உடம்பைப் பேணுவது எதற்காக? : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஆயுர்வேதம் என்பது ஆயுஸ் விருத்திக்கு வழி சொல்லும் சாஸ்த்ரம். ஆயுஸ் குறைவது அநேகமாக வியாதியால்தானே? ஆகையினால், வியாதி வராமல் தடுக்கவும், வந்தால் குணப்படுத்தவும் வழி சொல்லும் வைத்ய சாஸ்த்ரமே ஆயுர்வேதம் எனப்படுகிறது.

ஆயுர்வேதம் தீர்க்காயுஸோடும், அப்படி இருக்கிற வரையில் சரீர ஸெளக்யத்தோடும் இருக்கும் வழிகளைச் சொல்லும் வைத்ய சாஸ்த்ரமாகும். அதாவது நம் ஆயுஸை தீர்க்கமாக்கிக் கொள்வதற்கும் சரீரத்துக்கு வரும் வியாதிக் கஷ்டங்களை குறைத்துக் கொள்வதற்கும் மார்க்கத்தைச் சொல்ல இது ஏற்பட்டிருக்கிறது.

எதற்காகச் இப்படிச் செய்ய வேண்டும்? உடம்பைப் பேணி வளர்ப்பானேன்? எவ்வளவு பேணிவைத்துக் கொள்ளப்பார்த்தாலும் அது நிரந்தரமாயிருக்கப் போவதில்லையே? ஒருநாள் அழியத்தானே போகிறது? அழிவது, அழியவேண்டியது, என்ன பண்ணினாலும் அழிவை நிறுத்த முடியாதது, என்றைக்குப் போனால் என்ன? ஞானிகளாக இருப்பவர்கள் இந்த உடம்பு என்றைக்குப் போனாலென்ன என்றுதானே சொல்கிறார்கள்? இது இருக்கிற மட்டும் இந்திரிய இழுப்புத்தான், கர்மாவில் நுழைப்புத்தானென்பதால் இது போகாதா என்றே காத்துக் கொண்டிருந்தவர்களாகத் தானே மஹான்கள் இருந்திருக்கிறார்கள்?

அது இருக்கட்டும். மஹான்களின் கதையும், நிறுத்தி வைக்க முடியாமல் சாவு ஒன்று இருக்கும்போது சரீர ரக்ஷணை எதற்கு என்று நாம் ‘இன்டெலச்சுவலாக’க் கேட்பதும் இருக்கட்டும். நடைமுறையில் என்ன செய்கிறோம்? மஹான்களின் வைராக்ய உணர்ச்சியும், நம் ‘இன்டெலெக்டு’ மா கை கொடுக்கின்றன? நம்முடைய ஸாமானிய உணர்ச்சியின்படிதானே செய்கிறோம்? அப்போது என்ன நினைக்கிறோம்? தேஹத்துக்குக் கொஞ்சம் அஸெளக்யமென்றால்கூட தேஹத்துக்குக் கொஞ்சம் அஸெளக்யமென்றால்கூட அதைத்தானே பெரிதாக நினைத்து ‘ஐயோ, அப்பா’என்கிறோம்? லக்ஷ ரூபாய் லாட்டரி விழுந்த ஸந்தோஷத்தைக்கூட ஒரு வயிற்று வலியோ, ஜலதோஷமோ விரட்டிவிடுகிறதே! இந்த அந்த வரவைவிடப் பெரிசாக நினைக்கிறோம்? உடம்பெல்லாம் அழுகி, ஜீவனோபாயமே இல்லாமல் தெருவிலே நாற்றமடித்துக் கிடக்கிற ஒரு குஷ்டரோகி கூட, ‘போகாதா இந்த உயிர்?” என்று புலம்பிக் கொண்டிருந்தாலும், அந்தப் பக்கம் ஏதாவது ஒரு லாரி, பஸ் ஏதாவது ஓரமாக வந்துவிட்டால், “நல்லது;அரை பட்டுச் சாவோம்” என்று கிடக்கிறானா? எப்படியோ அந்தண்டைதானே புரள்கிறான்? தோஹாத்ம புத்தி என்பது அவ்வளவு ஆழமாக நமக்குள் ஊறியிருக்கிறது! தொண்ணூறு தொண்ணூற்றைந்து வயஸு ஆகி நடைப்பிணமாகக் கிடக்கிறபோதும் மருந்து சாப்பிட்டு மரணத்தை ஒத்திப் போடப் பார்க்கவேண்டும், ஆயுஸை விருத்தி பண்ணிக்கொள்ள வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

இது தன் சரீரத்தை ரக்ஷித்துக் கொள்வது. இன்னொன்று இருக்கிறது. நமக்கு ரொம்பவும் பிரியமாக பதி அல்லது பத்தினி, புத்ரர்கள் இருந்தால், நாம் போனாலும் நமக்கு வேண்டிவர்களான அவர்கள் தீர்க்காயுஸுடன் இருக்கவேண்டுமென்று ஆசைப்படுகிறோம். “நம் கண்முன் அவர்கள் போகப்படாது” என்று வேண்டிக்கொள்கிறோம். அவர்களுக்கு உடம்புக்கு வந்து விட்டால் ராக்கண் முழித்து, எத்தனை வைத்யம் முடியுமோ அத்தனையும் பார்த்து, அதற்காக என்ன செலவானாலும் செய்கிறோம். பாபர் அல்லாவுக்கு வேண்டிக்கொண்டு தன் உயிரைக் கொடுத்தே ஹ§மாயூனை சாவிலிருந்து மீட்டார் என்று படித்திருப்பீர்கள்.

இப்படியாகத் தன்னுடையவும், தனக்கு வேண்டியவர்களுடையவுமான சரீரத்தை ரக்ஷிப்பதும், ஆயுஸை நீடித்துக் காப்பாற்றிக் கொள்ள முயல்வதும் ஸகலப் பிராணிகளுக்கும் ஆழமாக வேரோடிப்போன இயற்கையாயிருக்கிறது. மநுஷ்யன் மட்டுமல்ல; எந்தப் பிராணியுமே, ஒரு சின்ன புழுவும் எறும்புங்கூட ஜீவனை ரக்ஷித்து வைத்துக் கொள்ள எந்தப் பாடும் படத் தயாராயிருக்கிறது.

இயற்கையை முறித்துக் கொண்டுபோய் இசகு பிசகாக்கிக் கொள்ளாமல், இயற்கையை அநுஸரித்தே போய் அதை ஆத்மாவின் வழிக்குக் கொஞ்சம் கொஞ்சமாக வளைத்துக் கொள்ளுவதுதானே நம் ஆன்றோர்கள் நமக்குத் தந்துள்ள ஏற்பாடு? கல்யாணம், குழந்தை குட்டி பெறுவது, உத்யோகம் எல்லாவற்றையும் இயற்கை, நடைமுறை என்ற இரண்டுக்காகவும் ஒப்புக்கொண்டு இவற்றையும் சாஸ்த்ரோக்தமாகப் பண்ணிப் பக்வமாக்குவதுதானே அவர்கள் வகுத்துள்ள வழி? இதற்கேற்கவே வியாதிகளைப் போக்கிக்கொண்டு தீர்க்காயுஸுடன் வாழ்வதற்கான ஆயுர்வேதத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is வாஸ்து சாஸ்திரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  வைத்தியத்திலும் ஆன்மிக லக்ஷ்யம்
Next