ்து புருஷன் என்று ஒரு நராகாரமாக வர்ணித்து அதில் தலைப்பாகம், உடம்பு, கால், கை என்றெல்லாம் அந்தந்தக் கட்டுமானத்திலுள்ள ஸந்நிதிகள், மண்டபங்கள், ரூம்கள் முதலியவற்றை வர்ணித்திருக்கும். வாஸ்து சாஸ்திரப் பிரகாரம் ஒரு ஊரில் கோயில்கள், குடியிருப்புக்கள், பொதுஸ்தலங்கள் முதலியவை அமையாவிட்டாலும், இப்படியே ஒவ்வொரு வீட்டிலும் அதன்படி அறைகள், கூடம், தாழ்வாரம் முதலியவை அமையாவிட்டாலும் துர்பிக்ஷம், வியாதி, சித்தவிகாரம் முதலியன ஏற்படும் என்று சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறது. இப்போது நாம் வாஸ்து சாஸ்த்ரப்படி எதுவும் செய்யாமல் இங்கிலீஷ் ஃபாஷனில் town planning, காலனி, வீட்டு நிர்மாணம் எல்லாம் செய்கிறோம். சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிற அனர்த்தங்களையும் அநுபவித்து வருகிறோம்!

சிற்பக் கலை, கட்டிடக் கலை எல்லாமே வாஸ்து சாஸ்திரத்தில் வந்து விடுகிறது.

ஆனாலும் பொதுவான அபிப்ராயத்தில் அர்த்தசாஸ்திரம்தான் நான்காவதான உபவேதமாக நினைக்கப்படுகிறது.


*உபவேதங்களில் அர்த்தசாஸ்திரத்துக்குப் பதிலாக ஸ்தாபத்யசஸ்த்ர வேதம் என்ற சாஸ்திரத்தைச் சொல்வாருமுண்டு. இது அதர்வ வேதத்திலிருந்து கிளைத்ததாகச் சொல்வர். ஸ்தபதி எனும் கட்டிட, சிற்ப நிர்மாணிகரின் கருவிகளைக் குறித்ததே ‘ஸ்தாபத்யசஸ்த்ர’மாதலால் இதுவே ஸ்ரீ B.N. சுக்லாவின் கூற்றுக்கு அடிப்படை எனத் தோன்றுகிறது. கட்டிடச் சிற்பம் மட்டுமின்றி அனைத்துக் கருவிகளையும் Mechanics பற்றிய என்பதே பொதுவில் ஸ்தாபத்யசஸ்த்ர சாஸ்த்ரமாகக் கொள்ளப்படுகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is 'உப'வும் 'மூல'மும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  உடம்பை பேணுவது எதற்காக?
Next