ஆயுர்வேதம் ஆயுள் பெறட்டும்! : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இப்போது நம் நிலைமை எப்படி ஹீனமாயிருக்கிறதென்றால், நான் சொல்கிறேனே என்று நீங்கள் இத்தனை பேரும் ஆயுர்வேத வைத்யம் பார்த்துக் கொள்வது என்று ஆரம்பித்தால் இத்தனை பேரையும் ‘ட்ரீட்’பண்ண வைத்தியர்களே கிடைக்கமாட்டார்கள்!’ மெடிகல் டிகிரி’ என்றாலே இங்கிலீஷ் வைத்தியப் படிப்புத்தான் என்று வைத்துப் பாடத் திட்டத்தில் ஆயுர்வேதத்துக்கு இடமே தராமல் நெடுங்காலம் நடந்துவிட்டதுதான் இதற்குக் காரணம். சுமார் ஐம்பது வருஷத்துக்கு முன் நிலைமை கொஞ்சம் மாறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தில் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சி உண்டாயிற்று. அவர்கள் ஒரு பக்கம் காங்கிரஸின் ஸ்வந்திரப் போராட்டத்தை ஆதரிக்காமலிருந்தார்கள்; இன்னொரு பக்கம், ‘எல்லாத் துறைகளிலும் Brahmin domination (பிராம்மணனின் ஆதிக்கம்) ஏற்பட்டு விட்டது; இதைக் குறைக்க வேண்டும்’ என்ற கொள்கையுடையவர்களாக இருந்தார்கள். இப்படியிருந்தாலும் அவர்களிலும் புத்திமான்கள், விஷயங்களைச் சீர்தூக்கிப் பார்த்து நிதானமாகக் காரியம் செய்கிறவர்கள் இருந்தார்கள். அவர்களில் பனகால் ராஜா ஒருத்தர். மாம்பலத்தில் இருக்கிற பார்க் அவர் பேரில் ஏற்பட்டதுதான். (தியாகராஜ நகர் என்று மாம்பலத்தைச் சொல்கிறதுகூட ஜஸ்டிஸ் பார்ட்டியைச் சேர்ந்த பிட்டி தியாகராஜ செட்டி என்பவர் பெயரில்தான்.) பனகல் ராஜா மந்திரியானவுடன் மற்ற விஷயங்கள் ஒரு பக்கமிருந்தாலும், ‘வெள்ளைக்காரனிடமிருந்து ஸ்வதேச ஜனங்களான நம்மிடம் கொஞ்சம் அரசாங்கப் பொறுப்பு வந்திருக்கிறது; எனவே ஸ்வதேசியமாக ஏதாவது பண்ண வேண்டும்’ என்று நினைத்தார். அவர் ஸம்ஸ்க்ருதத்தில் நல்ல படிப்புள்ளவராதலால் நம்முடைய பழைய சாஸ்திரங்களை (சாஸ்திரமென்றால் தர்ம சாஸ்திரமில்லை;பழைய ஸயன்ஸ்கள், கலைகள் ஆகியவை பற்றிய சாஸ்திரங்களைத் தான்) ஆதரிக்க வேண்டுமென்ற அபிப்ராயமுள்ளவராயிருந்தார். நமது தேச ஒளஷதிகள்தான் நமக்கு ஒத்துக்கொள்வதென்றும் இதர முறைகள் விபரீதம் பண்ணுவதென்றும் அவர் அபிப்ராயப்பட்டு, ‘இப்படி ஆயுர்வேதம் க்ஷீணித்து வருகிறதே!’ என்று அதற்கு உயிர் கொடுப்பதற்காக மெட்றாஸில் ஆயுர்வேத வித்யாசாலை ஆரம்பித்தார். இன்னம் சிறிது காலம் அவர் ஆட்சி இருந்திருந்தால் நம்முடைய கணிதம், பௌதிகம், ஜ்யோதிஷம் முதலான சாஸ்திரங்களுக்கு ஏற்றம் கிடைக்கப்பண்ணியிருப்பார். நான் இப்படிச் சொல்வதால் எனக்கு patriotic spirit (தேச விச்வாஸ உணர்ச்சி) இல்லை என்று வேண்டுமானாலும் நினைத்துவிட்டுப் போங்கள். patriotism, ஸ்வதேசியம் என்றே சொல்லிக் கொண்டிருந்தவர்கள் ஆட்சிக்கு வந்தபின் ஸ்வதேச வித்யைகள், அறிவு (அறிவியல்) சாஸ்திரங்களை உயிர்ப்பிக்க என்ன செய்திருக்கிறார்கள்? இங்கிலீஷ்காரர் காலத்தில் இருந்ததைவிட இப்போதுதான் ட்ரெஸ், நடைமுறைகள், out-look என்கிறார்களே அந்த மனோபாவம் ஆகிய எல்லாவற்றிலும் ரொம்பவும் இங்கீலீஷ்காரன் மாதிரியே பண்ணிக்கொண்டு வருகிறார்கள்!ஆயுர்வேதம் ஏதோ ஜஸ்டிஸ் ஆட்சியிலாவது கொஞ்சம் கடாக்ஷம் பெற்று விட்டதால் அதை முன்னுக்குக்கொண்டு வருவதாக ஆமை வேகத்தில் என்னவோ செய்து, அல்லோபதியோடு ஆயுர்வேதத்தையும் சேர்த்து என்று G.C.I.M. பட்டம் கொடுக்கிற வரை கொண்டு வந்திருக்கிறார்கள்*1. ஆனாலும் மற்ற அநேக சின்ன விஷயங்களைத் தடபுடல் படுத்துவது போலன்றி அரை மனஸாகப் பண்ணுவதால் இது ஒன்றும் விசேஷமாகப் பிரசாரமாகவில்லை. ஜனங்களுக்கும் நிஜமான ஸ்வதேசப் பற்று இல்லாததில் பனகால் ராஜா ஸ்வல்பமாக ஆரம்பித்தது, நாமே ராஜாங்க உரிமை பெற்றவுடனே எவ்விதம் பிரகாசமடைந்திருக்க வேண்டுமோ அப்படி ஆகவில்லை. இருந்தாலும் வெகு ஸமீப காலமாக அறிவாளிகளிடையே கொஞ்சம் விழிப்பு ஏற்பட்டிருப்பதால் இப்போது நிலைமை சற்று நல்ல திருப்பமடையலாமென்று தோன்றுகிறது.

மூன்று காரணங்களுக்காக ஆயுர்வேதத்தை ஆதரிக்கலாம். ஒன்று, இதில் அநாசாரம் ரொம்பக் குறைவு. இரண்டு, நம் தேச சீதோஷ்ணம், நம் ஜனங்களின் தேஹவாகு ஆகியவற்றுக்கு என்றே ஏற்பட்டதாதலால் வேண்டாத விளைவுகளை உண்டாக்கமலிருப்பது. மூன்று, செலவும் குறைச்சல் – இது முக்கியமான காரணம். இன்னொன்று கூட: வாய்க்கே ஆரோக்கியமாயிருக்கும். ஓமம், திப்பிலி மாதிரி சரக்குகளுக்கும் அநேக மூலிகைகளுக்கும் ஒரு தனி ருசி, மணம், விளக்கெண்ணெய் மாதிரி வயிற்றைப் புரட்டுவது, நிலவேம்பு மாதிரிக் கசப்பாகக் கசப்பதிலெல்லாங்கூட அநேக அந்நிய பதார்த்தங்களிலிருக்கிற துர்வாடை கிடையாது.

ஆதியில் ரணசிகித்ஸை தெரியாமலிருந்த வெளிதேசங்களுக்கு நம்மிடமிருந்தே அது போயிருக்க, அப்புறம், ‘ஆயுர்வேதத்தில் ரணசிகித்ஸை கூட உண்டா?’ என்று நாமே கேட்கிற அளவுக்குப் போனது போல எல்லாப் பழைய அறிவு சாஸ்திரங்களையும் நாம் கோட்டை விட்டால் ஸ்வதேசி ராஜாங்கம் என்று ஸந்தோஷப்படுவதற்கு எதுவுமில்லாமல் போகும். Tribal Dance -ஐ (ஆதிவாஸிகளின் நடனத்தை) அந்நிய தேசப் பிரமுகர்கள் வரும்போது ஆடிக்காட்டி விட்டால் இதுதான் ஸ்வதேசிய கலாசாரத்தைக் காப்பாற்றிக் கொடுப்பது என்று ஆகியிருக்கிறது!

மெடிகல் ஸயன்யுக்கு உரிய பூர்ண லக்ஷணத்தோடு தேஹத்தின் தன்மை, வியாதிகளின் தன்மை, அவை எப்படி ஏற்படுகின்றன, ஏற்படாமலே எப்படி தடுப்பது, ஏற்பட்டுவிட்டால் அப்புறம் எப்படி குணப்படுத்துவது, மருந்துச் சரக்குகளின் தன்மை என்ன என்றெல்லாம் தீர்க்கமாய் அலசி உண்டான நம் ஆயுர்வேதம் அவசியம் ரக்ஷிக்கப்பட வேண்டியதாகும். தேஹ ரஷையைத் தருகிற அந்த சாஸ்திரத்துக்கே வியாதி பிடித்து மெலிய வைக்ககூடாது! மெடிகல் ஸயன்ஸாகப் பூர்ண ரூபத்தில் இருப்பதோடு மட்டுமின்றி, மற்ற ஸயன்ஸ்களும் இதில் கலந்திருப்பதை உத்தேசித்தும், இத்தனை ஸயன்ஸ்கள் இருந்த போதிலும், ஸயன்ஸ் என்றால் ஸமயாசாரத்துக்கு விரோதமாகத்தான் போக வேண்டுமென்றில்லாமல் நம் ஆசாரத்துக்கு ஏற்றதாகவும் ஆயுர்வேதம் இருப்பதால் அதற்கே ஆயுர் விருத்தியை நாம் உண்டாக்கித் தரவேண்டும்.

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”, “சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும்” என்ற பழமொழிகள் ஆரோக்யமாயிருக்க வேண்டியதன் அவசியத்தைச் சொல்கிறவையே. கிராம வாழ்க்கையின் ஸுகாதாரமான காற்றோட்டமும், எளிமையும் அநுஷ்டானங்களும் போய் நகர வாழ்க்கையின் பலவித நெரிசல்கள் ஏற்பட்டபின் வியாதிகள் அபரிமிதமாகப் பெருகி வருகின்றன. வைத்யத்தோடு ஈஸ்வரனைப் பிரார்த்தித்துத்தான் ஸரி செய்யணும். தெய்வ ஸம்பந்தமான பாராயண நூல்கள் பலவற்றிலும் ‘பலச்ருதி’யில் “ரோகார்த்தீ முச்யதே ரோகாத்*2 என்பது போல ரோக நிவ்ருத்தியை ஒரு பலனாகச் சொல்லியிருப்பதால் மத ரக்ஷணைக்காகவே தேஹ ரக்ஷணையும் நம் நிலையில் அவசியந்தான் என்று தெரிகிறது. நம்முடைய கலாசாரத்தோடு ஒட்டிப்போகிற நம்முடைய பிராசீன வைத்ய சாஸ்திரப்படியே இந்த ரக்ஷணையைப் பெற்று எல்லோரும் ஸெளக்யமாய் வாழவேண்டும்.


*11958-ல் இருந்த நிலையைக் கூறியது.

*2 ‘விஷ்ணு ஸஹஸ்ரநாம’ பலச்ருதி. பலச்ருதி என்பது நூற்பயன்களைக் கூறும் பகுதியாகும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஆயுர்வேதத்தைப் பின்பற்றக் காரணங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஏற்படக் காரணம்
Next