ஆயுர்வேதத்தைப் பின்பற்றக் காரணங்கள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இந்தியாவிலுள்ள நாம் நம் தேசத்திலேயே ஏற்பட்ட ஆயுர்வேத முறைகளைத்தான் பின்பற்ற வேண்டுமென்பதற்கு ஒரு காரணம், அப்போதுதான் கூடியமட்டும் சாஸ்த்ர விரோதமான அநாசாரங்கள் சேராமலிருக்கின்றன என்பது. இன்னொரு காரணமும் உண்டு. அது இயற்கையாக அமைந்திருப்பது. அதாவது இந்தப் பிரபஞ்சத்தை உண்டாக்கி நடத்துகிற ஈஸ்வரனே ஸஹஜமாக ஏற்படுத்தி வைத்திருக்கிற அமைப்புகளைச் சேர்ந்தது. ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமான சீதோஷ்ணமிருக்கிறது. ஒவ்வொரு விதமான பயிர் பச்சைகள் விளைந்து அவற்றை அங்கே உள்ளவர்கள் ஆஹாரம் பண்ணுகிறார்கள். அவற்றை ஒட்டி அவர்களுடைய ஆரோக்யம், வியாதி இரண்டும் ஏற்படுகின்றன. அந்தந்த தேச சீதோஷ்ணமும் அங்கே கிடைக்கிற ஆஹார பதார்த்தங்களுந்தான் ஒவ்வொரு தேசத்தவருக்கும் ‘ஸூட்’ஆகிறது என்பதைப் பார்க்கிறோம் அல்லவா? இப்படியே, அங்கங்கேயும் இந்த சீதோஷ்ணம், ஆஹாரம் முதலியவற்றை அநுஸரித்து அநாரோக்கியத்தைப் போக்கிக் கொள்ளவும் அங்கே உள்ளவர்களுக்கு ஒவ்வொரு வைத்யமுறை தோன்றுமாறு பகவான் புத்தி கொடுக்கிறான்; அந்த வைத்யத்துக்கு வேண்டிய சரக்குகள் அந்தந்த தேசத்தில் கிடைக்கும்படியாகவும் வைத்திருக்கிறான். ஸாத்விகர்களாக வாழ வேண்டிய நம் தேச ஜனங்களுக்கு நம்முடைய சீதோஷ்ணம் ஆஹாரம் முதலியவற்றுக்கு அநுஸரணையாக பச்சிலை, ரஸ வர்க்கம் என்றிப்படி ஸாத்விகமான மருந்துகளாலேயே வியாதி நிவ்ருத்தி ஏற்படுமாறு அவன் ஏற்படுத்தியிருக்கும் ஸஹஜமான அமைப்பிலே இருக்கிறது. ‘கர்ம பூமியிலுள்ளவர்கள் கர்மாநுஷ்டானத்துக்கு முதுகெலும்பாக இருக்கிற தர்மசாஸ்திரத்தை மீறாமலே சரீர ரக்ஷை, வியாதி, நிவ்ருத்தி, ஆயுர்விருத்தி முதலியவற்றைப் பெறட்டும்’ என்றே நம் ரிஷிகளுக்கு ஆயுர்வேதம் ஸ்புரிக்கும்படியாக அநுக்ரஹித்திருக்கிறான். அந்தந்த தேசத்திலுள்ள ஜனங்களின் பக்வநிலைக்கு ஏற்க அவர்களுக்கு தேசாசார, மதாசாரங்களைக் கொடுத்து இவற்றுக்கு அநுஸரணையாகவே வைத்யமுறை முதலியவை அங்கங்கும் தோன்றும்படி செய்திருக்கிறான்.

வைத்யம் மட்டுமில்லை, ‘சில்பம்’ என்று வீடு வாசல் கட்டிக் கொள்கிற முறை, ‘க்ருஷி’என்பதான வியவஸாய முறை எல்லாவற்றிலும் இப்படி ஒவ்வொரு தேசத்துக்கும் ‘ஸூட்’ ஆகிற ஒன்று உண்டு. நாம் வெள்ளைக்கார ஃபாஷனில் வீடு கட்டிக்கொண்டால் நம் அநுஷ்டானங்களையே பண்ண முடியாமல் விட வேண்டியதாகிறது. Japanese method of agriculture பண்ணி நாலு மடங்கு மாசூல் காட்டுவேன் என்று போனால் நம் கையை மீறி அதிவ்ருஷ்டி, அநாவ்ருஷ்டி (பெருமழை அல்லது வறட்சி) என்று ஏற்பட்டு பஞ்ச நிலைமை உண்டாகிறது. நேச்சரை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது; அதுவே ஏற்றத்தாழ்வுகளை பாலன்ஸ் பண்ண விட வேண்டும் என்று அறிவாளிகள் ஒரு பக்கம் சொல்கிறார்கள். இது மெடிகல் ஸயன்ஸ் உள்பட எல்லாவற்றிலும் ஆலோசனைக்குக் கொண்டுவர வேண்டிய விஷயம்.

ஆயுர் வேதத்தின் ப்ரமாண நூலான ‘சரக ஸம்ஹிதை’ யிலேயே இந்த விஷயத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

யஸ்மிந் தேசே ஹி யோ ஜாத:

தஸ்மை தஜ்ஜௌஷதம் ஹிதம்

ஒரு தேசம் என்றால் அதில் பல மநுஷ்யர்கள் உண்டாகிறார்கள். மநுஷ்யர்களைப் போலவே ஒவ்வொரு தேசத்திலும் மூலிகை முதலான மருந்துச் சரக்குகளும் உண்டாகின்றன. ஈஸ்வர நியதியில் இது ஏதோ குருட்டாம்போக்காக நடப்பதல்ல. இந்த தேசத்துக்காரனுக்கு இந்தச் சரக்கால் பண்ணின ஒளஷதம்தான் எடுத்தது என்று இது காட்டுகிறது. இதைத்தான், “எந்த தேசத்தில் ஒருவன் பிறந்திருந்தாலும் அவனுக்கு அங்கேயே உண்டான சரக்குகளால் ஏற்பட்டதுதான் மருந்து” என்று சரகத்தில் சொல்லியிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is பத்தியம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஆயுர்வேதம் ஆயுள் பெறட்டும்
Next