மூவகை ஆயுதங்கள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

சஸ்த்ரம் மூன்று வகைப்படும். முக்தம், அமுக்தம், முக்தாமுக்தம் என்பது அந்த மூன்று. விட்டுப் போவது முக்தம். ‘முச்’ என்ற தாதுவுக்கு விடுதல் என்று அர்த்தம்; அதிலிருந்து வந்தது முக்தம். ஸம்ஸாரத்தை நிரந்தரமாக விட்டுப் போவதுதான் ‘முக்தி’. ‘மோக்ஷம்’ என்பதும் ‘முச்’ என்பதின் இன்னொரு ரூபமான ‘மோச்’ என்பதிலிருந்து derive ஆனதுதான். விடுதல் என்பதைச் சொல்வதாலேயே விடுதலை, வீடு என்ற பெயர்கள் தமிழில் முக்தியைச் சொல்கின்றன. சிப்பியிலிருந்து தெறித்து விடுபடுவதாலேயே ‘முக்தம்’ என்று நவமணிகளில் ஒன்றுக்குப் பேர். முத்து என்கிறோம். முக்தியைத் தமிழ் நூல்களில் முத்தி என்றே சொல்லியிருக்கும். ஆயுதங்களில் கையை விட்டுப் போகிறவை, அதாவது கையிலிருந்து எறிகிறவை முக்தம். கல்லை வீசி அடித்தால் அது முக்தம்தான். பாணங்கள் முக்தமே. அமுக்தம் என்பது கையை விட்டுப் போகாமல் பிடித்துக்கொண்டே அடிப்பது – கத்தி, சூலம், வேல், ஈட்டி இவை இப்படித்தான். ரொம்பவும் உக்ரமான யுத்தத்தில் வேலையும் ஈட்டியையும்கூட அப்படியே தூக்கி எறிந்து தாக்குவதுண்டு. தநுர் பாணங்களில் தநுஸ் எப்போதும் அமுக்தமாகவே இருந்துகொண்டு பாணங்கள் முக்தமாயிருக்கின்றன. பாசம் முதலிய ஆயுதங்கள் உண்டு. பாசம் என்பது நுனியில் சுருக்குப் போட்ட கயிறு. அம்பாள் விக்ரஹங்களிலெல்லாம் பாசம், அங்குசம் என்பதில் இது இடது மேல் கையிலிருக்கும்; பிள்ளையாரின் மேல் பக்க இடக்கையிலும் இருக்கும். இதிலே ஒரு நுனியைக் கையிலே அழுத்தமாக வைத்துக்கொண்டே இன்னொரு நுனியை ரொம்ப தூரத்துக்கு முக்தமாக வீசி சத்ருவின் குரல் வளையில் சுருக்குப் போட்டு இழுத்துவர முடியும். இது முக்தாமுக்தம். சில சக்ரங்கள் பண்ணப்பட்டிருக்கும் ‘டெக்னிக்’கினாலும் அவற்றை ஒருத்தன் எய்கிற ஸாமர்த்யத்தாலும் சத்ருவை ‘அட்டாக்’ பண்ணிவிட்டு, போன டைரக்ஷனிலேயே திரும்பி, எய்தவனின் கைக்கே திரும்பி வந்துவிடும். இதுவும் முக்தாமுக்தம்தான். முதலில் விட்டுவிட்டான்; ஆனால் அப்புறம் கைக்கு வந்து விடுகிறது. Boomerang என்ற ஆயுதம் இப்படித்தான் குறியை அடித்தபின் விட்ட இடத்துக்கே திரும்பிவிடும் என்கிறார்கள்.

மஹா மந்திரங்களை எந்த பாணத்தில் வேண்டுமானாலும் சேர்த்து அஸ்திரமாக்குவது என்றில்லாமல் அதற்கென்றே ஒரு பாணத்தை அஸ்திரமாக அந்த மந்த்ர தேவதையிடமே பெற்ற புராண புருஷர்கள் உண்டு. இவர்கள் இப்படிப்பட்ட திவ்யாஸ்தரத்தைப் பிரயோகம் பண்ணும்போது அது லக்ஷ்யத்தை அடைந்து அடித்த பிறகு திரும்பவும் தங்கள் கைக்கே திரும்பி வருவதற்கும் மந்திர உச்சாரணம் பண்ணி வரவழைத்துக் கொண்டு விடுவார்கள். இல்லாவிட்டால் இன்னொரு தரம் அந்த அஸ்த்ரத்தை ப்ரயோகம் பண்ணுவதற்கு இடமில்லாமல் போய்விடுமல்லவா? விட்ட அஸ்த்ரத்தைத் திரும்ப வாங்கிக் கொள்வதற்கு ‘உபஸம்ஹாரம்’ என்று பெயர். அது தெரியாதவன் திவ்யாஸ்த்ரங்களை விடப்படாது என்று ரூல். அஸ்த்ரத்தின் மஹா வீர்யம் தெரியாமல் ஒருத்தன் விட்டுவிட்டு, அது எதிர்பார்த்ததற்கு மேல் உத்பாதம் பண்ணுகிறதென்றால் அப்போது அவன் அதைத் திரும்ப வாங்கிக் கொண்டுவிட வேண்டும் என்றே லோக க்ஷேமத்தை உத்தேசித்து இப்படி ரூல் செய்திருக்கிறது. தற்காலத்தில்தான் இப்படி தர்மக் கட்டுபாடுகளே இல்லாமல், ‘கண்டத்துக்குக் கண்டம்’ ஏவுவோம். Inter Continental என்று பயங்கரமான அணுசக்தி குண்டுகளைக் கண்டுபிடித்து ஸ்டாக் பண்ணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is தெய்வங்களின் வில்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  படை வகைகள்
Next